Advertisment

பரவுகிறது போராட்ட நெருப்பு! - ஸ்டெர்லைட்டை எதிர்த்து அமெரிக்க நகரங்களில் பேரணி 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையால், தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு பல்வேறு நோய்கள், பாதிப்புகள் ஏற்படுவதாலும், சுற்றுச் சூழல் சீர்கேடு உண்டாவதாலும் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பணியை கைவிடக் கோரியும், ஏற்கனவே இயங்கும் ஆலையை முழுவதுமாக ஆய்வு செய்ய வேண்டுமென்றும் மக்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

Advertisment

தொடர்ந்து 48 நாட்களாக போராடி வரும்குமரெட்டியாபுரம் கிராமமக்கள், ஸ்டெர்லைட் ஆலை கழிவு புகையால் ஒவ்வொரு குடும்பத்திலும் உடல்நல பாதிப்புகள் இருப்பதாகவும் அந்த ஆலையை மூடும் வரைதங்களது போராட்டம் தொடருமென்றும் உறுதியாகக் கூறியுள்ளனர். தூத்துக்குடியில் போராடி வரும் மக்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து கல்லூரி மாணவர்களும்இளைஞர்களும் அரசியல் தலைவர்களும்வந்து தங்கள் ஆதரவை தெரிவிக்கின்றனர்.

இப்படி மக்கள் போராட்டமாக மாறியுள்ள ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்துக்கு, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். அமெரிக்க வாழ் தமிழர்கள், ஒரு படி மேலே சென்று மிகப்பெரிய அமைதிப் பேரணி ஒன்றை ஒருங்கிணைத்துள்ளனர். ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று அமெரிக்காவின்நியூயார்க், வாஷிங்டன், டல்லாஸ், அட்லாண்டா, சிகாகோ, ஹுஸ்டன், பாஸ்டன், மாரிஸ்வில், நெவார்க் உள்ளிட்ட நகரங்களில் இந்த அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.மார்ச் 31 அன்று இவர்களது ஒருங்கிணைப்பில் டெல்லியில் பேரணி நடைபெற்றது. மேலும், வரும் ஏப்ரல் 8 அன்று நியூ ஜெர்சி நகரிலும் கனடா நாட்டில் டொரண்டோ நகரிலும் பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இத்தனை நகரங்களில் இவ்வளவு பெரிய அளவில் பேரணி நடப்பது இதுவே முதல் முறை. தமிழ்நாட்டில் தமிழர்கள் சந்திக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகள் அனைத்துக்கும் தாங்கள் கைகொடுப்பது மட்டுமல்லாமல் களத்திலும் இறங்குவோம் என்று காட்டியிருக்கின்றனர் அமெரிக்க வாழ் தமிழர்கள்.

america rally sterlite

Advertisment

இதற்கு முன், ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராகவும், நீட் தேர்வுக்கு எதிராகவும், ஒகி புயலில் மீனவர் தேடுதல் பணி,நிவாரணம் ஆகியவற்றை வலியுறுத்தியும் இவர்கள் போராடி உள்ளனர். நீட் தேர்வை எதிர்த்து, அப்பொழுது சுஷ்மா சுவராஜ்அமெரிக்கா ஐக்கிய நாடுகள் சபை சந்திப்புக்கு வந்த பொழுது போராடியுள்ளனர். சம்பிரதாயமான போராட்டமாக இல்லாமல், தொடர்ந்து தூத்துக்குடி மக்களுடன் தொடர்பிலிருந்து இங்குள்ள நிலவரத்தைக் கேட்டறிந்து அதற்கேற்ப போராட்டங்களை வடிவமைக்கின்றனர்.

பேரணி ஒருங்கிணைப்பாளார்களில் ஒருவரான துரைக்கண்ணனிடம் நாம் பேசிய போது, "இது, எந்த ஒரு இயக்கமோ, சங்கமோ ஏற்பாடு செய்ததல்ல. உள்ளுணர்வினால், தமிழ் பற்றினால் தன்னெழுச்சியாகக் கூடிய கூட்டம்.ஏனெனில்,தமிழகத்தில் வாழும் எங்கள் உறவுகளுக்கு ஒரு பிரச்சனையென்றால் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நாங்கள் கை கொடுப்போம், எங்களால் முடிந்த பங்களிப்பை செய்வோம். அதை குறிப்பதுதான் இந்தப் பேரணி. சமூக ஊடகங்கள், தொலைபேசி வாயிலாக ஒருங்கிணைத்து அமைதி முறையில் எங்கள் ஆதரவை தூத்துக்குடி மக்களுக்கு தெரிவிக்கவுள்ளோம். இதன் தொடர்ச்சியாக பல நிகழ்வுகளை இங்கும் தமிழ்நாட்டிலும் நடத்துவோம்.மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்" என்று கூறினார்.

neet protest in USA

மேலும், www.facebook.com/pg/bansterlitenrisupport/eventsஎன்ற ஃபேஸ்புக் பக்கத்தின் வழியாகவும்#BanSterlite #SterliteProtest#StandForThoothukudi ஆகிய ட்விட்டர் ஹேஷ் டேக்குகள் வழியாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஒருங்கிணைக்கிறார்கள் இவர்கள். எத்தனையாயிரம் மைல்கள் தாண்டியிருந்தாலும் ரத்தத்தில் தமிழுணர்வும், தமிழ் மக்கள் மீதான பாசமும் குறையாமல் களமிறங்கியிருக்கிறார்கள் அமெரிக்கா வாழ் தமிழர்கள்.

America Sterlite plant sterlite protest usa
இதையும் படியுங்கள்
Subscribe