Skip to main content

தினகரனை நம்பினோம் திண்டாடுறோம்...!

தவியும் கரன்சியுமாய் பொங்கிப் பெருக்கெடுத்துப் பாய்கின்ற அரசியல் ஆற்றில் உலா நடத்துவதற்கு மண்குதிரையை நம்பி ஏமாந்துவிட்டோமோ என்று மலைத்துப் போய் நிற்கிறார்கள் விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களின் அ.ம.மு.க. நிர்வாகிகள்.
 

ammk


இ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சும் இணைந்த பிறகு, அவர்களை எதிர்த்து ஐம்பெரும் வேளிரையும் இருபெரும் வேந்தரையும், ஆலங்கானத்தில், ஒற்றைப் பகலில் வென்று களம் கொண்ட பாண்டியன் நெடுஞ்செழியனைப் போல ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் + 20 ரூபாய் டோக்கன் துணையுடன் வென்று, தமிழக அரசியல் களத்தில் எழுந்து நின்றார் சசிகலாவின் அக்கா மகன் டி.டி.வி. தினகரன்.

""அடுத்த சில நாட்களில் அரசு கவிழும். அ.தி.மு.க. கோட்டையில் தினகரன் கொடி பறக்கும் என நினைத்தோம். அம்மாவாலும், இன்றைய மா.செ.க்களாலும், ஓரம் கட்டப்பட்ட எங்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று தினகரனை நோக்கி ஓடினோம். கானல்நீரோ என இப்ப கவலைப்படுகிறோம்'' அரியலூர் மாவட்ட அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் புலம்பியதை தொடர்ந்து, அ.ம.மு.க. மற்றும் அதன் தலைவரான தினகரன் பற்றி நிர்வாகிகள் கருத்தறிய களம் இறங்கினோம்.

""ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற இமாலய வெற்றி எங்களை திக்குமுக்காட வைத்துவிட்டது. இனிமே தமிழக அரசியல் வானத்தில் தினகரன்தான் சூரியன்னு நெனைச்சோம். பணம் புழுப்புடுச்சுக் கிடக்கு. கட்சி வளர்ச்சிக்காக வாரிவாரிக் கொடுப்பார். அதைவைத்து நம்ம ஏரியாவுல கட்சியை, எளிதாக வளர்த்துவிடலாம்னு நெனைச்சோம். இப்ப எல்லாம் கரைஞ்சுபோச்சு. இப்ப தினகரன்மீது நம்பிக்கை கொள்வதற்கு ஒண்ணுமே இல்லை. அதான் ஒதுங்கிவிட்டோம்'' அரியலூர் அ.ம.மு.க. எக்ஸ் மா.செ. உடையார்பாளையம் முத்தையன் பின்னால் அணிவகுத்து நின்ற ஒரு நிர்வாகியின் புலம்பல் இது.

அ.ம.மு.க. ஆரம்பமானதும் அரியலூர் மாவட்ட செயலாளராக உடையார்பாளையம் முத்தையனை நியமித்தார் தினகரன். முத்தையனோடு அண்ணா தொழிற்சங்க மா.செ. ஆண்டிமடம் சண்முகம் உள்ளிட்டோரும் ஊர் ஊராகச் சென்று கிளைகளை உருவாக்கினார்கள். ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அதிருப்தியாளர்களுக்கு பதவிகளைக் கொடுத்து ஒன்றிய அளவில் கட்சிக் கூட்டங்களை போட்டு, பிரமிப்பை உண்டாக்கினார்கள். இந்த நிலையில்தான் உடையார்பாளையம் முத்தையனிடம் இருந்த மா.செ. பதவியைப் பிடுங்கி, அரியலூர் எக்ஸ் எம்.எல்.ஏ. மணிவேலிடம் கொடுத்தார் தினகரன். அதோடு நிர்வாகிகள் 100 பேரை பந்தாடினார் தினகரன். தினகரன் மீது நம்பிக்கையிழந்த முன்னாள் சேர்மனும் மா.செ.யுமான உடையார்பாளையம் முத்தையா, அண்ணா தொழிற்சங்க மா.செ. அம்மா சண்முகம், அரியலூர் ந.செ. ஜிம் கண்ணன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் அரசு கொறடா தாமரை ராஜேந்திரன் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர்.
 

ammka

புதிதாக நியமிக்கப்பட்ட மணிவேல், அரியலூருக்கு தினகரனை அழைத்து வந்து பொதுக்கூட்டம் நடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ""உங்கள் பெயரைச் சொல்லி ஏகப்பட்ட வசூல் செய்துவிட்டார் மணிவேல்'' என்று பலரிடம் இருந்து புகார்கள் தினகரனுக்குப் பறந்தன. விழா ரத்து செய்யப்பட்டது.இப்போது மணிவேலையும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ""இல்லையில்லை. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்துள்ளேன். கட்சி அபார வளர்ச்சியை நோக்கிப் போகிறது'' என்கிறார் மணிவேல். ஆனால், குதிரை கரைந்து கொண்டிருக்கிறது என்பதே உண்மை.


விழுப்புரம் மத்திய மா.செ.யாக எக்ஸ் எம்.எல்.ஏ. ஞானமூர்த்தியை நியமித்தார் தினகரன். தினகரனை நம்பி பல லட்சங்களை செலவு செய்த ஞானமூர்த்தியால், தொடர முடியவில்லை. "தனக்கு மா.செ. பதவி வேண்டாம்'' ஒதுங்கிக்கொண்டார் ஞானமூர்த்தி.ஞானமூர்த்திக்குப் பதிலாக திருக்கோயிலூர் எக்ஸ் எம்.எல்.ஏ. சிவராஜை நியமித்தார் தினகரன். இந்த மாவட்டத்திற்கு ஒரு வன்னியர் மா.செ.யாக இருப்பதே சிறந்தது. எனக்கு வேண்டாம்'' என ஏற்க மறுத்த சிவராஜிடம், ""அடுத்த மா.செ.யை நீங்களே நியமிக்க வேண்டும். அதுவரை அந்தப் பொறுப்பில் இருங்கள்'' கட்டாயப்படுத்தியிருக்கிறார்.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு எந்த எதிர்பார்ப்புமின்றி, தினகரன் பின்னே சென்றவர். இவரை விழுப்புரம் தெற்கு மா.செ. ஆக்கினார் தினகரன். பரபரப்பாக செயல்பட்ட பிரபு, அண்ணாசிலைக்கும் எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவிக்கச் சென்றபோது, அ.தி.மு.க.வினரோடு மோதல் ஏற்பட்டு போலீஸ், புகார் வழக்குகள் என ஏகப்பட்ட எதிர்ப்புகளை சந்தித்து, கட்சியை வளர்த்துக்கொண்டிருந்த நிலையில், பிரபுவிடமிருந்த மா.செ. பதவியை பறித்து முன்னாள் எம்.எல்.ஏ. கோமுகிமணியனிடம் ஒப்படைத்தார் தினகரன்.

தினகரனால் நீக்கப்பட்ட ஒவ்வொரு நிர்வாகியும், கையிலிருந்த லட்சங்களைச் செலவு செய்துவிட்டு, கடனாளியாகியுள்ளதாகச் சொல்கிறார்கள்.விழுப்புரம் மாவட்டத்தில் கட்சிப் பதவி பிடுங்கப்பட்ட, வி.ஐ.பி. ஒருவர் நம்மிடம், ""கட்சி நிர்வாகிகளின் நம்பிக்கையை இழந்துவிட்டார் தினகரன். வெகுவிரைவில் இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். அணியோடு தினகரனும் ஐக்கியமானாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒண்ணுமில்லை. அ.ம.மு.க.வை அ.தி.மு.க.வோடு இணைத்துவிட வேண்டும். ஒருங்கிணைந்த அ.தி.மு.க.வுடன்தான் கூட்டணி வைக்கவேண்டும். இல்லையென்றால் பயனில்லை என்று பா.ஜ.க. தலைமை கருதுகிறது. அப்படி இணைந்தால், தினகரன் மட்டுமே பயன் பெறுவார். நம்பிச்சென்ற என்னைப் போன்ற எல்லாரும் தத்தளித்து முழுக வேண்டியதுதான்'' என்றார்.

மொத்தத்தில், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர் என இம்மாவட்டங்களில் தினகரனோடு இணைந்த பெரும்பாலான வி.ஐ.பி.கள், தவறு செய்துவிட்டோமோ என்ற தத்தளிப்பில் இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்