Skip to main content

"போராட்டம் எப்படி கலவரமாக மாற்றப்படுகிறது என்பது தான் நமக்கு தெரியுமே.." - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பிய இந்த பிரச்சனையில் எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.  இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸிடம் இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில்கள் வருமாறு,

 

y



மத்திய அரசு குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்தை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

அரசு கொண்டுவரும் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள் போராடுவது இந்தியாவில் புதிதல்ல. பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்த்து காலகாலமாக தொடர்ந்து போராட்டத்தை முன் எடுத்து சென்றதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடுவது என்பது இந்தியாவில் நீண்ட காலமாக உள்ள நடைமுறை. டெல்லி ஜாமியா மற்றும் அலிகார் பல்கலைகழகங்களில் உள்ள மாணவர்கள் இந்திய மாணவர்கள் தானே, இந்திய குடியுரிமை பெற்றவர்கள் தானே? அவர்கள் கல்லூரி வளாகத்தில் எதற்காக போராடினார்கள், தேவையில்லாத விஷயங்களை முன்னெடுத்து போராடினார்களா? இல்லையே, மக்களின் போராட்டளுக்கு தோல் கொடுத்தார்கள். அதற்காக கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்காக காவல்துறையினர் அந்த மாணவர்களை கடுமையாக தாக்கி இருக்கிறார்கள். அது முஸ்லிம் பல்கலைக்கழகமாக இருக்கலாம். ஆனால் அங்கு படிக்க கூடிய மாணவர்கள் அனைவரும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அவர்களில் பாதிக்கு மேலே மாற்று மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் இணைந்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்தார்கள்.

அவர்களைதான் காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளார்கள். அவர்களின் அராஜக போக்கு பொதுமக்களை தாண்டி தற்போது மாணவர்களிடமும் வந்துள்ளது. குறிப்பாக அலிகார் பல்கலைக்கழகத்தில் முதலில் பட்டம் பெற்றவரே ஒரு இந்துதான். ஆகவே மத ரீதியாக இதை மாற்றலாம் என்று நினைப்பவர்களுக்காக இதை சொல்ல கடமைப்பட்டுள்ளோம். எனவே இது ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கான கல்லூரி என்றோ, அதில் குறிப்பிட்ட மதத்தை சார்ந்த மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்றோ, அவர்கள் அந்த மதத்துக்கு ஆதரவாக போராடுகிறார்கள் என்றோ சொல்வது அடிபட்டு போய் விடுகிறது. அதே போல் வேறு நாட்டில் இருந்து வந்தவர்கள் இந்த போராட்டத்தை முன் எடுக்கவில்லை. இந்திய அரசியலைப்பு சட்டம் பிறப்பின் அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது என்று கூறுகிறது. ஆனால் அரசு அதற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிறது. அதனை எதிர்த்து மாணவர்கள் களத்துக்கு வருகிறார்கள். அவர்களை இந்த அரசு காவல்துறையினரை கொண்டு அடக்க நினைப்பது ஏன். தன் நாட்டு மக்களுக்காக போராடும் மாணவர்களை இவர்கள் ஏன் ஒடுக்க நினைக்கிறார்கள்.

போராட்டம் வன்முறையாக மாறுவதாக அரசு தரப்பில் தெரிவிப்பதை பற்றி?

நம்முடைய தமிழ்நாட்டில் தான் நிறைய முறை பார்த்திருக்கிறோமே, போராட்டங்கள் எப்படி வன்முறையாக யாரால் மாற்றப்படுகிறது என்று. போராட்டம் எப்படி வன்முறையா மாறும். அவர்களுடைய நோக்கம் என்ன, மக்கள் பாதிக்கப்படும் ஒரு சட்டத்திற்கு எதிராக வீசிக்கு வந்து போராடுகிறார்கள். இதில் வன்முறையை நிகழ்த்த அவர்களுக்கு என்ன நோக்கம் இருக்க போகிறது. காவல்துறையினர் தான் நேற்று கண்ணில் சிக்கியவர்களை எல்லாம் அடித்து நொறுக்கினார்கள். ஏதோ குற்ற செயலில் ஈடுபட்டவர்களை போல மாணவர்களை அவர்கள் கடுமையான முறையில் தாக்கினார்கள். இது அனைத்திற்கும் அவர்கள் பதில் சொல்லத்தான் போகிறார்கள்.பிரதமர் போராட்டத்தில் வன்முறை கூடாது என்கிறார், யார் வன்முறை செய்வது. தமிழ்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் யார் வன்முறை செய்தார்கள் என்று அவருக்கு தெரியாதா? தில்லி காவல்துறையினர் மாணவர்களை அடித்த வீடியோக்களை நாம் அனைவரும் பார்த்தோம். தமிழகத்தில் நடைபெற்றது போன்று அவர்கள் வாகனங்களை கொளுத்துவதையும் நாம் நேரடியாக பார்த்தோம். இப்போது மோடி என்ன செய்திருக்க வேண்டும். 

காவல்துறை உடை அணிந்துகொண்டு ஏன் இவ்வாறு வன்முறை செய்தீர்கள் என்று கேட்க வேண்டுமா, இல்லையா? ஆனால் அவர் அவ்வாறு கேட்டாரா என்றால் அவர் அப்படி ஒன்றும் கேட்கவில்லை. மாறாக மாணவர்களை வன்முறை செய்யாதீர்கள் என்று கேட்கிறார். அவர்களா வன்முறையில் ஈடுபட்டது. அவர்கள் வன்முறையில் ஈடுபட்டது உண்மையென்றால், அவர்கள் ஏன் தாக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இருந்தே அவருக்கு தெரியவில்லையா, யார் யாரை தாக்கியது என்று. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு தான் போராட்டம் நடத்த கூடாது என்ற நோக்கம் இருக்கிறது, அதனால் போராட்டத்தில் ஈடுபடுபவர்களை தாக்குவதன் மூலம் மற்றவர்களை அச்சப்படுத்தலாம் என்று நினைக்கிறார்கள்.  அந்த மாணவர்கள் அச்சப்பட போவதில்லை. அவர்கள் தங்களுக்கான போராட்டளை அவர்கள் விரும்பும் வரை தொடரத்தான் போகிறார்கள். வன்முறையை நிகழ்த்த வேண்டிய தேவை மாணவர்களுக்கு இல்லை. போராட்டத்தை நிறுத்த வேண்டிய தேவைதான் அரசாங்கத்துக்கு இருக்கிறது.