Skip to main content

2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயார்..! சி.ஆர்.சரஸ்வதி பேட்டி..!

Published on 30/09/2020 | Edited on 30/09/2020
ammk party

 

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். தரப்பினரிடையே காரசாரமாக விவாதிக்கப்பட்டதால், ஐந்து மணி நேரத்திற்கு மேலாக செயற்குழுக் கூட்டம் நடந்தது. 

 

அதேநேரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி ராயபேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் மண்டல வாரியாக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. இன்று 3வது நாளாக அவர்களிடம் பொருளாளர் வெற்றிவேல், தலைமை நிலைய செயலாளர் திருச்சி மனோகரன், தேர்தல் பிரிவு செயலாளர் செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

 

இதுகுறித்து அமமுக கொள்கைப்பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி நக்கீரன் இணையதளத்திடம் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்னர் கட்சி கூட்டம், ஆலோசனை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தமிழகம் முழுவதும் சென்றார். இதேபோல் மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். கட்சி உறுப்பினர் அட்டை வழங்கும் பணிகளுக்கு தயாரானோம். அதற்குள் மேலும் உறுப்பினர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பம் கேட்டிருந்தனர். அதனை வழங்கிய நிலையில் கரோனா பரவல் வந்துவிட்டது. கரோனாவால் ஊரடங்கு வந்ததால் கூட்டம் நடத்த வேண்டாம் என தினகரனும் சொல்லிவிட்டார். அதனால் அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. 

 

2021 சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். இதற்காக கடந்த 28ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டல வாரியாக ஆலோசனை நடத்தினோம். அவர்கள் கேட்ட உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் வழங்கப்பட்டது. தேர்தல் வருவதால் தேர்தல் பணிக்குழு, பூத் கமிட்டி ஆலோசனை நடந்தது. இன்றோடு (30.09.2020) அந்த ஆலோசனை முடிந்தது. விரைவில் பொதுச்செயலாளர் தினகரன், தலைமைக்கழக நிர்வாகிகள், மாவட்ட செயலளார்கள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்துவார். 

 

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்சனை எழுந்துள்ளது. சசிகலா விடுதலைக்கு பின்னர்... 

 

அதிமுகவைப் பற்றி சொல்ல விரும்பவில்லை. அன்றைய செயற்குழுவில் இருவரையும் முதலமைச்சராக்கியது சசிகலாதான் என்று சொன்னார்கள், இதைத்தான் நாங்கள் சொன்னோம். சசிகலா விரைவில் விடுதலையாக வேண்டும் என்பது எங்களது பிரார்த்தனை. விடுதலைக்கு பின்னர் அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது அவருக்குத்தான் தெரியும். அதற்கு பிறகுதான் நாங்கள் அதைப்பற்றி பேசுவோம். நாங்கள் இப்போது எங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை, தேர்தல் பணி என செல்கிறோம். 2021 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க அ.ம.மு.க. தயாராக இருக்கிறது என்றார் உறுதியாக.

 

 

Next Story

"அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது"- டிடிவி தினகரன் பேச்சு!

Published on 15/08/2022 | Edited on 15/08/2022

 

"The current situation in ADMK is sad"- tTV Dhinakaran speech!

சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸில் அ.ம.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (15/08/2022) காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

"The current situation in ADMK is sad"- tTV Dhinakaran speech!

அப்போது பேசிய டிடிவி தினகரன், "அ.தி.மு.க.வில் தற்போதுள்ள நிலைமை வருத்தமளிக்கிறது. அ.தி.மு.க. தற்போது அக்மார்க் சுயநலவாதியிடம் உள்ளது. பதவி ஆசை இருக்கலாம்; ஆனால் பதவி வெறி இருக்கக் கூடாது. 90% ஆதரவு இருந்தால் தேர்தலை நடத்த வேண்டியது தானே. அடுத்த ஆண்டு திருச்சியில் அ.ம.மு.க.வின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இரண்டு தேசிய கட்சிகளில் ஒன்றில் நாங்கள் கூட்டணி; அதில் தி.மு.க. இடம்பெறாது. மக்களவைத் தேர்தலில் கூட்டணி குறித்து நான் பார்த்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார். 

 

அ.ம.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Next Story

டிடிவி தினகரனிடம் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை!

Published on 12/04/2022 | Edited on 12/04/2022

 

DTV Dinakaran interrogated for more than 8 hours!

 

சட்ட விரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் அமலாக்கத்துறையினர் 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தி வருகின்றனர்.  

 

இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்தின் அதிகாரி ஒருவருக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில், சட்ட விரோதப் பணப்பரிவர்த்தனைத் தொடர்பாக, டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் இன்று (12/04/2022) பகல் 12.00 மணியளவில்  அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரடியாக ஆஜரானார். அவருடன், இந்த விவகாரத்தில் இடைத்தரகராகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரும், அமலாக்கத்துறையில் ஆஜராக்கப்பட்டு, இருவரையும் ஒன்றாக அமர வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

விசாரணையானது சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே சுகேஷ் சந்திரசேகரிடம் கடந்த இரண்டு நாட்களாக விசாரணை நடைபெற்றது. அதில், சுகேஷ் சந்திரசேகர் தனக்கு டிடிவி தினகரன் ரூபாய் 10 கோடி கொடுத்ததாக விசாரணை அதிகாரியிடம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை முற்றிலுமாக மறுத்துள்ள டிடிவி தினகரன், சுகேஷ் சந்திரசேகர் யார் என்றே தெரியாது என்றும், அவரிடம் நான் எந்தவொரு பணத்தையும் கொடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். 

 

சுகேஷ் சந்திரசேகரிடம் நடத்தப்பட்ட அடுத்தக்கட்ட விசாரணையில் டிடிவி தினகரன் ரூபாய் 50 கோடி கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். தன்னிடம் ரூபாய் 25 கோடியும், தனது மனைவியிடம் ரூபாய் 25 கோடியும் கொடுத்ததாக அவர் கூறினார். 

 

இதன் அடிப்படையில், டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பி விசாரணையானது நடைபெற்று வரும் நிலையில், சுகேஷ் சந்திரசேகர் மாற்றி மாற்றி அளிக்கும் வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் கேள்வி கேட்க வேண்டாம் என்று அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் டிடிவி தினகரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.