"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!"
ராகுலிடம் கதறிய பெண்!
குமரியில் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகேட்ட ராகுலிடம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு ஆண்களை ஒக்கி புயலில் காணாமல் போக்கிய பெண் கதறிய நிகழ்வை காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி உருக்கமாக விவரித்தார்.
காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கும் ராகுல் பற்றி அவரிடம் நக்கீரன் கேட்டபோது, அவருடைய மனிதாபிமானத்தை விவரிக்கும் வகையில் இந்தச் சம்பவத்தை கூறினார். விஜயதாரணியின் பேட்டி உங்கள் பார்வைக்கு...
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/16/New Folder/rahul gandhi 01.jpg)
"ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட மீனவர்கள், விவசாயிகள், வீடு இழந்தவர்கள், மலைவாழ் மக்கள், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோரைசந்திக்க கடந்த 14ஆம் தேதி வந்தார் ராகுல்காந்தி. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரான பின்னர் முதல் முதலாக குமரி வருகிறார் என்பதால் காங்கிரஸ் கட்சியினர் அதிக அளவில் கூடினர்.
இருந்தாலும், ஒக்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களை மட்டும் அவர் சந்திக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்களை ராகுல் காந்தி சந்தித்தார். ஒவ்வொருவரும் தனது குடும்பத்தில் ஒருவர், இரண்டு பேர் ஒக்கி புயிலில் சிக்கி கரை திரும்பவில்லை என்று தெரிவித்தனர். சிலர் தங்களது குடும்பத்தினர் சடலமாக கிடைத்தததாக கண்ணீர் விட்டனர்.
அப்போது நீரோடி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண், தனக்கு எட்டு ஆண் பிள்ளைகள் என்றும், அவர்கள் அனைவரும் கடலுக்கு சென்றபோது ஒக்கி புயலில் சிக்கியதாகவும் கண்ணீர் விட்டார். மேலும், அவர் சொன்ன வார்த்தை இன்னும் கலக்கம் அடைய செய்கிறது. எட்டு பிள்ளைகளைப் பெத்தும் எனக்கு கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா என அவர் கதறியதை மறக்க முடியாது.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/16/New Folder/rahul gandhi 02.jpg)
அதேபோல் சின்னத்துரையைச் சேர்ந்த ஒரு சிறுமி, தனது தந்தை கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கடலுக்கு சென்றபோது கப்பல் மோதியதில் உயிரிழந்தார். அதற்கு மத்திய, மாநில அரசுகள் எந்த இழப்பீடும் தரவில்லை. உதவிகளும் செய்யவில்லை. இந்த நிலையில் தனது 4 சகோதரிகளின் கணவர்கள் கடலுக்கு சென்றபோது ஒக்கி புயலில் சிக்கியதாகவும், தற்போது தனது குடும்பத்தில் 5 ஆண்களை இழந்து தவிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த இரண்டு பேர் போல நிறைய பேர் தங்களது கஷ்டங்களை தெரிவித்தனர். ஒரு சிறுமி கடலுக்கு சென்ற தனது தந்தையின் போட்டோவை வைத்துக்கொண்டு, எங்க அப்பா வருவாரா அங்கிள் என்றபோது, ராகுல்காந்தி ஒரு நிமிடம் என்ன ஆறுதல் கூறுவதென்று தெரியாமல் அமைதியாக இருந்தார். சுமார் ஒரு மணி நேரம் அவர்களின் வேதனைகளையும், கஷ்டங்களையும் கேட்டார்.
பின்னர் பேசிய அவர், குஜராத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இருந்ததால் ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட உங்களை உடனடியாக வந்து சந்திக்க முடியவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை. இருந்தாலும் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக இருப்பதால் பாராளுமன்றத்தில் உங்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்.
/nakkheeran/media/post_attachments/UltimateEditorInclude/UserFiles/Newsphoto-2017/DECEMBER/16/New Folder/rahul gandhi 03.jpg)
மீனவர்களுக்காக தனி அமைச்சகம் இருந்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிதி ஒதுக்கவும், மாயமான மீனவர்களை தேடும் பணிகள் அதிவேகமாக நிறைவேற்றவும் முடியும். மீனவர்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாங்கள் குரல் கொடுப்போம். மீனவர்களை இழந்து தவிக்கும் அவர்களது குடும்பத்திற்கான இழப்பீடு போதுமானது அல்ல. அதனை உயர்த்தி தர வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறினார்.
பின்னர் அவர் புறப்படும்போது, தலைவரானதற்கு வாழ்த்து தெரிவித்தேன். குமரி மீனவர்களுக்கு தேவையானவற்றை செய்துதர வேண்டும் என்ற காரணத்தினால் பதவியேற்புக்கு டெல்லி வர இயலாது என்பதை தெரிவித்தேன்.
அதற்கு அவர், நீங்கள் இங்கு இருந்துமீனவர்கள், விவசாயிகள், வீடு இழந்தவர்கள், மலைவாழ் மக்கள், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து தேவையான உதவிகளை பெறுவதற்கான பணிகளை செய்வதுதான் முக்கியம். நீங்கள் என் பதவியேற்புக்கு செய்ய வேண்டிய மரியாதையும் அதுதான் என்றார். ராகுல் காந்தி மிகப்பெரிய ஜனநாயக மாண்பை தாங்கிப்பிடிக்கக் கூடிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு என்ன சொல்ல வேண்டும்" என்றார் விஜயதாரணி.
-வே.ராஜவேல்