Advertisment

எடப்பாடி தப்பி விட்டார்... அ.தி.மு.க. தான் மாட்டிக் கொண்டது!!! -எஸ்.எஸ்.சிவசங்கர்

ddd

Advertisment

அதிகாரப்பூர்வமாக எந்தவித பேச்சுவார்த்தையும் இல்லாமல், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது என்று அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது, "அடிமை அ.தி.மு.க அரசு, அடிமை அ.தி.மு.க அரசு", என ஓயாமல் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சொல்லி வந்தபோது, அ.தி.மு.க அமைச்சர்கள் வெகுண்டெழுந்து பதிலளித்து வந்தார்கள். நேற்று ஈ.பி.எஸ்ஸும், ஓ.பி.எஸ்ஸும் இணைந்து அடிமை சாசனத்தில் கையெழுத்திட்டு, அமித்ஷா காலில் வீழ்ந்து, உதயநிதி சொல்லை உண்மையாக்கி விட்டார்கள்.

சமீப காலம் வரை, "தேர்தல் வரை தான் கூட்டணி இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை" என்று சில அமைச்சர்கள் சொன்னார்கள். பிறகு, "தேர்தல் வந்தால்தான் கூட்டணி முடிவாகும்", என வேறு சில அமைச்சர்கள் சொன்னார்கள். பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என காட்ட சில வித்தைகளை எல்லாம் காட்டினார்கள்.

Advertisment

அந்த வித்தையின் உச்சகட்டம் தான், அ.தி.மு.க அரசு 'அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது விசாரணை கமிஷன்' அமைத்தது என்று சொல்லலாம். சூரப்பா ஓர் ஆர்.எஸ்.எஸ் ஆள். அவரை நியமிக்க சொன்னது பா.ஜ.க தலைமை. நியமித்தவர் கவர்னர். அதனால் சூரப்பா மீதான நடவடிக்கையை தங்களுக்கு எதிரானதாக ஆர்.எஸ்.எஸ் கருத வாய்ப்பு. அதன் எதிரொலி தான் அமித்ஷாவின் பயணமும், அ.தி.மு.கவின் அறிவிப்பும்.

இதை எப்படி தொடர்பு படுத்த முடியும் என்ற கேள்வி எழலாம். கேள்வி சரி தான், ஆனால் பதில் அது தான்.

'குரங்கு தன் குட்டியை விட்டு ஆழம் பார்க்கும்' என்பது போல, உயர்கல்வித் துறை அமைச்சர் மூலம் ஆளுநரை சீண்டி, பா.ஜ.கவின் ரியாக்ஷன் என்ன என்று பார்த்தார்கள். ரியாக்ஷன் அமித்ஷா வடிவில் வந்து விட்டது.

பா.ஜ.க அமைதியாக இருந்திருந்தால், கூட்டணி இல்லை என்பதை நோக்கி முன்னேறி இருப்பார்கள். ஆனால் பா.ஜ.க அமைதி கலைத்து விட்டது.

இரண்டு கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கும் முன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இருக்கும், அதற்கு பல தயாரிப்புகள் நடைபெறும். கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் இணைந்த போது அரங்கேறிய காட்சிகளை நினைவு கூர்ந்தால், இந்த கூட்டணி அறிவிப்பின் 'உண்மை நிலை' புரியும்.

திடீரென "அமித்ஷா டூரை" அறிவித்தார் தமிழக பா.ஜ.க தலைவர் முருகன். "அரசு நிகழ்ச்சி மட்டும்", என்றார். பிறகு, "கட்சி நிகழ்ச்சியும்", என்றார்.

அமித்ஷா கலந்து கொள்ளும் அரசு நிகழ்ச்சியை அவசர, அவசரமாக திட்டமிட்டார்கள். தமிழக அரசின் விழா அது. தமிழக அரசின் எந்த துறை நிகழ்ச்சியாக இருந்தாலும், அந்த அமைச்சர்களை அறிவிக்க விடாமல், தானே அறிவிப்பதும், தானே விழா நடத்துவதும் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பழக்கம், வழக்கம்.

ஆனால் இந்த அரசு நிகழ்ச்சிக்கு அமித்ஷாவை சிறப்பு விருந்தினராக அழைத்தது அ.தி.மு.க. அதை தவிர வேறு வழியில்லை எடப்பாடிக்கு.

அதுவும் இது எடப்பாடி கையில் இருக்கும் துறையின் நிகழ்ச்சி. இதிலேயே அமித்ஷா சிறப்பு விருந்தினர் என்றால் இது பல செய்திகளை சொல்கிறது. இந்த நிகழ்வு எடப்பாடி கையில் இருந்து 'அதிகாரம்' அமித்ஷா கைக்கு மாறுவதை காட்டும் 'இண்டிகேட்டர்'. ஜெயலலிதா உடலை வைத்துக் கொண்டு, அவசர அவசரமாக பதவியேற்றது போல் தான், இந்த அமித்ஷாவின் அவசர பயணமும்.

அமித்ஷா விமானத்தில் இருந்து இறங்கியதில் இருந்து தங்கும் அறைக்கு செல்லும் வரையும், அங்கிருந்து விழா நடக்கும் இடத்திற்கு சென்ற வரையிலும் இருபுறமும் அ.தி.மு.கவினர் திரண்டு நின்று வரவேற்பு அளித்தது, "அமித்ஷா தான் அடுத்த தலைமை" என்பதை காட்டுகிறது.

ஜெயலலிதா, எடப்பாடிக்கு கொடுக்கப்பட்ட வரவேற்பு போலவே, அமித்ஷாவுக்கு அளிக்கப்பட்டது இதை வெளிப்படுத்துகிறது.

dddd

அரசு நிகழ்ச்சிக்கு முன், அமித்ஷாவை ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோர் சந்திக்கவில்லை, நிகழ்ச்சிக்கு பிறகே சந்தித்தனர். அதனால், நிகழ்ச்சிக்கு முன்பாக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடக்கவில்லை. பேச்சுவார்த்தை இல்லாமல், நேரடியாக நிகழ்ச்சியில், "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்", என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அதை வழிமொழிந்தார்.

டெல்லியில் இருந்து வந்த கட்டளைப்படி, "அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி"யை அறிவித்தார்கள் இவர்கள். அடிமைகள் அடிபணிந்ததை அமித்ஷா ஆனந்தமாக தலையசைத்து ஏற்றுக் கொண்டார்.

கூட்டணியை அறிவித்திருக்காவிட்டால் என்ன நடந்திருக்கும் என்ற கேள்வி சிலருக்கு எழலாம். சில நாட்களுக்கு முன் கவர்னர் டெல்லி சென்றது நினைவிருக்கும், அப்போது கவர்னர் கொடுத்த "சீக்ரெட் பைல்கள்" அ.தி.மு.க அமைச்சர்கள் ஊழல்கள், கொள்ளைகள், கோல்மால்களை பட்டியலிட்டன. அது குறித்த "எச்சரிக்கை தகவல்கள்" தான் எடப்பாடியை மீண்டும் "தெண்டனிட" வைத்தது. அவருக்கு அது பழக்கமானது தானே. ஏற்கனவே சசிகலா காலை நோக்கி தவழ்ந்து தான் முதல்வரானார். இப்போது அமித்ஷா காலில் வீழ்ந்து "ரெய்டுகளில்" இருந்து தப்பி உள்ளார். எடப்பாடி தப்பி விட்டார், அ.தி.மு.க தான் மாட்டிக் கொண்டது. இவ்வாறு கூறியுள்ளார்.

admk eps S. S. Sivasankar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe