Skip to main content

சில காலம் பா.ஜ.க.வினர் தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்ளாததற்கு இதுதான் காரணம்..? - ஆளூர் ஷாநவாஸ் பேச்சு!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

ரக


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷானவாஸிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு,
 


தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் தனிப்பட்ட முறையில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகின்ற நிலையில், அந்த விவாதத்தில் பேசிய ஜோதிமணி, எதிர்க்கட்சிகள் மக்களுக்கு இந்தக் கரோனா நேரத்தில் உதவி செய்யவில்லை என்றால் பிரதமர் உள்ளிட்டவர்களைப் பொதுமக்கள் கல்லால் அடித்திருப்பார்கள் என்று பேசினார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

ஜோதிமணி மோடி குறித்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. 'பப்பு' எனச் சொல் என்று குழந்தையைச் சொல்லச் சொல்லி தனிமனித தாக்குதலை முதலில் செய்தவர் பிரதமர் மோடி. அவர்கள் தனிமனித தாக்குதல் என்று சொல்வதுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது. ராகுல் ஒன்றும் மோடியைப் பார்த்து தனிமனித தாக்குதல் செய்யவில்லை. சோனியா காந்தியை இத்தாலி இறக்குமதி என்று பா.ஜ.க.-வினர் இன்றைக்கும் பேசி வருகின்றது. ஆனால் அதுகுறித்து சோனியா காந்தி இதுவரை பேசியதில்லை. எனவே நாகரிகத்தைப் பற்றி, பண்பாட்டைப் பற்றி யாருக்கும் பாடமெடுக்கும் இடத்தில் பா.ஜ.க. இல்லை. அவர்களுக்கு அந்தத் தகுதி எப்போதும் இருந்தது இல்லை. விவாதங்களில் அவர்கள் கட்டற்று பேசுகிறார்கள். என்ன நினைக்கிறார்களோ அதைப் பேசுகிறார்கள். அநாகரிகமாகத் தொடர்ந்து பேசி வருகிறார்கள். 

தொலைக்காட்சி விவாதங்களுக்கு முதலில் அவர்கள் வருகிறார்களா? சில காலம் வராமல் இருந்தார்கள், தற்போது வருகிறார்கள் இதற்கு என்ன காரணம். நாங்கள் இந்த விஷயத்தில் அனைவரும் சேர்ந்து எழுத்துப்பூர்வமாக அந்தத் தொலைக்காட்சிக்குக் கடிதம் கொடுக்கிறோம். "உங்கள் தொலைக்காட்சியில் அந்தக் குறிப்பிட்ட நபர் அவ்வாறு பேசியதும், அவரை வெளியேற்றாமல் அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு வழங்கினீர்கள். விவாத சமநிலை இல்லாத இடங்களில் நாங்கள் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டோம்" என்று தெரிவித்துள்ளோம். மக்களிடம் அதற்கான காரணத்தை நாங்கள் தெரிவித்துவிட்டோம். ஆனால் கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சி விவாதங்களில் பாஜகவினர் கலந்துகொள்ளவில்லையே? அதற்கான காரணத்தைத் தெரிவித்தார்களா, இப்போது தொலைக்காட்சிகளில் விவாதங்களில் கலந்து கொள்கிறார்கள், அதற்கும் அவர்கள் காரணம் சொல்லவில்லை. 
 

 


தொலைக்காட்சிகளுக்கு அவர்கள் நெருக்கடி கொடுக்கிறார்கள். நாங்கள் கூறும் தலைப்புகளில் விவாதங்களை நடத்துங்கள் என்று நெருக்கடி தருகிறார்கள். இந்த மாதிரி இதுவரைக்கு தொலைக்காட்சிகளுக்கு யாராவது நெருக்கடி கொடுத்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? இதுவரை ஆண்ட தி.மு.க. செய்திருக்கிறதா? அல்லது இப்போது ஆள்கின்ற அ.தி.மு.க. அவ்வாறு செய்கிறதா? இல்லை நாங்கள் யாராவது அதுமாதிரி கேட்டிருக்கிறோமா? அப்படி ஏதுமில்லை என்றால் அப்போது ஏன் வரவில்லை, இப்போது ஏன் வருகிறார்கள் என்ற காரணத்தை அவர்களைக் கூறச்சொல்லுங்கள். அவர்களுக்கு விவாதங்களின் மீது நம்பிக்கை கிடையாது. ஊடகங்களில் போய்த் தகராறு செய்வதும், தொலைக்காட்சி அலுவலகங்களின் மீது அவர்கள் ஆதராளர்கள் தாக்குதல் நடத்துவது என்று தொடர்ச்சியாக இந்த மாதிரி சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. அவர்கள் அடுத்தவர்கள் பேசுவதைக் கேட்கவே விருப்பம் இல்லை என்பது மட்டும் நூறு சதவீதம் உண்மையாக இருக்கிறது.



 

 

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.

Next Story

'வேணும்... ஆனா ஜோதிமணிக்கு கூடாது' - விருந்து வைத்து குமுறிய கரூர் காங்கிரஸ்

Published on 12/02/2024 | Edited on 12/02/2024
'We want but not for Jyotimani'-Karur Congress held a party

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருக்கும் நிலையில் திமுகவில் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கரூரில் மீண்டும் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு கொடுக்கக்கூடாது என கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

கரூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் தான்தோன்றிமலை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் மாவட்டச் செயலாளர் சேகர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் அனைவருக்கும் தடபுடலாக விருந்து கொடுக்கப்பட்டது. பிறகு நடைபெற்ற கூட்டத்தில் கரூர் தொகுதியில் மீண்டும் ஜோதிமணிக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கக் கூடாது. அவர் தொகுதியில் சரிவர பணியாற்றாமல் இருக்கிறார். பொதுமக்கள் மற்றும் சொந்த கட்சியினரிடம் சரியான அணுகுமுறை இல்லாமல் நடந்து கொள்கிறார். கூட்டணிக் கட்சிகளிடையேயும் வெறுப்புணர்வை உருவாக்குகிறார் எனக் கூறி அவருக்கு மீண்டும் சீட்டு வழங்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பேசிய மாவட்டச் செயலாளர் சேகர், ''தமிழக தலைமையிடமும் நிர்வாகிகளிடமும் மோதல் போக்கை கடைப்பிடித்து கட்சிக்கு களங்கம் உண்டாக்கிக் கொண்டிருப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. கரூர் தொகுதி காங்கிரசுக்கு வரவேண்டும். ஆனால் ஜோதிமணிக்கு மீண்டும் சீட் கொடுக்கக் கூடாது என்பதுதான் எங்களுடைய ஒட்டுமொத்த கருத்து'' என்றார்.