Skip to main content

காந்தியை மக்கள் மகாத்மாவாகப் பார்த்தார்கள், நான் மனிதனாகப் பார்த்தேன்! - அம்பேத்கரின் அதிரடி பேட்டி  

Published on 06/12/2018 | Edited on 14/04/2021

காந்தியும் அம்பேத்கரும் தேசத்தின் விடுதலைக்காக உழைத்தவர்கள். என்றாலும் காந்தி எதிர்பார்த்த விடுதலை வேறு, அம்பேத்கர் எதிர்பார்த்த விடுதலை வேறு. அம்பேத்கர் காந்தியை எவ்வாறு பார்த்திருக்கிறார் என்பதை அவரது பேட்டி ஒன்று நமக்கு உணர்த்துகிறது. 1955ஆம் ஆண்டு, டாக்டர்.பீமாராவ் அம்பேத்கர் பிபிசி ரேடியோவின் ஃபிரான்சிஸ் வாட்சனுக்குக் கொடுத்த பேட்டியில் காந்தியுடன் இணைந்து பணியாற்றியது பற்றியும், காந்தியைப் பற்றியும் அம்பேத்கரிடம் இப்பேட்டியில் சில கேள்விகள் கேட்கப்பட்டன. அவற்றிற்கு அழுத்தமாகவும் தைரியமாகவும் அம்பேத்கர் கூறிய கருத்துகள் சில... 
 

ambedkar



காந்தியுடனான உங்கள் சந்திப்புகள்...

நான் முதன் முதலில் காந்தியை பார்த்தது, என்னுடைய நண்பர் ஒருவரின் மூலமாக. என்னை பார்க்க எனக்குக் கடிதம் எழுதினார். அதன் பின்னர் அவரை நேரில் சென்று சந்தித்தேன். 1929 ஆண்டில், முதல் வட்டமேசை மாநாட்டுக்கு செல்வதற்கு முன் நடந்த சந்திப்பு அது. அடுத்து அவரைப் பார்த்தது, இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் தான். முதல் வட்டமேசை மாநாட்டுக்கு அவர் வரவில்லை. அடுத்து மூன்றாவது முறையாக அவரை சந்தித்தது, பூனா பாக்ட் ஒப்பந்தத்தை ஏற்று கையெழுத்திடுவதற்காக. அவரை சந்திக்க சிறைக்கு சென்றேன். இந்த மூன்று முறை தான் அவரை பார்த்திருக்கிறேன். நான் அவரை சந்தித்தபோதெல்லாம் அவருக்கு எதிர் கருத்து உடையவனாகவும் அவரை ஒரு மனிதனாகவும் சந்தித்ததாலோ என்னவோ அவரது புற, அக அழகு இரண்டுமே எனக்கு நன்கு தெரிந்துவிட்டது. அவரைப் பார்க்க வரும் பக்தர்களுக்கு அவரது புற தோற்றம் மட்டுமே தெரிகிறது. மஹாத்மா என்கிற பிம்பத்துடனே இருக்கிறார். 

 

2nd round table conference

இரண்டாம் வட்டமேசை மாநாடு

 

உலகமே அவரது கொள்கைகளை ஏற்றுப் பாராட்டுகிறார்களே?

உள்நாட்டைத்தாண்டி வெளிநாடுகளிலும் காந்தியின் கொள்கைகளை பின்பற்றுவதில் ஆர்வமாக இருக்கின்றனர். அது எனக்கு மிகவும் ஆச்சரியம் அளிக்கிறது. அதிலும் குறிப்பாக மேற்கத்திய நாடுகள். ஆனால், காந்தியின் கொள்கைகள், அவருடைய காலம் எல்லாமே இந்திய மக்கள் மனதில் இருந்து மறக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. அதை மறக்காமல் இருக்க வேண்டும் என்று தான் காங்கிரஸ் கட்சி அவரது பிறந்தநாளுக்கு விடுமுறை, இறந்தநாளுக்கு வருத்தம் என்று அவரை ஒரு கொண்டாட்டமாக்கி வருகின்றனர். மக்களின் மனது புத்துயிர் பெற்றுக்கொண்டே இருக்கும். செயற்கையாக கொடுக்கப்படும் சுவாசமுறையின் மூலம் காந்தியை மறக்காது வைக்கின்றனர். இந்தியாவின் வரலாற்றில் அவர் ஒரு அத்தியாயம் மட்டுமே, புது வரலாறை எழுதியவர் அல்ல. 

இந்தியாவின் அடிப்படைகளை மாற்றியவர் அல்லவா காந்தி?

இல்லை இல்லவே இல்லை, அவர் எப்போதுமே இரட்டை நிலை  வைத்துக் கொண்டிருந்தவர். அது அவர் வைத்திருந்த பத்திரிகைகளிலேயே தெரியும். ஆங்கிலத்தில் 'ஹரிஜன்' என்றும் 'யங் இந்தியா' என்றும் இரு பத்திரிகைகள் நடத்தி வந்தார். அவரது தாய் மொழியான குஜராத்தியில் ஒரு பத்திரிகை வைத்திருந்தார். ஆங்கில பத்திரிகையில் மட்டும் அவர் தன்னை சாதிக்கு எதிர்ப்பானவர் போன்றும், தீண்டாமையை எதிர்த்தவர் போன்றும் அதைப் படிக்கும் மக்களுக்கு தெரியவைப்பார். அந்த குஜராத்தி பத்திரிகையை படித்தால் அவர் ஒரு ஆச்சாரமான ஹிந்து மதக்காரர் என்பது புரியும். ஹிந்து மதம் கற்பிக்கும் வர்ணாஸ்ரமத்தை ஏற்பவர் என்றும் புரியும். அவரது இரண்டு பத்திரிகைகளையும் ஆராய வேண்டும். மேற்குலக மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது அதீத நம்பிக்கை உண்டு, இவரை அவர்கள் ஆங்கில பத்திரிகைகளின் மூலமாகத்  தெரிந்துகொள்ளும் போது ஒரு ஜனநாயக மனிதராகவே அறியப்படுகிறார். 

 

gandhi ambedkar



அப்போ உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட மக்களின் கட்டமைப்பை பற்றியன அவரது எண்ணம் தான் என்ன?

காந்தி தீண்டாமையை எதிர்க்கிறார். ஆனால், அது மட்டுமே போதும் என்று நினைக்கிறார். ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று, தீண்டாமை இருக்கக்கூடாது. மற்றோன்று சமூக உயர்வு கொடுங்கள், அப்போதுதான் எங்களால் வளர்ந்துகாட்ட முடியும். நாங்கள் 2000 வருடங்களாக தீண்டாமை கொண்டே வளர்க்கப்படுகிறோம். யாருக்கும் அதனை பற்றிய கவலையில்லை. எங்களுக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை, விவசாயம் செய்ய நிலம் இல்லை. இனியாவது உயர்ந்த வேலைகளுக்கு எல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் செல்லவேண்டும். இதனால் அவர்களின் கண்ணியம் மட்டும் காப்பாற்ற படப்போவதில்லை, அவர்களின் சமூகத்தையும் சேர்த்து காப்பாற்றிக்கொள்ள முடியும். இந்த அனைத்தையும் காந்தி எதிர்க்கிறார். 

காந்தி, தாழ்த்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் செல்வது போன்ற வெகு அடிப்படை விஷயங்களை தான் செய்தார். கோவிலுக்குள் செல்வதைப் பற்றி யாருக்குக் கவலை? அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை. அதைத் தாண்டி இந்த மக்களின் உயர்வுக்கு அவர் எந்த திட்டமும் வைத்திருந்ததாக நான் நினைக்கவில்லை. ஒரு காலத்தில் ரயிலில் கூட தீண்டாமை பார்த்து தாழ்த்தப்பட்டவர்களை ஏற்றாமல் இருந்தார்கள். இப்பொழுது ஏற்றுகிறார்கள். ஆனால், மக்கள் உயர்வுக்கு அது போதாது.
 

nehru with gandhi



காந்தி ஆச்சாரமான ஒரு ஹிந்து என்று சொல்கிறீர்களா ?

ஆமாம், அவர் ஒரு ஆச்சாரமான ஹிந்து தான். அவர் பேசும் இந்த தீண்டாமை ஒழிப்பு எல்லாம், அது காங்கிரஸ் கட்சியில் வளர்ந்துகிடப்பதால் மட்டுமே. இவரால் தீண்டாமை என்பது ஒழிக்கப்படாது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி.        

காந்தியின் பங்கு இல்லாமல் சுதந்திரம் வந்திருக்கும் என்று நினைக்கிறீர்களா

கண்டிப்பாக, மெதுவாக நடந்திருக்கும். ஆனால், நன்றாக நடந்திருக்கும். ஒவ்வொரு மாகாணமாக, பகுதியாக சுதந்திரம் வந்திருந்தால் அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்குமான விடுதலையாக அது இருந்திருக்கும். இப்பொழுது சுதந்திரம் ஒரு வெள்ளம் போல வந்துவிட்டது. இதில் முழுமையில்லை. இப்பொழுதும் இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க நேதாஜி மிக முக்கிய காரணம். அட்லீ ஒத்துக் கொண்டிருக்கிறார், 'பிரிட்டிஷுக்கு நேதாஜி ஒரு மிகப்பெரிய சவால்' என்று. 

 இப்படி செல்கிறது அந்தப் பேட்டி. 

அவர்கள் ஒருவருக்கொருவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், நமக்கு ஒருவர் மகாத்மா, இன்னொருவர் பாபா சாகேப். ஏனெனில், அவர்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் அனைத்துமே மக்கள் நலன் குறித்ததே. அதே மக்கள் நலனுக்காக அவர்கள் ஒன்றாகவும் நின்றுள்ளார்கள். ஆனால், இன்று நாம் கொண்டிருக்கும் தலைவர்களின் கருத்து வேறுபாடுகளும் கருத்தொற்றுமைகளும் அவரவர் சுயநலத்துக்காக இருப்பதே நம் நாட்டின் துரதிருஷ்டம்.  

நன்றி : பிபிசி                   

Next Story

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி காங்கிரஸ் சார்பில் மரியாதை (படங்கள்)

Published on 30/01/2024 | Edited on 30/01/2024

 

 

மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி இன்று (30-01-24) சென்னை சத்தியமூர்த்தி பவனில் மகாத்மா காந்தி உருவப்படத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி மலர் தூவி மரியாதை செய்தார். இதனையடுத்து அங்கு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. 

Next Story

திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
Acceptance of religious harmony pledge on behalf of DMK

நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 77வது நினைவு தினம் இன்று (30.01.2024) நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி டெல்லியில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மத நல்லிணக்க உறுதிமொழிகளும் ஏற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம் தென்னரசு, கீதா ஜீவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்தனர். அதே போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.

முன்னதாக கடந்த 28 ஆம் தேதி தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிவிப்பில், ஜனவரி 30 ஆம் தேதி மத நல்லிணக்க உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும். அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மத நல்லிணக்க உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். உறுதிமொழி ஏற்பில் அனைத்து மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற தமிழ்நாட்டின் மாண்பை இந்திய ஒன்றியத்திற்கு வெளிப்படுத்துவோம் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.