Skip to main content

அடிமேல் அடி... அமித்ஷா?

2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையில் பாஜக வெற்றி பெறுவதற்கு முன் சட்டீஸ்கர், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில சட்டமன்றத் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற பின்னர், தனது மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஷாவை பாஜகவின் தலைவராக கொண்டுவருவதில் வெற்றிபெற்றார். பாஜக தலைவராக பொறுப்பேற்ற அமித் ஷா, இந்தியாவிலிருந்தே காங்கிரஸை துடைத்தெறியப் போவதாக சவால் விடுத்தார். அப்படிச் சொன்னதை நிரூபிக்கும் வகையில் பாஜக வேர்பிடிக்க முடியாத மாநிலங்களில் கூட அந்தந்த மாநிலத்தில் உள்ள கட்சிகளை சிபிஐ, வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றைக் கொண்டு மிரட்டி, பாஜகவுடன் கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார்.

 

amit shahபணம் மற்றும் அதிகார பலத்தைக் கொண்டு அமித் ஷா பல மாநிலங்களில் கூட்டணி அரசு அமைத்தார். இவற்றில் சில மாநிலங்களில் பாஜக ஓரிரண்டு சீட்டுகளை மட்டுமே பெற்றிருந்தது. அந்த மாநிலங்களில் முதல்வர் பதவி இல்லாவிட்டாலும், பாஜக கூட்டணி அரசு என்றே ஊடகங்களில் கூறப்பட்டது. பாஜக இல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகளை விலைக்கு வாங்கியாவது பாஜகவை உருவாக்கும் வேலையில் ஈடுபட்ட அமித் ஷாவின் சாதனைகள் தொடர்ந்து ஊடகங்களால் விளம்பரப்படுத்தப்பட்டன. 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மொத்தமுள்ள இந்திய நிலப்பரப்பில் 71 சதவீதம் அளவுக்கு பாஜகவின் நேரடி மற்றும் கூட்டணி ஆட்சியின் கீழ் வந்தது.


கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 15 பேரை ராஜினாமா செய்ய வைத்த கொடுமையும் நடந்தேறியது. இந்த நடவடிக்கையையும் அமித் ஷாவின் அற்புதம் என்று பெரிதாக்கினர். இந்நிலையில்தான், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் மிஜோரம் ஆகிய 4 மாநிங்களில் பாஜக தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியை மறைக்க காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பை பெரிதாக்கியது. நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்போதே பாகிஸ்தான் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, வட மாநிலங்களில் பாஜக கூடுதல் இடங்களை கைப்பற்றியது. மோடி மீண்டும் பிரதமரானார்.
 

 

amit shah and modi2019 தேர்தலில் பாஜக வெற்றிபெற்ற தொகுதிகள் அனைத்திலும் பதிவான வாக்குகளுக்கும் எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே நிறைய வேறுபாடு இருப்பதாக தேர்தல் ஆணையமே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது. இந்நிலையில்தான், பொருளாதார சீர்குலைவு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்சனைகளுக்கு பதிலளிக்க முடியாத மோடி அரசு, மக்கள் கவனத்தை திசைதிருப்ப மீண்டும் மதவெறியையும் தேசிய வெறியையும் கிளறிவிட முடிவு செய்தது.

பயங்கரவாத தடுப்புச் சட்டத் திருத்தம், பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே இடத்தை கொடுக்கும் தீர்ப்பு, காஷ்மீரை மூன்றாக பிரிக்கும் சட்டம் என்று அடுத்தடுத்து இஸ்லாமியர்களை பாதிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினார் அமித் ஷா. இந்நிலையில்தான் மகாராஸ்டிரா, ஹரியானா மாநிலத் தேர்தல்களிலும் பாஜக கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஸ்டிரா மாநிலத்தில் பாஜகவின் கூட்டணியில் இருந்த சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி அரசை அமைத்தன.


ஜார்கண்ட் மாநிலத்தை எப்படியும் கைப்பற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் தேர்தலை அறிவித்த பாஜக அரசு, அந்த மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கு 5 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையத்தை அறிவிக்கச் செய்தது. மோடியும் அமித் ஷாவும் தீவிரமாக பிரச்சாரம் செய்தும் இப்போது அந்த மாநிலத்திலும் பாஜக தோல்வியைச் சந்தித்துள்ளது. ஜார்கண்ட் தோல்வியைத் தொடர்ந்து, இந்தியாவில் பாஜக ஆளும் நிலப்பரப்பு வெறும் 35 சதவீதமாக குறைந்துள்ளது. இப்போது பாஜகவிடம் உள்ள முக்கியமான மாநிலங்களில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம், குஜராத் மட்டுமே குறிப்பிடத்தகுந்தவை. அமித்ஷாவின் நடவடிக்கைகளுக்கு மக்கள் கொடுக்கும் இந்த அடிமேல் அடி பாஜகவை பதறவைத்திருக்கிறது.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...