தனிப்பிரிவல்ல.. ஆணவக்கொலைகளைத் தடுக்கும் சிறப்பு சட்டமே தீர்வு!
தமிழகத்தில் சேலம் மாவட்டம் மற்றும் மதுரை நகரில் கலப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்தத் தனிப்பிரிவு அமைக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தது கடந்த 2014 ஆகஸ்ட் 1-ஆம் தேதி சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட விமலாதேவி என்னும் இளம்பெண், சாதி ஆதிக்கவாதிகளால் படுகொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட வழக்குதான். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம், சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிப்பிரிவு அமைக்கக்கோரி தமிழக அரசுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. இது ஓரளவிற்கேனும் நிறைவேற ஒன்றரை ஆண்டுகள் பிடித்திருக்கின்றன.
சாதி ஆணவப்படுகொலைகளைத் தடுக்க சிறப்பு சட்டம் உருவாக்கக்கோரி, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் 400 கிமீ தூரம் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது. மேலும், முதல்வரிடமும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் இருந்து பயணிக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், ‘சாதிமறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு மாநிலம் முழுவதும் தனிப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதுதான் நம் கோரிக்கை. மதுரை மற்றும் சேலத்தில் மட்டும்தான் இது அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமே தீர்வா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் இந்த தனிப்பிரிவின் இலவச சேவை எண்ணிற்கு அழைப்பதன் மூலம், அதுவும் புகாராக பதிவாகும். ஒருவேளை இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்படாத பட்சத்தில், இந்தத் தகவல்களின் மூலம் வழக்காக முன்னெடுத்துச் செல்வதற்கும் இது வாய்ப்பு தரும்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/AUGUST/11/Walk front.jpg)
உடுமலைப்பேட்டை சங்கர் விவகாரத்தில் புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததை இந்த இடத்தில் பொருத்திக்கொள்ளுங்கள். இது ஒரு உதாரணம் மட்டுமே. இந்தத் தனிப்படை அமைக்ககும் பரிந்துரை வழங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகியும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட பின்புதான் அவசர அவசரமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு வகையில் தேவையான முன்னெடுப்பு என்றாலும், இதையும் தாண்டி அரசு சாதி ஒழிப்பிற்கான பல முயற்சிகளை எடுக்கவேண்டும். பாடப்புத்தகங்களில் சாதி ஒழிப்பு குறித்த பாடங்கள் இடம்பெற வேண்டும். பெரியார் சாதி ஒழிப்புப் பிரச்சாரங்கள் மேற்கொண்டதைப் போல, தற்போதுள்ள அரசியல் இயக்கத் தலைவர்கள் எதிர்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டும். சாதிமறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுக்கிறார்.
இதுகுறித்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகப் போராடிவரும் எவிடென்ஸ் கதிர், ‘இந்தத் தனிப்பிரிவு அவசரகதியில் நிறுவப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆபத்தென்று வரும் தம்பதியினரை எங்கு தங்க வைப்பார்கள்? துணை ஆணையாளர், ஆதிதிராவிட நலத்துறை செயலாளர், சமூக நலத்துறை அதிகாரி உள்ளிட்டோரின் கண்காணிப்பின் கீழ் இந்தத் தனிப்பிரிவு இயங்கும் என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால், ஆலோசனைக்குழுவோ, நிதிக்குழுவோ, உட்கட்டமைப்போ இதில் கிடையாது. மேலும் விசாரணை அதிகாரியோ, பாதுகாப்பு அதிகாரியோ நியமிக்கப்படவில்லை.
ஏற்கனவே சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எஸ்.சி/எஸ்.டி வழக்குகளைச் சரிபார்க்கும் கமிட்டி, கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்புக் கமிட்டி, இளம் சிறார் நீதிக்குழுமம் தொடர்பான கமிட்டி உள்ளிட்டவையே ஒழுங்காக செயல்படாதபோது, நீதிமன்ற உத்தரவில் உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பிரிவு சரியாக இருக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆணவக்கொலைகளைத் தடுப்பதற்கான சிறப்பு சட்டம் இயற்றப்படுவதே இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். 2011-ஆம் ஆண்டு தேசிய சட்ட ஆணையம் இது தொடர்பான தனி வரைவை மத்திய அரசிடம் கொடுத்தது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/AUGUST/11/Evidence Kadhir1.jpg)
2014-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஆணவக்கொலை தொடர்பான நிலை அறிக்கையை சமர்ப்பிக்கச் சொன்னபோது, 22 மாநிலங்கள் கொடுத்துவிட்ட நிலையிலும் தமிழக அரசு இன்னமும் கொடுக்கவில்லை. 2014 ஜூலை முதல் 2017 ஜூன் வரை 118 சாதிரீதியிலான ஆணவக்கொலைகள் நடந்துள்ளன. இவை வெளியில் தெரிந்தது மட்டுமே.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் 7,000 பெண்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர். இதில் 17% காதல் விவகாரத்தால் ஆனவை. இவை ஆணவத் தற்கொலையாக இருக்கும் வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஓராண்டுக்கு கிட்டத்தட்ட 1,200 தற்கொலைகள் காதல் விவகாரத்தால் நடக்கின்றன. ஓராண்டில் கொலை செய்யப்படும் 800 பெண்களில் 13% பேர் காதல் விவகாரத்தால் கொல்லப்பட்டவர்கள். இந்தப் பெண்களின் சடலங்களை குடும்பக்காரணங்களைச் சொல்லி எரித்துவிடுகின்றனர். இந்தக் குற்றத்திற்கு சந்தேக மரணம் அல்லது காவல்துறைக்கு தெரிவிக்காமல் சடலத்தை எரித்தல் போன்ற காரணங்களுக்கான அரசியலமைப்புச் சட்டம் 174-ன் கீழ் வழக்கு பதியப்படும். இவை சாதாரண குற்றங்களில் சேரும்.
தமிழ்நாட்டில் ஆணவக்கொலைகளில் கொல்லப்படுபவர்களில் 80% பேர் பெண்கள். கடந்த 20 ஆண்டுகளில் தன் சொந்தங்களாலேயே ஆணவப்படுகொலை செய்யப்பட்ட பெண்களின் வழக்குகளில், ஒருவருக்குக் கூட தண்டனை கொடுக்கப்படவில்லை. எல்லா வழக்குகளும் தள்ளுபடி ஆகிவிட்டன. வழக்கும், விசாரணையும் பலவீனமாக இருப்பதையே இது காட்டுகிறது. மேலும், கொலை செய்தவன் ஏதோ ஒருவகையில் அந்தப்பெண்ணின் ரத்த சொந்தமாக இருக்கிறான். இதனால், அரசு அந்த வழக்கை நடத்துகிறது. அரசை சுலபமாக விலைபேசி இந்த வழக்கை சாதகமாக முடித்து விடுகிறார்கள். பல சிக்கல்கள் இதில் இருக்கின்றன’ என்கிறார் ஆதங்கமாக.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/AUGUST/11/Honour Killing.jpg)
‘சாதியை உடைப்பதற்கு உண்மையான தீர்வு கலப்பு மணமே. வேறு எதுவும் சாதியைக் கரைக்க முடியாது’ என சாதியை ஒழிக்கும் வழி என்ற புத்தகத்தில் அம்பேத்கர் சொல்கிறார். இதை வலியுறுத்தி பெரியார் பல அறப்போராட்டங்களை நடத்திக் காட்டினார். ஆணவக் கொலைகளைத் தடுக்க சிறப்புச்சட்டம் இயற்றப்பட்டு, சாதி மறுப்புத் திருமணங்கள் ஊக்குவிக்கப்பட்டால் மட்டுமே, சமூகத்தில் இதுமாதிரியான குற்றங்களில் இருந்து முழுமையான தீர்வு கிடைக்கும்.
- ச.ப.மதிவாணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)