Skip to main content

வேட்பாளர் தேர்வில் கடுப்பில் அதிமுக ! உற்சாகத்தில் திமுக !

தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் பலத்த சிபாரிசு ஒருபக்கம் இருந்தாலும் கட்சியினர் மத்தியில் இருக்கும் செல்வாக்கு, சாதி அடிப்படையிலான வாக்கு வங்கி நிலவரம் இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் திண்டுக்கல் தொகுதியின் தி.மு.க. வேட்பாளராக வேலுச்சாமியை அறிவித்திருக்கிறார் மு.க. ஸ்டாலின். 

periyasamyதொகுதி தி.மு.க.வுக்குத்தான் என உறுதியானதும் எம்.எல்.ஏ.க்களான ஒட்டன்சத்திரம் சக்கரபாணி, நத்தம் ஆண்டி அம்பலம், பழனி செந்தில்குமார் ஆகியோருடன் பலகட்ட ஆலோசனைகளுக்குப் பின்தான் வேலுச்சாமியை செலக்ட் பண்ணியிருக்கிறார் ஐ.பெரியசாமி. வேலுச்சாமிக்காக கணிசமான தொகையை செலவழிக்கவும் தயார் என கட்சித் தலைமையிடம் ஐ.பி. சிக்னல் போட்ட பிறகு எல்லாம் சுமுகமாக முடிந்திருக்கிறது. 

ஒட்டன்சத்திரம் தொகுதிக்குள் வரும் ஜவ்வாதுபட்டியைச் சேர்ந்த விவசாயியான வேலுச்சாமி கொங்கு வெள்ளாள கவுண்டர் சமூத்தைச் சேர்ந்தவர். வேலுச்சாமியின் மாமனார் சண்முகம், வளையப்பட்டி ஊராட்சி தி.மு.க. செயலாளராக இருக்கிறார். ஒட்டன்சத்திரம் ந.செ.வெள்ளைச்சாமி, ஒ.செ. ஜோதீஸ்வரன் ஆகிய இருவரும் வேலுச்சாமியின் நெருங்கிய உறவினர்கள். பலமான சமூக பின்னணி இருந்தாலும், சாதிப்பாகுபாடு பார்க்காமல் கட்சியினர் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் வேலுச்சாமிக்கு சீட் கிடைத்திருப்பதால் உ.பி.க்களிடையே உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது. 
 

ips


தி.மு.க.வில் நிலவரம் இப்படி என்றால் அ.தி.மு.க.வில் கொந்தளிப்பு இன்னும் அடங்கவேயில்லை. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தபோது நடந்த திண்டுக்கல் இடைத் தேர்தலில் வெற்றிவாகை சூடி, அக்கட்சியின் அரசியல் வாழ்வுக்கு அச்சாரம் போட்ட தொகுதி. அப்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது தி.மு.க. அப்படிப்பட்ட திண்டுக்கல் தொகுதியை, கூட்டணிக்கட்சியான பா.ம.க.வுக்கு தாரை வார்த்த தலைமை மீது கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் மாவட்ட ர.ர.க்கள். 

sakrapani

 இந்த மாவட்டத்தைப் பொறுத்த வரை மாஜி நத்தம் விஸ்வநாதனும் "பேச்சு' புகழ் அமைச்சரான சீனிவாசனும் எப்போதுமே எதிரும் புதிருமாக வரிந்து கட்டுவார்கள். "எனது மைத்துனன் கண்ணனுக்கு மா.செ. பதவியும் எம்.பி. சீட்டும் கொடுங்க, என்ன செலவானாலும் நான் பார்த்துக்குறேன்'' என இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் பிட்டைப் போட்டிருக்கிறார் நத்தம். 
 

viswanathan

 விடுவாரா சீனி, "கட்சியின் சீனியரான மருதராஜை மா.செ. பதவியிலிருந்து தூக்கக்கூடாது' என கொடி பிடித்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் நத்தத்தையும் சீனியையும் கூப்பிட்டு பஞ்சாயத்து பண்ணியும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. பார்த்தார்கள் இ.பி.எஸ்.சும் ஓ.பி.எஸ்.சும் "நீங்க இப்படியே மல்லுக்கட்டிக்கிட்டிருங்க, தொகுதியை பா.ம.க.வுக்கு கொடுத்துருவோம்'' என முடிவெடுத்து அப்படியே செய்தும்விட்டார்கள். 

தொகுதியின் பா.ம.க. வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜோதிமுத்துவும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர்தான். ஒட்டுமொத்த தொகுதியிலும் ஒரு லட்சம் வன்னிய சமூக வாக்குகள் இருக்கின்றன. பா.ம.க.வுக்கென இருக்கும் வாக்கு வங்கி வீக்காகவே இருக்கிறது. இதில் கிறிஸ்தவ வன்னியர்கள் பா.ஜ.க. இடம்பெற்றிருக்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்கும் வாய்ப்பு குறைவு என்பதால் ஜோதிமுத்து ரொம்பவே பாடுபட வேண்டும்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...