Skip to main content

அமெரிக்காவில் களைக்கட்டிய பொங்கல் விழா... விளையாட்டு போட்டியின்  பரிசுத் தொகையை பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்காக வழங்கிய வீரர்கள்!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் மாநகரில், ஃப்ரிஸ்கோ கொமெரிக்காவில் (Frisco Comerica), மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில், 9000- க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்ற பொங்கல் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. "வெல்லம் தந்த தீஞ்சுவையினும் பெருஞ்சுவை இம்மக்கள் வெள்ளம் தந்தது என்பது மிகையில்லை". 


தை திருநாளை தமிழகம் மட்டுமின்றி தமிழர்கள் வாழும் அத்தனை நாடுகளிலும் கோலாகலமாக கொண்டியுள்ளனர். அதிலும் அமெரிக்காவில் தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடுவதைப் போல கால்நடைகளுடனும், கரும்புடனும் மேடை அருகில் பொங்கல் வைத்தும் கொண்டாடப்பட்டது. விழாவில் தமிழர்கள் தங்களின் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அனைத்து குடும்பங்களுக்கும் 1500 முழுக்கரும்புகள் வழங்கப்பட்டது.
 

பொங்கல் கொண்டாட்டத்தை நினைவில் கொள்ளும் விதமாக மாட்டு வண்டி, குடில் மற்றும் கரும்புடன் கூடிய அலங்கார புகைப்பட நிலையமும் அமைக்கப்பட்டிருந்தது. சங்க உறுப்பினர்களுக்கு இலவசமாக குடும்ப புகைப்படமும் எடுத்து பகிரப்பட்டது.

america tamil peoples celebrate the pongal festival


விழாவில் முக்கிய விருந்தினராக ஃப்ரிஸ்கோ (Frisco) நகர மேயர் ஜெஃப் செனய் (Jeff Cheney), தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தவர், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்குத் தாம் என்றும் நண்பனாக இருந்து, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான நல்லுறவு வளர்க்க உறுதுணையாக இருப்பேன் என்று உறுதியளித்தார். அத்துடன் ஜனவரி 18-ந் தேதியை உலக கபடி தினமாக அறிவித்து, அரசு ரீதியிலான பொது ஆணையை அதிகாரப் பூர்வமாக வெளியிட்டார்.


விழாவில் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் கலந்துகொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும், குழந்தைகளுக்கான பேச்சுப் போட்டி, குழந்தைகள் பங்குபெற்ற சதுரங்கப் போட்டி, கயிறு இழுத்தல் மற்றும் உறியடித்தல் போன்ற விளையாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. குழந்தைகளின் படைப்புகள் புத்தகமாகத் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டது. அனைத்து மேடை நிகழ்ச்சிகளையும் அமெரிக்க வாழ் தமிழர்களின் குழந்தைகள் தமிழிலேயே தொகுத்து வழங்கினார்கள். மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்க இணைய வானொலித் தொகுப்பாளர்கள், பிற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியதுடன் தங்கள் வானொலி நிகழ்ச்சிகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்க்க முன்னெடுத்தனர்.

america tamil peoples celebrate the pongal festival


டாலஸ் மாநகரில் உள்ள அனைத்து தமிழ்ப் பள்ளிகள் மற்றும் புறநகர் பகுதி வாழ் தமிழ் மக்கள் பிரதிநிதிகளின் அணிவகுப்பும், டாலஸ் நகரில் உள்ள பிற தமிழ்த் தொண்டு நிறுவனங்களும், வெவ்வேறு அமைப்பு சார் அன்பர்களும் கலந்துகொண்டதும், தமிழ்நாடு பவுன்டேசன் செய்து வரும் அளப்பரிய பணிகளின் தொகுத்து வழங்கலும் இவ்விழாவிற்கு மேலும் அணி சேர்த்தது. 


டாலஸ் மாநகரைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளிலிருந்தும், பிற நகரங்களிலிருந்தும் கபடிக் குழுக்கள், அமெரிக்காவில் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட கபடிப் போட்டியில் கலந்து கொண்டனர். ஆண்களின் கபடிப் போட்டிக்கான தொடக்க ஆட்டங்கள் பல அணிகளுக்கு இடையே நிறைவேறியது. பொங்கல் கொண்டாட்டத்தின் உச்சக்கட்டமாக, ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி இறுதிச் சுற்று, அனைத்துப் பார்வையாளர்களின் முன்னிலையில் நடந்தேறியது. 

america tamil peoples celebrate the pongal festival


பெண்கள் மற்றும் ஆண்கள் கபடிப் போட்டிக்கு முதல் பரிசாக தலா 1000 அமெரிக்க டாலர்களும், இரண்டாம் பரிசாக தலா 500 அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டது. இதில் ஆண்கள் கபடிப் போட்டியில் முதலிடம் வென்ற இர்விங் தமிழ் தலைவாஸ் அணியும், இரண்டாம் இடம் வென்ற ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் அணியும் தங்களின் பரிசுத் தொகையை ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க அன்பளிப்பாக வழங்கி பெருமைப்படத்தினார்கள்.

இந்நிகழ்வு, அமெரிக்காவின் பிற மாகாணத்தாருக்கும், பிற வெளிநாட்டுத் தமிழ்க் குழுக்களும் இது பெரும் முன்னுதாரணமாக இருந்து இது போன்ற கபடிப் போட்டிகளை ஆங்காங்கே நடத்தி, உள்ளூர் அரசு ஆளுமைகளின் மூலம் தகுந்த ஆதரவைப் பெற்று, இந்த கபடி விளையாட்டை உலக அளவிலான ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறச் செய்ய முன்னெடுக்குமாறு, அனைத்து தமிழர்களின் சார்பாக மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச்சங்கம் கோரிக்கையும் முன்வைத்தனர். 

america tamil peoples celebrate the pongal festival


அமெரிக்காவில் முதன்முறையாக, மிகப்பிரம்மாண்டமாக 250- க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் இணைந்து, கண்டாங்கி சேலை கட்டி, கும்மிப்பாடலுக்கு ஆடியது மக்களின் கண்களுக்கு விருந்தாகி மனங்களுக்கு மருந்தாகி பார்வையாளர்களின் ஒருங்கிணைந்த பேராதரவைப் பெற்றது. ஐந்து வெவ்வேறு இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அரங்கத்தில் ஒரு சேர ஆடியதன் வியப்பு விரைவில் அகலவில்லை. இதன் இறுதியில் அரங்கில் உள்ள அனைத்துப் பெண்களும், குழந்தைகளும் களத்தில் இறங்கிக் கும்மியடித்து ஆடியது கண்கொள்ளாக் காட்சியாக அரங்கத்தை ஆர்ப்பரித்தது.


கலைமாமணி பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில், "மக்கள் அதிகம் மகிழ்வாக இருப்பது- வீட்டிலா? வெளியிலா?" எனும் தலைப்பில், நகைச்சுவையும் கருத்தாழமும் மிகுந்த பட்டிமன்றமும், விழாவின் இறுதியில் பாடகர் தீபக் அவர்களின் பாடல் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.

america tamil peoples celebrate the pongal festival


திரைகடல் ஓடிவந்து திரவியம் தேடிய அமெரிக்க வாழ் தமிழ் வள்ளல்களும், தொழிலதிபர்களும், விளம்பரதாரர்களும் தம் இனம் மகிழ, பெரும் பொருளாதார உதவிகளை வழங்கியும், நிகழ்ச்சியில் தம் குடும்பத்தாருடன் கலந்துகொண்டும் சிறப்பித்தனர். வரும் ஜூலை மாதம் நடக்கவிருக்கும் ஃபெட்னா விழா குறித்த அறிவிப்பும், ஹூஸ்டன் தமிழ் இருக்கை அமைப்பதற்கு ஆதரவு கோருதலும், இந்து நல உதவிகள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் இவ்விழாவில் இடம் பெற்றது.

america tamil peoples celebrate the pongal festival


இவ்விழாவானது மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தற்போதைய தலைவர்  அருண்குமார், செயலாளர் சக்தி குமார் மற்றும் பொருளாளர் சதீஷ் அவர்களின் தலைமையில், சங்கத்தின் வளர்ச்சிக் குழு உறுப்பினர்களின் வழிகாட்டுதலில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் செயல்பாடுகளில் குறைவில்லா நிறைவான நிகழ்வாக இந்தப் பொங்கல் கொண்டாட்டம் சிறப்பாக நிறைவு பெற்றது.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்