'AIADMK that will not give up on you' - Thaveka who bowed to Sengottaiyan on the very first day Photograph: (admk)
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இன்று (27.11.2025) காலை 10:00 மணியளவில் இணைத்துக் கொண்டார். சென்னையை அடுத்துள்ள பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் இந்த இணைவு நிகழ்வு நடைபெற்றது.
இதில் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரும், அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சத்யபாமா உள்ளிட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய, கழக, பகுதி நிர்வாகிகளும், செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்களுமான ஏராளமானோர் த.வெ.க.வில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்வில் விஜய், தவெகவின் கட்சி துண்டை செங்கோட்டையனுக்கு அணிவித்து மரியாதை செலுத்திய போது செங்கோட்டையன் அதை ஏற்றுக்கொண்டார். அந்த நேரத்தில் சட்டைப் பையில் வழக்கம் போல ஜெயலலிதா படத்தையே வைத்திருந்தார் செங்கோட்டையன். கட்சியையும் தாண்டி ஜெயலலிதா மீது அவர் வைத்திருந்த விசுவாசத்தை காட்டும் விதமாக இது இருந்தாலும் புதிய கட்சி என்று வந்தவுடன் அதற்கான நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். கடைபிடிக்காமல் போனால் அது சிறிய நெருடலை ஏற்படுத்தாமல் இருந்திருக்காது. காரணம் தவெகவிற்கென கொள்கை தலைவர்களை அக்கட்சி அறிவித்துள்ளது என்பது இதில் பார்க்க வேண்டிய ஒன்று. அந்த கொள்கை தலைவர்களில் ஜெயலலிதா இல்லை என்பதும் முக்கியமான ஒன்று.
இதனைத் தொடர்ந்து செங்கோட்டையன் மற்றும் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.நிர்மல் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் செய்தியாளர்களை கூட்டாகச் சந்தித்தனர். அப்போது எதார்த்தமாக ஆதவ் அர்ஜுனா மீண்டும் தவெக துண்டை செங்கோட்டையனுக்கு அணிவிக்க... ''வேண்டாம் அய்யா அதைவேற கிண்டல் அடித்துக் கொண்டு இருப்பாங்க...' என தெரிவித்து அணிய மறுத்துவிட்டார். இதுவும் எளிதில் கடந்து போகும் ஒன்றுதான் என்றாலும் சற்று நெருடலையே ஏற்படுத்தி இருக்கும். காரணம் புதிதாக சேர்ந்த கட்சியின் மீதான பற்று மற்றும் பார்வையை இது கேள்விக்குறியாக்கும். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட, பல துறைகளில் அமைச்சராக பணியாற்றி முக்கிய முகம் கட்சிக்கு வரும் போது நடக்கும் முதல் செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் விஜய் இல்லாததும் கவனிக்கத்தக்கது.
தொடர்ந்து செங்கோட்டையனுடன் படையெடுத்த தவெகவினர் சென்னை மெரினா கடற்கரையில் முகாமிட்டனர். முன்னதாக அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினர். இதற்கிடையே ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்த செங்கோட்டையன் நகர, தவெக கூட்டம் அப்படியே ஜெயலலிதா நினைவிடத்திலும் மரியாதை செலுத்தியுள்ளது. தொடர்ந்து பெரியார் திடலில் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் செங்கோட்டையனின் சட்டை பாக்கெட்டில் காலையில் இருந்த ஜெயலிதாவின் படம் அப்படியே இருந்தது.
ஜெயலலிதா தவெகவின் கொள்கை தலைவராகவோ அல்லது கட்சி பின்பற்றும் தலைவராகவோ இல்லாத நிலையில் சிறிதும் பொறுப்படுத்தாமல் செங்கோட்டையனுக்காக ஜெ.நினைவிடத்திலும் தவெக மரியாதை செலுத்தியுள்ளது பேசு பொருளாகி உள்ளது. காரணம் தனக்கென தவெக கொள்கை தலைவர்களை ஏற்கனவே அறிவித்திருந்தாலும் அதையும் தாண்டி விஜயகாந்தை மதுரை மாநாட்டிலும், அண்ணா, எம்ஜிஆரை மக்கள் சந்திப்பு பயணத்தில் கூடுதல் இன்ஸ்பிரேசன் தலைவர்களாக விஜய் சேர்த்துக்கொண்டார்.
இந்தநிலையில் செங்கோட்டையன் ஜெயலலிதாவை விட்டுக்கொடுக்காமல் அந்த தலைவர்கள் லிஸ்டில் ஜெ.வையும் இனி சேர்த்துக்கொள்ளுங்கள் என பணித்தது போல் இருக்கிறது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியே தொடர்ந்தால் நாளை வேறு ஒரு பெரும் புள்ளி கட்சிக்குள் நுழைத்தால் அவர் போற்றும் தலைவரையும் தவெக போற்றும் நிலை வராதா என்ற கேள்வியும் எழுகிறது.
புகுந்த முதல் நாளிலேயே செங்கோட்டையன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்துக் கொடுத்துள்ளது தவெக. தவெக கட்சியில் செங்கோட்டையன் சேர்ந்தாரா அல்லது தவெக செங்கோட்டையனிடம் சேர்ந்துள்ளதா? பின்னாளிலும் இது தொடருமா? என்பது போக போகதான் தெரியும் என்கிறார்கள் அரசியல் உற்று நோக்கர்கள்.
Follow Us