Skip to main content

எம்.ஜி.ஆர்க்கு அப்புறம் அஜித்துக்குதான் அந்தப் பழக்கமிருந்தது... - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #4

Published on 17/06/2018 | Edited on 01/05/2021

படம் நடிக்க ஆசைப்பட்டு, அது நடக்காம, படம் இயக்க ஆசைப்பட்டு அதுவும் நடக்காம இருந்த காலகட்டத்துல பல திரைக்கதை விவாதங்களில் கலந்துக்குவேன். அப்போ அங்க ஐடியா எதுவும் சொல்லாம கேள்விகள் மட்டும் கேக்குறதுக்குன்னே சிலர் வருவாங்க. 'ஹீரோ- ஹீரோயினுக்குக் காதல் வந்துருச்சு'ன்னு சொன்னா, 'அது எப்படின்னே காதல் வந்துச்சு?'னு கேப்பாங்க. 'அட பாத்ததும் காதல் வந்துருச்சுப்பா'ன்னா 'அதுக்கு ஒரு லாஜிக் வேணும்லண்ணே?'னு கேப்பாங்க. நீங்களே சொல்லுங்க, என்னைக்காவது காதல் லாஜிக் பார்த்து வந்திருக்கா? அவங்க கேக்குற அந்தக் கேள்விக்கு என்கிட்ட பதில் இருந்ததில்லை. காதல் எதனால வருதுன்னு இப்பவும்  காதல் செய்யும் பெரும்பாலானவங்களுக்குத் தெரியாது. காதல் அப்படித்தான்...

 

rk poojai



சினிமாவில் வாய்ப்புத் தேடிய போது பாண்டியராஜன்கிட்ட பழக்கம் ஏற்பட்டு, ஆண்பாவம் படத்துல அவர் கூட வேலை பார்த்து, 'ஆண்பாவம் அஸிஸ்டண்ட்ஸ்ப்பா'னு தமிழ் சினிமா துறையில் மரியாதையாகப் பார்க்கப்பட்டு கொஞ்சம் மகிழ்ச்சியாக அமைந்த காலம். படம் இயக்குற வாய்ப்பும் அமைஞ்சது. 'காதல் நிலம் வேண்டும்'னு படத்துக்கு டைட்டில் வச்சேன். 'காணி நிலம் வேண்டும்'னு பாரதி பாடியிருக்கார்ல? அதைப் போல வைக்கலாம்னு வச்சது. அதுக்கப்புறம் டைட்டில் சரியில்லைன்னு பாண்டியராஜன் மாத்த சொன்னார். சரின்னு எங்க ஸ்டைல்லயே 'காக்கா கடி'ன்னு படத்துக்குப் பெயர் வச்சேன். படம் ஷூட்டிங்கெல்லாம் முடிந்து சென்சாரும் பண்ணியாச்சு. படம் வந்துவிடும் என்ற நம்பிக்கையில வீட்டில ரொம்ப நாளா பண்ண சொல்லிக்கொண்டிருந்த திருமணத்தை செய்துக்கலாம்னு முடிவு பண்ணினேன். டைரக்டர் ஆகிட்டுதான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு வீட்டில் சவாலே விட்டிருந்தேன். சரி, படம்தான் முடிஞ்சதே, சென்சாரும் ஆகிடுச்சேன்னு நம்பிக்கையோட கல்யாணம் பண்ணிக்கிட்டேன். ஆனா, அந்தப் படம் இப்போ வரைக்கும் வெளிவரல. இப்போ யோசிக்கிறேன், 'நல்ல வேளை, முதல் படம் வெளிவந்துதான் கல்யாணம் பண்ணிக்குவேன்'னு சபதம் போடல.

 

 


அதுக்குப்பிறகு கே.எஸ்.ரவிக்குமார் கூட நாப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் அசோசியேட் டைரக்டர், வசனம் இப்படி வேலை பார்த்தேன். 'பெரிய குடும்பம்'னு ஒரு படம் பண்ணோம். நூறு நாள் வெற்றிகரமா ஓடுச்சு. ஜெமினி கலர் லேப் உரிமையாளர்தான் அந்தப் படத்தைத் தயாரித்தார். அது வெற்றியடைந்தவுடன் அடுத்த படம் உடனே தயாரிக்க நினைத்து, இயக்குறதுக்கு என்னைக் கூப்பிட்டாங்க. நானும் கதை ரெடி பண்ணி ஜெயராம், மீனாவுக்கு சொல்லி எல்லாம் தயாராகி ஷூட்டிங்குக்குப் போய்ட்டோம். முதல் நாள் விவேக், மணிவண்ணன் உள்பட இன்னும் சிலரை வைத்து காமெடி ஸீன் எடுக்குறோம். ஜெயராம், மீனா எல்லாம் மூன்றாவது நாளிலிருந்து ஷூட்டிங் வருவதாகப் பிளான்.

 

 

thodarum



முதல் நாள் நாலு மணிநேரம் ஷூட்டிங் நடந்துருக்கும் ப்ரொடக்ஷன்ல இருந்து ஒரு ஆள் வந்து மெதுவா என் காதுல சொல்றாரு, "சார், இதுக்கு மேல எடுக்க ஃபிலிம் இல்ல"னு. என் பக்கத்துல இருந்த மணிவண்ணன் அதை கேட்டுட்டாரு. "என்னது கலர் லேப் ஓனர்கிட்டயே ஃபிலிம் இல்லையா?"னு சத்தமா கேக்குறாரு. எனக்கு ஒரே சங்கடம். "இல்ல சார், இது ஸ்பெஷல் ஃபிலிம்...அது இது"னு சமாளிக்க முயற்சி பண்றேன். அவரு, "லேப் ஓனர் உனக்கு ப்ரொடியூசர் ஆகியும் உன் படத்துக்கு ஃபிலிம் இல்லையேடா...நல்ல லக்டா"னு வருத்தமும் கிண்டலும் கலந்து சொல்லிட்டுப் போய்ட்டார். வருத்தமும் கிண்டலும் எப்படி கலக்க முடியும்? கலக்க முடியும், நம்மளோட வருத்தத்தை நாமளே கிண்டல் பண்ணி கடந்து போனா ரெண்டும் கலக்கும். என் வாழ்க்கையே அப்படித்தான் இருந்தது.1987ல முதல் படம் பண்ணினேன், அதுவும் வரல. 1997ல இந்தப் படம் ஆரம்பிச்சு முதல் நாளே பிரச்சனை. அடுத்த நாள் ஷூட்டிங் போலாம்னு நினைக்க, வந்தது ஃபெஃப்ஸி (FEFSI) ஸ்ட்ரைக். அவ்வளவுதான் படம் நின்றுச்சு. இப்படிப்பட்ட அதிர்ஷ்டசாலி நான். திரைப்படங்கள் எவ்வளவு முற்போக்கு பேசினாலும் திரைத்துறையில் இன்னும் அதிர்ஷ்டமெல்லாம் இருக்கு. அதெல்லாம் பார்த்துதான் வாய்ப்பு தரப்படுது.

 

thodarum shoot



ஸ்ட்ரைக் எல்லாம் முடிஞ்சு சுமூகமாகி, திரும்பவும் அந்த தயாரிப்பாளர் தரப்புல என்னைக் கூப்பிட்டாங்க. ஆர்வமாகப் போனேன், அவுங்க 'அஜித்கிட்ட போய் கதை சொல்லுப்பா'ன்னாங்க. இருந்த ஆர்வமெல்லாம் டக்குன்னு காணாமப் போய்டுச்சு. அஜித் அப்போதான் 'காதல் கோட்டை ஹிட் கொடுத்திட்டு அடுத்தடுத்து படம் பண்றார். நான் வைத்திருந்தது குடும்பக்கதை, ஹீரோவுக்கு குழந்தை இருக்கும். அஜித் எப்படி ஒத்துக்கொள்வார்? "இதெல்லாம் ஒத்து வராது சார்"னு சொல்லிட்டு கிளம்புனேன். அவர்கள் விடவில்லை, "நீ போய் சொல்லு, என்ன நடக்குதுன்னு பாப்போம்" என்றார்கள். நானும் போய் கதை சொல்லிட்டு கிளம்பிட்டேன். அஜித் வெளியில என்னைப் பற்றி விசாரித்தார். நம்ம கதைதான் தெரியுமே... சொல்லியிருக்காங்க, 'பூஜை போட்ட படம் நின்னுருச்சு, டிஸ்கஷன் பண்ண படம் நின்னுருச்சு, டைரக்ட் பண்ணி முழுசா எடுத்த படம் நின்னுருச்சு... இப்படி என் அதிர்ஷ்டத்தைப் பற்றி. தமிழ் சினிமாவுல அப்போ இருந்த வேறு யாருனாலும் என்னை டைரக்டராக்க ஓகே சொல்லியிருக்க மாட்டாங்க. ஆனால் அஜித்? "அவரும் என்னை மாதிரியே கஷ்டப்பட்டிருக்கார், அவருக்குதான் வாய்ப்பு தரணும்"னு சொல்லி என் கதையை ஓகே செஞ்சார். இன்று வரை அஜித் மற்ற எல்லோரிலிருந்தும் வித்தியாசமானவர்தான்.

 

 


'தொடரும்' படம் தொடங்கியது. முதல் நாள் ஷூட்டிங் ஆரம்பிப்பதுக்குக் கொஞ்சம் முன்னாடி விக்ரமன் சார்கிட்டயிருந்து போன். 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்' படத்துக்காக அரை நாள் நான் வேணும்னு கேக்குறார். அதுதான் நான் முதன் முதலா நடிச்ச பெரிய கேரக்டர். இந்தப் பக்கம் என்னுடைய படம், நான் இயக்கப்போகும் படம் ஷூட்டிங். 'வரமுடியாது சார், இங்க நான் இல்லைன்னா ஷூட்டிங்கே நடக்காது, நான் வரமாட்டேன்'ன்னு சொல்றேன். அவர் என்னை எப்படியாவது அரை நாள் வர சொல்றார். இந்த டென்ஷனை அஜித் கவனிச்சுட்டார். "என்ன பிரச்சனை?"னு கேட்டார். விக்ரமன் சார் படம், அதுல என் கேரக்டர் பற்றியெல்லாம் சொல்லிவிட்டு ஷூட்டிங்குக்கு அரை நாள் கூப்பிடுற விஷயத்தையும் சொன்னேன்."போயிட்டு வாங்க ரமேஷ் கண்ணா, நல்ல கேரக்டரை மிஸ் பண்ணாதீங்க"னு சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியம். இப்படி ஒரு பதிலை நான் எதிர்பார்க்கல.

 

 

ramesh khann



அஜித், ஹீரா, தேவயானி எல்லோரும் இங்க காத்திருக்க, நான் அங்க போய் நடிச்சுக் கொடுத்துட்டு வந்தேன். ஷூட்டிங்குக்கு டைரக்டரே இல்லாமல் இருந்தது என் வாழ்க்கையிலதான் நடந்திருக்கும்னு நினைக்கிறேன். அதெல்லாம் அஜித் என்ற மனிதரால்தான் சாத்தியம். படம் வெற்றிகரமா ஓடுச்சு. சென்னையில் 83 நாட்கள் ஓடுச்சு. அதுக்கப்புறம் அஜித் கூட தொடர்ந்து படங்கள் நடித்தேன். முன்னாடியே 'காதல் மன்னன்'ல நான் ஒரு சின்ன கேரக்டர், 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்', 'நீ வருவாய் என' படங்களில் அவரு நடிச்சிருந்தார். அதுக்கப்புறம் அமர்க்களம், வில்லன், ஆஞ்சநேயா, அட்டகாசம், வரலாறு இன்னும் பல படங்கள் அஜித் கூட நடிச்சேன். 'எவர் க்ரீன் ஃபிரென்ட் ஆஃப்  அஜித்'னு ஒரு பத்திரிகையில போடும் அளவுக்கு நாங்க இணைந்து நடித்தோம். இப்போ சில வருடங்கள் முன்னாடி 'வீரம்' படத்துக்கும் கூப்பிட்டு வாய்ப்பு தந்தார். இயக்குனர் சிவாகிட்ட கேட்டேன், "நான் ஃபீல்டு அவுட் ஆகிட்டேன், நீங்க என்னை கூப்பிட்டது அஜித்துக்குத் தெரியுமா?" என்று கேட்டேன். "அவர்தான் உங்கள கூப்பிட சொன்னார்"னு சொன்னார் சிவா.

 

 


அஜித்தின் குணமே தனி. ஷூட்டிங் அப்போ கேரவன்ல போய் உக்கார மாட்டார். நடந்து சென்று எல்லோரிடமும் பேசுவார். 'சம்பளம் வந்துருச்சா?'னு கேப்பார். வராதவங்களுக்கு தன்னால் முடிந்த அளவு உதவுவார், சம்பளம் வாங்கித் தர ஏற்பாடு செய்வார். அஜித்க்கு முன்னாடி எம்.ஜி.ஆர்க்குதான் இந்தப் பழக்கம் இருந்தது. அமர்க்களம் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்த பொழுது அஜித்தும் நானும் நிறைய பேசுவோம். நான் இயக்கிய 'தொடரும்' படத்தில் நடித்தபோது நடிகை ஹீராவுக்கும் அஜித்துக்கும் இடையில் காதல் இருந்தது. பின்னர் அது பிரேக் அப் ஆச்சு. அடுத்து அமர்க்களம் ஷூட்டிங்கப்போ ஒருநாள் நாங்க பேசும்போது சொன்னேன், "இதோ பாரு அஜித்து, நமக்கு சினிமா பொண்ணு சரிவரலை, பிரிஞ்சாச்சு. இனி அடுத்து சினிமா ஹீரோயின் வேணாம். குடும்பப் பொண்ணா பாப்போம்"னு சொல்லிக்கிட்டே இருக்கேன், அஜித் என்னைப் பாக்காம அந்தப் பக்கம் யார்கிட்டயோ சைகை மூலம் பேசிக்கிட்டு இருக்கார். யாருடா அதுன்னு பாத்தா ஷாலினி. எனக்கு பக்குனு ஆயிருச்சு. ரெண்டு பேரும் தூரத்திலிருந்தே சைகையில் பேசிக்கொண்டு இருந்தாங்க. இங்க இருந்து இவர் அம்பு விட்டுகிட்டு இருக்கார். ஆரம்பத்துல சொன்ன மாதிரி  காதல் எப்படி வரும்னு கேட்டா அதுக்கு பதில் இல்லை. அஜித்துக்கும் அப்படித்தான். ஆனால், ஷாலினியுடனான அந்தக் காதல் ரொம்ப பலமானது. இப்போ வரைக்கும் அவர்கள் நல்ல தம்பதிக்கு உதாரணமாக இருக்குறாங்க.

 

 

villan



நான் போற விழாக்கள்ல என்கிட்டே பேசுற மக்கள் கேப்பாங்க, "தல எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார், கேட்டதா சொல்லுங்க"னுலாம். நானும் அஜித்தும் அவ்வளவு நெருக்கம்னு அவுங்க நினைக்கலாம். நாங்க அப்படி அடிக்கடி பார்த்துக்கொள்ளும் நட்பெல்லாம் இல்லை. ஆனால், எங்க ரெண்டு பேருக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு நான் நினைக்கிறேன். அதனால்தான் ஒரு டைரக்டராகவும் சரி, நடிகராகவும் சரி, அஜித் எனக்கு நல்லா சப்போர்ட் பண்ணினார்.

அஜித் எனக்கு செய்ததை சொல்லிட்டேன். விஜய் என்னிடம் அடிக்கடி சொல்வதை அடுத்து சொல்றேன்.    

 

முந்தைய பகுதி:

ரஜினியாவது அதைப் பற்றி பேசியிருக்கிறார், கமல் பேசியதே  இல்லை! - ரமேஷ் கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள் #3      

 

அடுத்த பகுதி:

சூர்யா என்னை தெய்வமச்சான்னுதான் கூப்பிடுவார்... ஏன் தெரியுமா? ரமேஷ்கண்ணா எழுதும் திரையிடாத நினைவுகள்#5
 

                                                              

                                                            

Next Story

வீடு திரும்பினார் அஜித்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Ajith returned home

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவலில் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா நேற்று விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது அஜித் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'அஜித்திற்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை'- மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
 'Treatment given to Ajith' - manager Suresh Chandra explains

அஜித் குமார், துணிவு படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதையடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

வருகிற 15ஆம் தேதி விடாமுயற்சியின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், அதற்காக வெளிநாடு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்த சூழலில் நேற்று அஜித் குமார் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதனை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 'திட்டமிட்டபடி அடுத்த வாரம் அஜர்பைஜானில் நடைபெறும் விடாமுயற்சி படப்பிடிப்பில் நடிகர் அஜித்குமார் பங்கேற்பார். காதுக்கு அருகில் மூளைக்கு செல்லும் நரம்பில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அஜித் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இரவே வீக்கத்திற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு மூளையில் கட்டி என வெளியான தகவல் உண்மையில்லை. சிகிச்சை முடிந்து தற்போது ஓய்வில் உள்ளார். இன்று இரவு அல்லது நாளை அஜித் வீடு திரும்புவார்' என சுரேஷ் சந்திரா விளக்கமளித்துள்ளார்.