'Alliance beyond policy; Reason for BJP pulling Vijay' - Vijayadharani breaks down Photograph: (bjp)
அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏவும், தற்போதைய பாஜக பெண் நிர்வாகியுமான விஜயதரணி பல்வேறு அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
பீகார் ரிசல்ட் இந்த அளவுக்கு இருக்கும் என பாஜகவே எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள். உண்மையா?
பாஜகவை பொறுத்தவரை இந்த எக்ஸிட் போல் அளவுக்கு எதிர்பார்த்தது உண்மைதான். 150-லிருந்து 170 வரைக்கும் எதிர்பார்த்தது உண்மைதான். ஆனால் ஒரே அடியா ஸ்வீப்பிங் ஆகி 202 வரும்போது எல்லாத்தையும் தாண்டி மக்கள் விருப்பத்தோடு, ஒரு முனைப்போடு பிடிவாதமா வந்து வாக்களித்து தான் தென்பட்டது. 62% மட்டுமே வாக்கு சதவீதம் இருந்தது பீகாரில். இந்திய வரலாற்றிலேயே 62 சதவிகிதத்தை தாண்டியதாக பீகாரில் சரித்திரமே இல்லை. ஆனால் 69-ல் இருந்து 70% வாக்குகள் என 8% ஒரே அடியா ஹைக் இருந்திருக்கு. மக்கள் வந்து வாக்கு போட்ருக்காங்க. தவறான வாக்குகளை நீக்கி இருக்காங்க. அதெல்லாம் கரெக்டா தான் நடந்திருக்கு. எஸ்ஐஆர் நடந்ததால் வாக்களிக்க வேண்டுமா என சந்தேகமாக மதில் மேல் பூனையா இருந்தவங்க உறுதியாக வந்து வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலைக்கு வந்துருக்காங்க.
பாருங்க எங்க கணவர் எட்டு வருஷம் முன்னாடி இறந்துவிட்டார். இந்த எட்டு வருஷமா இன்னும் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இருந்தது. எத்தனை பேர் ஓட்டு போட்டாங்க என்று தெரியல. நான் கண்டுபிடிச்சு அவர் இறந்துவிட்டார் என 2022ல் நான் போய் கையெழுத்து போட்டு கொடுத்தேன் அதனால் இப்போது நீக்கிருக்காங்க. இதனால் கள்ள ஓட்டு எத்தனை விழுந்திருக்கும். இறந்தவர்களை நீக்க வேண்டும். ஷிப்ட் ஆனவர்களை நீக்க வேண்டும். இரட்டை வாக்கு உள்ளவர்களை நீக்க வேண்டும். ஒரே வீட்டில் 10 பேர் இருந்தா அதையும் நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களையும் சேர்க்க வேண்டும். எஸ்ஐஆரின் உண்மை இதுதான். எஸ்ஐஆர் பற்றிய பயம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே டெக்னாலஜி பேஸ்தான். ஒரே மாதத்தில் எஸ்.ஐ.ஆர் எடுக்கவேண்டும் என்பது பற்றி யோசிக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் தான் செய்ய வேண்டிய கடமையை செவ்வனே செய்தால் முடியும்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வரப்போகுது. உங்களுடைய எண்ணம் மீண்டும் சட்டமன்றத்துக்குள் போவதா? அல்லது எம்பி ஆகி டெல்லி போவதா?
கட்சி என்னை என்ன பணிக்கிறதோ அந்த பணியை திறம்பட செய்வேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. காங்கிரஸில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால் சட்டமன்ற கட்சித் தலைவராக இரண்டு தடவை ஜெயிக்கிறேன். தலைவராக ஆக்கமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். மீண்டும் எம்எல்ஏக்கும் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எம்பிக்கும் வாய்ப்பு இல்லை என்றார்கள். அந்த அளவிற்கு எல்லாவற்றுக்குமே நிராகரிப்பு தான் இருந்தது. எதையுமே பண்ணவிட மாட்டேன் நீ சும்மா பொம்மை மாதிரி உட்கார்ந்து இரு என்று சொன்னார்கள். இத்தனை வருட கட்சிப் பணிக்கும், மக்களுக்காக உழைச்சதற்கும் ஒரு கண்டினியூட்டி இல்லாமல் போயிடும். அந்த கண்டினியூட்டி பாஜக எனக்கு தருகிறார்கள். அதைத்தான் நான் பெருமையாக நினைக்கிறேன். நிச்சயமாக அவங்க என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. மக்கள் பணியாற்ற என்னை பாஜக பணிக்கிறார்கள். எனக்கு அதுதான் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போது என்னை எஸ்ஐஆர் விஷயத்தில் இன்வால்வ் பண்ணிருக்காங்க. அதே மாதிரி பொறுப்பாளர் ஆக்கி இருக்காங்க. இனி மேலும் என்னை பாஜக பயன்படுத்தும். இப்போதும் பயன்படுத்தி கொண்டு தான் இருக்காங்க. இன்னைக்கு கூட ஒரு டிவி நிகழ்ச்சி போக சொல்லி இருக்காங்க.
காங்கிரஸ் கட்சியில் 23 ஆண்டுகள் வேலை பார்த்த பிறகு 23 வருஷத்துக்கு அப்புறம் ஒரு எம்எல்ஏ சீட்டு 2011-ல் கொடுக்குறாங்க. அதுக்கப்புறம் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏ ஆனேன். ஜெயலலிதா தான் அப்போது சிஎம். நான் பேரவையில் பேசுவதை ஜெயலலிதா கவனிப்பாங்க. சில நேரம் சபாநாயகர் நான் பேசுவதை நிராகரிப்பாங்க. ஜெயலலிதா கிட்ட ரிக்வஸ்ட் பண்ணுவேன். அனுமதி கொடுத்துருவாங்க. சட்ட மன்றத்தில் பேசுவதற்கான அதிகமான வாய்ப்புகளை ஜெயலலிதா எனக்கு தந்திருக்காங்க. அதேமாதிரி ஜெயலலிதா எனக்கு பதிலும் உடனே கொடுப்பாங்க. நான் கேட்கிற கேள்விகளுக்கு பதிலும் உடனே கிடைக்கும். அவர் கொடுக்கும் பதில் பாசிட்டிவான பதிலாக இருக்கும். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். என் விளங்கோடு தொகுதிக்கு நிறைய திட்டங்கள் ஜெயலலிதா பீரியட்லயும், எடப்பாடி பீரியட்லயும் தான் அதிகமாக வந்து சேர்ந்தது.
குழித்துறை நகராட்சி உயர்மட்ட டேங்க் வழங்குக் குழாய் கோரிக்கை என்பது ஆண்டுகால கோரிக்கை. அதையெல்லாம் 23 கோடியில மாற்றியமைத்தேன். அதேமாதிரி திக்குறிச்சி வள்ளக்கடவு பாலம் கிட்டத்தட்ட 23 வருட கோரிக்கை. 10 கோடியில் என் பீரியட்ல தான் நிறைவேற்றி ஜெயலலிதா தான் திறந்து வச்சாங்க. அதேமாதிரி மார்த்தாண்டம் பாலம். கிட்டத்தட்ட 176 கோடி ரூபாய் பாலம். அதற்கு வரைபடம் தயார் பண்ணி கொடுத்தேன். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அதற்கு நிதி ஒதுக்கவில்லை. பாஜக ஆட்சி வந்த பிறகுதான் அந்த நிதிகளை ஒதுக்கினார்கள். ஆனால் அது என்னுடைய கோரிக்கை.
காங்கிரஸ் மேல் கோபம் வந்து உடனே நீங்க எம்எல்ஏ பதவியை ராஜினாமா பண்ணிட்டீங்க. வாக்களித்த மக்களுக்கு நீங்கள் செய்யக்கூடிய துரோகமா அதை பார்க்கலாமா?
இல்லை, அதாவது வாக்களித்த மக்களுக்கு பல்வேறு விஷயங்களை கொண்டு சேர்க்க முடியாத நெருக்கடி. 2022 தேர்தலுக்கு அப்புறம் நிறைய விஷயங்களை கொண்டு சேர்க்க முடியவில்லை. ரோடு கேட்டால் கொடுக்க மாட்டாங்க திமுக ஆட்சியில். அப்படியே கொடுத்தாலும் ரோடு போட்ட அடுத்த நாளே ஒரு மழைக்கு அப்படியே அள்ளிட்டு போயிடும். அந்த குழி குழியாக வந்துரும். அந்த பழி, குற்றச்சாட்டு நம்ம மேல வரும். அதுமாதிரி வேற எந்த பெரிய திட்டங்கள் கேட்டாலும் 10 திட்டம் எழுதி கொடுங்க என்று சொல்வார்கள். 10 என்ன 40 திட்டம் எழுதி கொடுத்தேன் நான். ஒன்னு கூட வரல. இது மாதிரி எதுவுமே நடக்கவில்லை. இப்படி இருக்கும் பொழுது மக்களுக்கு எதுவுமே செய்ய முடியாத நெருக்கடி. அப்படில்லாம் ஒரு சூழ்நிலை இருந்துச்சு. அதனால் ராஜினாமா செய்தேன்.
எம்எல்ஏ பதவி வேண்டாம் என ரெசிக்னேஷன் லெட்டர் கொடுக்கும்போது மீண்டும் மக்களுக்காக வேலை செய்ய வருவேன் அப்படிங்கிற பயங்கரமான மன உறுதியும் தைரியமும் இருந்தது எனக்கு. 2021-ல் எம்எல்ஏ சீட் கொடுக்கவே காங்கிரஸ் ரொம்ப என்னை சிரமப்படுத்துனாங்க. ரொம்ப கலட்டா பண்ணாங்க. அதன்பின்னர் போராடி ஜெயிச்சு வந்தேன். வந்த பிறகும் மக்களுக்கு செய்ய வேண்டிய இடத்தில் நிறைய விஷயங்களை கொண்டு சேர்க்க முடியாத நெருக்கடி எல்லாம் இருந்தது. அந்த நெருக்கடிக்கு மத்தியில் என் கடின உழைப்பின் மூலம் நிறைய விஷயங்களை, என் சொந்த முயற்சியில் செய்தேன். ஆனால் பெரிய திட்டங்கள் எதுவும் கொண்டுவர முடியவில்லை. 2021க்கு அப்புறம் அந்த மாதிரி ஒரு சூழ்நிலை இருந்தது. அப்படியெல்லாம் இருக்கும் பொழுது நான் ரிசைன் பண்ற அந்த நிமிஷம் நினைச்சேன். மீண்டும் வந்து என் விளவங்கோடு தொகுதி மக்களுக்காக நான் பணியாற்றுவேன். அவங்களுக்காக நான் நிச்சயம் அவங்களோடு நின்று நான் உறுதியாக பல்வேறு நல்ல விஷயங்களை கொண்டு சேர்ப்பேன். இந்த தொகுதியை இன்னும் மேல உயர்த்துவதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் நான் ஏற்படுத்துவேன். இந்த தொகுதி மட்டுமல்ல எங்க கன்னியாகுமரி மாவட்டத்திற்கே நிறைய வளர்ச்சி தேவை. அந்த வளர்ச்சி எல்லாத்தையும் கொண்டு வருவேன். அது என்னால் முடியும் அப்படின்னு கடவுள் மேல ஆணையா மனசுல நினைச்சுகிட்டு தான் நான் அந்த ரெசிக்னேஷன் கொடுத்தேன்.
மீண்டும் எனக்கு மக்கள் பணியாற்றுவதற்கு பாஜக தளத்தை வழங்கி நிச்சயம் ஒரு லெவலுக்கு கொண்டு வருவாங்க. மக்களுக்காக உழைப்பதில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி. எனக்கு ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு இரண்டு விஷயத்தை சாதிச்சோம். மக்களுக்கு நல்ல காரியத்தை செஞ்சு கொடுத்தேன். ஹெல்ப் பண்ணேன் என்ற நிலை வந்தால் தான் எனக்கு தூக்கமே வரும். அப்படி பழகிய எனக்கு எனக்கு இந்த மனநிலை என்பது தொடர்ந்து அப்படியேதான் இருக்கு. நான் அந்த மனநிலையில் எந்த மாற்றமும் எனக்கு இல்லை.
விளவங்கோடு இடைத்தேர்தலில் பாஜக என்னை நிற்க சொன்னார்கள். நான் தான் வேண்டாம் என்றேன். காரணம் மாறி வந்த உடனேயே மக்களுக்கு புரிதல் இருக்காது. நான் மாறிட்டேன் என முதலில் நிறையப் பேருக்கு தெரியாது. சின்னம் மாறி இருக்கு. கட்சி மாறி இருக்கு. எதனால் கட்சி மாறினேன் என்பதைப் பற்றிய விளக்கம் எல்லாம் மக்களுக்கு சென்று சேர கொஞ்சம் டைம் தேவை. மக்களுக்கு இப்போது புரிதல் நல்லா இருக்கு. எல்லாரும் பேசுறாங்க.
மக்களிடம் மனநிலை மாற்றம் எப்போது வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரே மாதிரி தான் இருக்க வேண்டும் என சொல்ல முடியாது. அதனால் இனி ஒவ்வொருவருடைய செயல்பாடை பொருத்தும் மக்களோட தீர்ப்பு என்னவாக வரும் என்பதை பார்த்து தான் சொல்ல முடியும்.
பிரதமர் மோடிக்கு தமிழ் மீது ஆர்வம் அதிகம் என்று சொல்கிறார்கள். நீங்கள் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் கொள்ளு பேத்தி என தெரியுமா?
அது எனக்கு தெரியவில்லை. அவருக்கு தெரியுமான்னு தெரியவில்லை. அடுத்த தடவை வரும்போது அவர்கிட்ட சொல்லலாம்னு இருக்கேன். பாஜகவில் சேர்ந்த பிறகு நான் ராகுலிடம் பேசவில்லை. பாஜகவில் சேர்ந்த பிறகு அவர்கிட்ட பேச நான் முயற்சி பண்ணவில்லை. அவரும் என்கிட்ட பேச முயற்சி பண்ணவில்லை. காங்கிரசில் இருந்த போது தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனால் நீக்கப்பட்டேன். தவறு செய்தது அவர். அப்படி இருக்கும் பொழுது என் மேல நடவடிக்கை எடுத்தது எனக்கு ரொம்ப தப்பா தெரிஞ்சது. அடுத்து மீண்டும் சில மாதங்களுக்கு பிறகு சில வேற ஒரு பொறுப்பை நேஷனல் லெவலில் கொடுத்தார்கள். காங்கிரசில் சரியான விசாரணை கிடையாது என்பதுதான் காங்கிரசில் நடக்கும் தப்பான ஒன்று. அப்போதே காங்கிரசில் பயணிக்க ஒரு நெருடல் இருக்கத்தானே செய்யும். நம்மை சரியாக நடத்தவில்லை. தவறு செய்தவர்களை விசாரிக்காமல் தவறு செய்யாதவர்கள் மீது நடவடிக்கை பாய்கிறது என்பது ரொம்ப தப்பான விஷயம்.
விஜய்யை ஏன் இவ்வளவு பேக்கப் பண்ணுகிறது பாஜக?
விஜய் இப்போதான் புதுசா ஒரு கட்சி ஆரம்பிச்சு வந்திருக்கிறார். வந்தவரை நாம் டிஸ்கரேஜ் பண்ணக்கூடாது. புதிதாக ஒரு மாற்றத்தை விரும்பும் மக்கள் தமிழ்நாட்டில் இருக்காங்க. பாஜகவை கொள்கை எதிரி என சொல்கிறார். திமுகவை அரசியல் எதிரி என்று சொல்கிறார். ஆனால் அவர் புதிதாக இளைஞர்கள் விரும்பக்கூடிய ஒரு ஆளாக வந்திருக்கிறார் என்பது நிதர்சனமான உண்மை. விஜயகாந்த் வந்த பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கதான் செய்தது. கொள்கை எதிரி என்றுதான் விஜய் பாஜகவை சொல்கிறார். கொள்கைக்கு அப்பாற்பட்டு எவ்வளவோ கூட்டணி அமைஞ்சிருக்கு. மகாராஷ்டிராவில் அமையாத கூட்டணியா? கொள்கை எதிரி சொல்றாங்க எவ்வளவோ கொள்கைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு சிவசேனாவும் காங்கிரசும் ஒன்றாக சேரவில்லையா? நிதிஷ்குமாரும் பாஜகவும் ஒன்றாக சேரவில்லையா?'' என்றார்.
Follow Us