Skip to main content

"தீண்டாமை எப்படி வந்தது என்று ரஞ்சித்திடம் கேட்காதீர்கள் சங்கரமடத்திடம் கேளுங்கள்.." - ஆளூர் ஷானவாஸ் பேச்சு!

Published on 12/12/2019 | Edited on 12/12/2019


கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுபாளையத்திற்கு அருகில் உள்ள நெடூர் கிராமத்தில் இருந்த சுவர் ஒன்று இடித்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்தனர். பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு நீதி கேட்டும், போதுமான இழப்பீடு கேட்டும் சுவர் இடிந்த அன்று போராட்டங்கள் நடைபெற்றது. அந்த போராட்டங்களில் பங்கெடுத்த நாகை திருவள்ளுவனை காவல்துறையினர் கைது செய்தனர். போலீசார் நாகை திருவள்ளுவனை கடுமையான முறைகளில்  கைது செய்ததாக கூறி, சென்னையில் சமூகநீதி இயக்கங்களின் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த ஆளூர் ஷானவாஸ் காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து அவரின் அதிரடியான பேச்சு பின்வருமாறு, " திருவள்ளுவருக்கு யார் காவி அடித்தார்களோ அவர்களே தோழர் திருவள்ளுவனை காக்கியை வைத்து அடித்துள்ளார்கள். இரண்டு அடிகளையும் நாங்கள் எதிர்கொள்வோம். திருவள்ளுவருக்கு நீங்கள் காவி அடித்ததை பார்த்து ரஜினியே திருவள்ளுவர் சிக்கமாட்டார் என்று சொல்லிவிட்டார். அதை போல தோழர் திருவள்ளுவனை அடித்து, உதைத்து, மிரட்டல்கள் மூலம் பணிய வைக்கலாம் என்று நினைக்கிறார்கள். அவ்வாறு ஒரு போதும் நடக்க போவதில்லை. தோழர் திருவள்ளுவன் நீங்கள் நினைப்பது போல் தனியாள் அல்ல. அவர் பாதிக்கப்பட்டால் தமிழ் புலிகள் கட்சி மட்டுமே வரும் என்று நினைக்காதீர்கள். விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட சமூக நீதி இயக்கங்கள் அனைத்தும் அவர் பின்னே அணி திரளும் என்பதை அவர்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன்.  இந்த சம்பவம் நடக்கும் போது எங்கள் தலைவர் ஜெர்மனியில் இருந்தார். சம்பவம் நடந்த உடனே அவர் சமூக ஊடகங்களின் வாயிலாக நேரலையில் தோன்றி அதற்கு கடுமையான எதிர்வினையாற்றினார். எங்களுக்கும் இதுகுறித்து பேச சொல்லி அறிவுறுத்தினார். எனவே இது ஒரு கட்சி சார்ந்த பிரச்சனை அல்லை. நம் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கின்ற வன்முறைக்கு எதிராக நாம் ஒன்று சேர்கின்ற ஒரு நிகழ்ச்சியாக இது இருக்கிறது. 
 

f
எனக்கு முன்பு பேசிய தோழர்கள் கூறினார்கள் நாகை திருவள்ளுவனை ஒரு பிக் பாக்கெட் நபரை பிடிப்பது போல, கொள்ளை அடிப்பவரை பிடிப்பதை போல சட்டையை பிடித்து இழுந்து சென்றுள்ளார்கள் என்று. நான் அதில் இருந்து முரண்படுகிறேன்.  எந்த பிக் பாக்கெட் திருடனை, கொள்ளைகாரனை போலீசார் இந்த மாதிரி அழைத்து செல்கிறார்கள். தமிழ்நாட்டில் கடைசியாக நடந்த பெரிய கொள்ளையான லலிதா ஜூவல்லரி கடையில் நடைபெற்ற திருட்டில் ஈடுபட்ட நபரிடம் கொள்ளை அடித்த நகையில் ஒரு கிலோ தங்கம் எங்கே என்று காவல்துறையினர் விசாரிப்பதாக தகவல்கள் வந்துள்ளது. திருடியவரோ நான் கொள்ளை அடித்த நகைகள் அனைத்தையும் காவல்துறையிடம் கொடுத்துவிட்டேன். நீங்கள் விசாரிக்க வேண்டியது அவர்களிடம்தான் என்று  கூறுகிறார். காவல்துறையினரும் திருடர்களும் வேறுவேறு அல்ல. யார் கஞ்சா விற்கிறார்கள், யார் அபின் விற்கிறார்கள் என்ற தகவல் அனைத்தும் நம்மை போன்ற ஆட்களுக்கு வேண்டுமானால் தெரியாது. ஆனால் காவல்துறையில் இருப்பவர்களுக்கு இது அனைத்தும் தெரியும். எல்லா சட்ட விரோத செயல்களின் மூலம் கிடைக்கும் பணத்தில் உரிய பங்கு காவல்துறைக்கு சென்றுவிடுகிறது. போலிசாருக்கு தெரியாமல் எந்த சட்டவிரோத செயல்களும் இங்கு நடக்காது. எனவே அவர்களுடைய தோழர்களை எப்படி போலீசார் தாக்குவார்கள். அவர்களுக்கு ஏன் கோபம் வருகிறது என்றால் நாம் மக்களோடு மக்களாக ஏழை எளியவர்களுக்கு தோல் கொடுத்து வருவதனால் தான். அதனால் தான் சட்டையை பிடித்து இழுந்து செல்லும் எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. எனவே தான் இத்தகைய தாக்குதலை போலீசார் நடத்துகிறார்கள். 


மேட்டுப்பாளையத்தில் இடிந்த சுவரை, தீண்டாமை சுவர் என்று ரஞ்சித் சொன்னதற்கு வானதி சீனிவாசன் எதிர்வினை ஆற்றியிருக்கிறார். மழை பெய்து சுவர் விழுகிறது, அதில் எங்கிருந்து தீண்டாமை வந்தது என கேட்கிறார். தீண்டாமை எங்கிருந்து வந்தது என்று நீங்கள் சங்கராச்சாரியாரை பார்த்து கேட்க வேண்டும் அல்லது சங்கர மடத்தை பார்த்து கேட்க வேண்டும். மனிதனின் பிறப்பை நாயோடு இணைத்து பேசினாரே அவரை பார்த்து கேட்க வேண்டும். இவை அனைத்து கேட்க வேண்டிய நபர்களை பார்த்து கேட்டால்தான் தீண்டாமை எங்கிருந்து வந்தது என்று தெரியும். தீண்டாமையை நாங்களா உற்பத்தி செய்கிறோம், அவர்களின் கொள்கை தீண்டாமையை உருவாக்குகிறது. பிறப்பால் உயர்வு தாழ்வு உண்டு என்று நீங்கள் உற்பத்தி செய்த கோட்பாடு இந்த சுவர் வரை வந்து நிற்கிறது. எனவே தீண்டாமையை யார் உருவாக்கினார்கள் என்று கேட்பவர்கள், இவர்களிடம் கேட்டால் அதற்கான பதில் கிடைக்கும்" என்றார்.