Advertisment

அரசுப் பள்ளி ஆசிரியர் செய்த வியக்க வைக்கும் மாற்றம்! 

The amazing change made by the government school teacher!

Advertisment

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள அரசு பள்ளியில் பணி செய்யும் ஆசிரியர் செங்குட்டுவன் கடந்த 14 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் பள்ளி சென்றுள்ளார்.

ஜெயங்கொண்டம் அருகே புதுச்சாவடி ஊராட்சியில் உள்ள அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செங்குட்டுவன் (வயது 56). இவர், கடந்த 17 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்து வருகிறார். இவர் கடந்த 14 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளார். இதன் மூலம் பள்ளி வருகை பதிவேட்டின் படி100 சதவீதம் வருகை புரிந்துள்ளார். பள்ளி மாணவர்களின் நலனை கருதி சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களிலும் பள்ளிக்கு வந்து மாணவ, மாணவிகளுக்கு தனிப்பட்ட முறையில் பாடம் நடத்தி வருகிறார்.

செங்குட்டுவன் அறிவியல் ஆசிரியர் என்பதால், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்காக அந்த நடுநிலைப்பள்ளியில் தனியாக ஓர் அறிவியல் ஆய்வகம் அமைத்துள்ளார். இது மாணவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி பெற உதவிகரமாக இருந்து வருகிறது. மேலும், பள்ளி வளாகத்தில் மூலிகை மற்றும் காய்கறித்தோட்டம் அமைத்துள்ளார். இதில் விளையும் காய்கறிகள் மற்றும் கீரைகளை பள்ளியின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்திற்கு வழங்கி வருகிறார்.

Advertisment

இவரிடம் பயின்ற 5 மாவட்டங்களைச் சேர்ந்த 17 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து 50 மாணவர்கள் பரிசுகள் மற்றும் பாராட்டுகளைப்பெற்றுள்ளனர். தனது மாணவர்களை 2 முறை டாக்டர் அப்துல்கலாம் மற்றும் இஸ்ரோ, நாசா, தேசிய அளவிலான இயற்பியல் விஞ்ஞானிகளுடன் உரையாடவும் செய்துள்ளார். அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் தங்கப் பதக்கம், அறிவியல் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்து தேசிய அளவில் குழந்தை விஞ்ஞானி விருது ஆகியவற்றையும் இவரிடம் படிக்கும் மாணவர்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதுமட்டுமல்ல பேச்சு, கட்டுரை, ஓவியம், தடகள போட்டிகள், வினாடி-வினா போட்டிகள், நாடகம், நாட்டியம், சதுரங்கம், யோகா, தேசிய திறனாய்வு தேர்வுகள், துளிர் திறனாய்வு தேர்வுகள் என மாணவர்களின் பலவிதமான திறமையை வெளிப்படுத்தும் அனைத்து போட்டிகளிலும் மாணவர்களை கலந்து கொள்ள வழி செய்து அவர்கள் பல விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, தமிழக அமைச்சர்கள், தமிழக கவர்னர், கல்வித்துறை முதன்மை செயலர்கள் ஆகியோர்களிடம் இவரது பள்ளி மாணவர்கள் நேரில் சென்று பாராட்டும், பரிசுகளும் பெற்றுள்ளனர்.

சர்வதேச அறிவியல் திருவிழாவுக்கு சென்று தேசிய அளவில் மாணவர்களை பரிசு பெற செய்துள்ளார். ஆசிரியர் செங்குட்டுவனிடம் பயின்ற மாணவர்கள் குழந்தை விஞ்ஞானி, மாணவன் புரட்சியாளர், மாணவ மணி விருது, நாளைய கலாம் விருது, வருங்கால பசுமை காவலர் விருது, மிளிரும் மாணவர் விருது, அப்துல்கலாம் விருது ஆகியவற்றை பெற்றுள்ளனர். வானவில் மன்ற அறிவியல் கண்காட்சி போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்று சில மாணவர்கள் அயல்நாட்டு கல்வி பயணம் சென்று சிறப்பித்து வந்துள்ளனர்.

தமிழக அரசு மற்றும் கல்வித்துறை, இஸ்ரோ விஞ்ஞானி, கல்வி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சித்துறை, லயன்ஸ் ரோட்டரி போன்ற பல்வேறு சங்கங்கள் மூலமாக 15-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையிடம் லட்சிய ஆசிரியர் விருதையும் பெற்றுள்ளார்.

ஆசிரியர் செங்குட்டுவன், தனது பணிக்காலம் முழுவதும் மாணவர்களுக்காக அவர்களின் கல்வி வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் தொடர்ந்து பணி செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe