Skip to main content

என்னை அதிமுக பொதுச்செயலாளராக்குங்கள்... ops டெல்லி விசிட்டின் பரபரப்பு பின்னணி

Published on 24/07/2019 | Edited on 24/07/2019

 

ஓ.பன்னீர்செல்வம் திடீரென டெல்லிக்கு போனதற்கு காரணம் அவரது மகனை மந்திரியாக்குவதற்கு என்று கூறப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் அமித்ஷா, ஜெ.பி.நட்டா, நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார். பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா மற்றும் தமிழகத்தின் மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமன் ஆகியோரை சந்திக்கும்போது தன்னுடன் யாரையும் துணைக்கு வைத்துக்கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமனை சந்திக்கும்போது மட்டும் கடைசி 15 நிமிடங்கள் தமிழகத்தின் நிதித்துறை செயலாளரான கிருஷ்ணன் உடனிருந்தார். 


  amit shah o panneerselvam



ஆகவே நடப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரின் நிறைவில் வரப்போகும் மந்திரிசபை மாற்றத்தில் மகனை மந்திரியாக்க மட்டும் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு செல்லவில்லை. அதற்கு பதிலாக ஒரு வித்தியாசமான கோரிக்கையை பாஜகவிடம் ஓ.பன்னீர்செல்வம் முன் வைத்திருக்கிறார். ''நான் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து விலகி கொள்கிறேன். என்னை அதிமுகவின் பொதுச்செயலாளராக்குங்கள். இல்லையென்றால் எடப்பாடி பழனிசாமி, சசிகலாவின் துணையோடு கட்சியை கைப்பற்றி விடுவார். அது பாஜகவுக்கு எதிரான கட்சியாக மாறிவிடும்'' என ஓ.பன்னீர்செல்வம் சொல்லியிருக்கிறார். 


  eps



ஓ.பன்னீர்செல்வம் சொன்னதற்கு பாஜக என்ன பதில் சொல்லியிருக்கிறது என்பது இதுவரை தெரியவில்லை. அடுத்து பாஜக, எடப்பாடி பழனிசாமி மீது எடுக்கப்போகும் நடவடிக்கைகள்தான் ஓ.பன்னீர்செல்வம் டெல்லிக்கு சென்றதன் நோக்கம் நிறைவேறியதா? இல்லையா? என்பதை வெளிப்படுத்தும். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தை நன்றாக வரவேற்று மணிக்கணக்கில் அவருடன் தனியாக பாஜக பேசியதில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கைக்கு பச்சை சிக்னல் தரப்பட்டுள்ளது என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர். 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.