Skip to main content

திருவாரூர் கொடுத்த நல்லது ஒன்னு... கெட்டது ஒன்னு! -கமல்

Published on 04/03/2019 | Edited on 04/03/2019

க்களவை பொதுத்தேர்தலில் யார் யாருடன் கூட்டணி,… யாருக்கு எத்தனை சீட்டு… என்று அரசியல் களம் தகிக்கத் தொடங்கியிருக்கும் நிலையில், கலைஞரின் கோட்டை திருவாரூரிலும், நெல்லையிலும் சினிமாத் தன்மையோடு பிரமாண்டமான செட்டுகளில் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா கூட்டத்தை நடத்தி முடித்தார் கமல்.

kamal


சமீப நாட்களாக தி.மு.க.வுக்கு எதிராக தாக்குதலை அதிகப்படுத்தியிருக்கும் கமலுக்கு எதிராக தி.மு.க.வினரும் கடுமையான விமர் சனங்களை முன்வைத்துவரும் நிலையில் இந்த கூட்டங்கள் நடந்திருக்கின்றன. தி.மு.க.வை "ஊழல்பொதி' என்றார். கிராமசபை கூட்டத்தை இவர்தான் கண்டுபிடித்ததைப் போலவும், தி.மு.க. அதை காப்பியடிப்பதைப் போலவும் பேசினார். இதற்கு பதிலளித்த முரசொலி, கிராமசபை கூட்டத்தை கலைஞர் முதலமைச்சராக இருந்தபோதே நடத்தியதாகவும் அரசியல் வரலாறு தெரியாமல் கமல்ஹாசன் பேசுவதாகவும், விரக்தியின் உச்சத்திற்கு சென்று விட்டதாகவும் கடுமையாக சாடியது. அதுமட்டுமின்றி, 2015- ஆம் ஆண்டில் கிராமசபை கூட்டங்களில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற படங்களை டுவிட்டரில் வெளியிட்டார் அவரது மகன் உதயநிதி.

இப்படிப்பட்ட நிலையில்தான் திருவாரூர் கூட்டத்துக்கு வந்தார் கமல். முன்னதாக கஜா புயலில் பாதிக்கப்பட்ட வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு கமல் தனது கட்சி சார்பில் 159 வலைகள் வழங்கினார். அங்கு பேசிய அவர், "தேர்தலுக்காக நான் வரவில்லை, ஆறுதலுக்காக வந்துள்ளேன்'’என்றார்.

kamalதிருவாரூர் தெற்கு வீதியில் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. சினிமாத் தன்மையோடு அமைக்கப்பட்டிருந்தது. மேடையி லிருந்து இறங்கி வந்து மக்களை சந்திப்பது போல் மேடையை அமைத்திருந்தனர். கூட்டத்தில் பேசிய கமல், "திருவாரூர் நல்ல தலைவர்களை கொடுத்துள்ளது. நல்லது, கெட்டது இரண்டையும் திருவாரூர் கொடுத்திருக்கிறது. குடும்ப அரசியலை கொடுத்தும் கெடுத்தும் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும் என்பதற்காகவே இங்கு மய்யம் கொண்டிருக்கிறோம். அரசியலில் எம்.ஜி.ஆர். போட்ட இலையை இரண்டாக பிரித்து இரண்டு பேர் சாப்பிட்டுக்கொண்டுள்ளனர். தேர்தலுக்கு அமைக்கப்படும் கூட்டணி மெகா கூட்டணியா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். கஜா புயலில் விழுந்த மரங்கள் இன்னும் அகற்றப்படவில்லை. ஆனால் எலக்ட்ரிகல் மரத்தை மட்டும் நட்டிருக்கிறார்கள். கஜானா காலியாகி விட்டது என்றார்கள். திடீரென 2000 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது. 60 லட்சம் தமிழ் மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே இருப்பதாக அ.தி.மு.க.வினர் சொல்கின்றனர். ஜெயலலிதாவிற்கு பிறந்தநாள் விழா நடத்து கிறவர்கள், அவரது இறந்தநாள் எது என்று கூற முடியுமா?

நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதில் தமிழருக்கு பங்கு வேண்டும். மக்களிடம் பணம் கேட்டு நாங்கள் கட்சி நடத்தவில்லை. நாங்கள் குதிரை வியாபாரம் செய்து கட்சி நடத்த மாட்டோம். நாங்கள் கதை எழுதவில்லை கதையின் நாயகர்களாக மக்களைச் சந்திக்கிறோம். மக்கள் நலனுக்கு குறுக்கே நிற்கும் டில்லிக்கும் நாம் செல்ல வேண்டும். அதற்கான வாய்ப்பு இப்போதைய தேர்தல் இதை தீர்மானிக்கும் உரிமை உங்களிடம் உள்ளது'' என்று பேசிச் சென்றார்.

நெல்லையிலும் பிப்ரவரி 24-ஆம் தேதி கமல் பங்கேற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவாரூரைப் போலவே இங்கும் சினிமா ஷூட்டிங் நடைபெறும் செட்டைப் போல வண்ணமயமான விளக்கு ஏற்பாடுகளுடன் மேடை அமைக்கப்பட்டிருந்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டிருந்தனர். இவர்களில் படித்தவர்களும் வேலையில் இருப்பவர்களும் அதிகமாக தென்பட்டனர்.

கமல் பேசுவதற்கு முன் கட்சியின் மாவட்ட மாநில பொறுப் பாளர்கள் இரண்டு நிமிடங்களே பேச அனுமதிக்கப்பட்டனர். பொதுவாக அனைவருமே கமலை "அடுத்த முதல்வரே!' என்று அழைத்தனர்.

நெல்லையில் பேசிய கமல்...

"உண்மையான மக்களாட்சி என்பதை இந்த தலைமுறையாவது கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே, நான் கட்சியைத் தொடங்கினேன். என்னை பி.ஜே.பி.யின் "பி டீம்' என்கிறார்கள். நான் யாருக்கும் "பி டீம்' அல்ல…"ஏ டீம்.' தமிழகத்தை சுத்தமாக்க வேண்டும் என்ற என் ஆசை மனக்கோட்டை அல்ல... மக்கள் கோட்டை''’என்றார்.

கமலின் இந்த கூட்டங்கள் குறித்து பங்கேற்றவர்களிடம் விசாரித்தோம்.…"இந்தத் தேர்தலில் தனது பலத்தை நிரூபிப்பதற்காகவே முதலில் அ.தி.மு.க.வை அட்டாக் பண்ணியவர், தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க. மீது கடுமையான விமர்சனம் வைக்கிறார்''’என்கிறார்கள்.

தான் சந்திக்கப்போகும் முதல் தேர்தல் இது என்பதால், தனக்கான வாக்கு வங்கியை நிலைநிறுத்தும் கட்டாயத்தில் அவர் இருக்கிறார். தி.மு.க.வுக்கு எதிரான செய்திகளே மீடியாவில் வெளிச்சம் பெறுவதால் தி.மு.க.வை எதிரியாக்கி, மீடியா வெளிச்சம் பெற கமல் திட்டமிட்டு செயல்படுகிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Next Story

மநீம நிர்வாகக்குழு, செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு

Published on 20/01/2024 | Edited on 20/01/2024
Manima Executive Committee, Date Notification for Executive Committee Meeting

மக்கள் நீதி மய்யம் கட்சியின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் வரும் 23.01.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 11:30 மணிக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யத்தின் அவசர நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. எனவே அனைத்து நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உலகின் மிக உயர்ந்த கட்டடத்தில் திரையிடப்பட்ட விக்ரம் ட்ரைலர்!

Published on 01/06/2022 | Edited on 01/06/2022

 

k

 

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'விக்ரம்'. இப்படத்தில் விஜய் சேதுபதி  ஃபகத் ஃபாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் பிரம்மாண்டமாக இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகின. பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள இப்படம் வருகிற ஜூன் 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது.

 

இதற்கிடையே, 'விக்ரம்' படத்தின் ட்ரைலர் உலகின் உயரமான கட்டடத்தில் திரையிடப் படக்குழு முடிவு செய்திருந்தது. அதன்படி துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டடத்தில் உள்ள மிகப்பெரிய திரையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது திரையிடப்பட்டுள்ளது. மேலும், இப்படத்தின் ப்ரோமோவை ஒரு பிரம்மாண்ட மேடையில் வெளியிடப்போவதாகப் படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. படம் வெளியாவதற்கு முன்பு விக்ரம் பட புரோமோஷன் வேலைகள் வேறு எந்த படத்திற்கும் இல்லாத வகையில் விறுவிறுப்பான நடைபெற்று வருகிறது.