Skip to main content

மோடி மீதான காதல்... - அ.தி.மு.கவே அளித்த ஒப்புதல் வாக்குமூலம்!

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
​eps - modi

அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.எஸ். சிவசங்கர் கட்டுரை


இந்திய அரசியலில் அதிமுகவும் பாஜகவும் இரட்டைகுழல் துப்பாக்கியாய் செயல்படுவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிட்டன. அதற்கான பாதை தெளிவாக இருக்கிறது என்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான 'நமது அம்மா'வில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துக்கொண்டார் அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எஸ்.எஸ். சிவசங்கர்.
 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, அ.தி.மு.க. பா.ஜ.க. கட்டுப்பாட்டிற்கு சென்று விட்டது என்று தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அழுத்தமாக சொல்லி வந்தார். அதை சில அ.தி.மு.க. அமைச்சர்கள் மறுத்த வந்த நிலையில் தான், 22.04.2018 அன்று வெளியான அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான 'நமது அம்மா' நாளிதழில் ஒரு கட்டுரை வெளியாகியுள்ளது. அதனை அ.திருமலை என்பவர் எழுதியிருக்கிறார்.

 

அந்தக் கட்டுரையின் தலைப்பு, "தி.மு.க நடத்தும் போராட்டங்கள் காவேரிக்காக அல்ல, மத்திய மாநில அரசுகளின் ஒற்றுமையை சீர்குலைக்கவே". தலைப்பே அரசுகளின் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. கட்டுரையோ, கட்சிகளின் காதலை வெளிப்படுத்துகிறது. 
 

கட்டுரையில், மோடிக்கு கருப்புக் கொடி காட்டியதற்காக பொங்குகிறார். மோடி மீதான அவர்கள் காதல் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை இது விளக்குகிறது.
 

ஜெயலலிதா மறைந்த உடனேயே, அ.தி.மு.க ஆட்சி பாரதிய ஜனதா கட்சியிடம் பணிந்ததை, அதன் நடவடிக்கைகளே வெளிப்படுத்தின. எதை எல்லாம் ஜெயலலிதா மறுத்து வந்தாரோ, அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு மத்திய அரசிடம் மண்டியிட்டது அ.தி.மு.க அரசு.
 

மத்திய அரசு மின் துறையில் அமல்படுத்திய உதய் திட்டத்தை ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் போதே, மின் துறை அமைச்சர் தங்கமணி டெல்லி சென்று, உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டார்.
 

அதே போல உணவு பாதுகாப்பு சட்டம் மாநில உரிமைக்கு எதிரானது என ஜெயலலிதா ஏற்றுக் கொள்ளவில்லை. அதையும் ஏற்றுக் கொண்டது அ.தி.மு.க அரசு.
 

கிராமப்புற ஏழை மாணவர்களை பாதிக்கக் கூடிய 'நீட்' தேர்வை கலைஞரை போலவே ஜெயலலிதாவும் தமிழகத்தில் நுழையாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் அதையும் ஏற்றுக் கொண்டது ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க அரசு.
 

இப்படி தி.மு.க ஆட்சி தடுத்த திட்டங்களை, ஜெயலலிதா தடுத்த திட்டங்களை நுழைய அனுமதித்த போதே, அ.தி.மு.க பாரதிய ஜனதாவுடன் கரம் கோர்த்துள்ளதை தமிழக மக்கள் உணர்ந்தார்கள்.
 

ஓ.பன்னீர்செல்வம் அணியையும், எடப்பாடி பழனிசாமி அணியையும் பஞ்சாயத்து பேசி சேர்த்து வைத்ததே, மோடி அ.தி.மு.க மீது கொண்ட அக்கறையால் தான். எதிர்காலத் தேர்தல் கூட்டணிக்கு தயார் செய்வதற்கான அடிப்படை பணி தான் அது.

 

eps - modi 600.jpg


110 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட, மெஜாரிட்டி இல்லாத எடப்பாடி பழனிசாமி அரசு அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, மோடியின் கருணை தான் காரணம் என்பதை சின்னக் குழந்தைகள் கூட அறியும்.
 

18 எம்.எல்.ஏக்கள் பதவியிழப்பு வழக்கும், 11 எம்.எல்.ஏக்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வழக்கும் விசாரணை முடிந்தும் தூங்குகிறது என்றால் காரணம் யார் என்பதை யாரும் அறிய மாட்டார்களா?.
 

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தான், காவிரி மேலாண்மை வாரியம் பிரச்சினை அமைந்திருக்கிறது.
 

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு உச்சநீதிமன்றம் கொடுத்த கெடு நாள் வரை நாட்களைக் கடத்தி விட்டு, கடைசி நாளில் "ஸ்கீம்" என்று தீர்ப்பில் சொன்ன வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு மீண்டும் உச்சநீதிமன்றம் சென்றது மத்திய அரசு.
 

அப்போது அதற்காக சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்த போது, கடைசி நாள் வரை காத்திருந்து பார்ப்போம் என்று பதில் சொன்னார் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம்.
 

அதே நேரத்தில் நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் முடக்கியது அ.தி.மு.க. அதற்கு காவிரி பிரச்சினைக்காக தீர்வு கிடைக்கும் வரை முடக்குவோம் என அ.தி.மு.க கூறியது.
 

ஆனால் அ.தி.மு.க நாடாளுமன்றத்தை முடக்க உண்மையான காரணம் என்ன என்பதை அகில இந்திய கட்சிகள் வெளிப்படுத்தின. பாரதிய ஜனதா ஆட்சி மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துக் கொள்ளாமல் தடுக்கவே அ.தி.மு.க நாடாளுமன்றத்தை முடக்கியது என்ற உணமையை சொல்லி டெல்லியில் காறித் துப்பி விட்டார்கள்.
 

இப்படியாக வெளியில் தெரியாமல் கள்ளக்காதலாக இருந்த உறவை, இந்தக் கட்டுரையாளர் திருமலை நல்லக் காதலாக நிறம் மாற்ற முனைந்திருகதிட்டங்களை தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும் என பதில் அளித்திருக்கிறார் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை. பூசி மெழுகியிருக்கிறாரே ஒழிய, கூட்டணி இல்லை என சொல்லவில்லை.
 

கூட்டணி குறித்து கருத்து சொல்ல கட்டுரையாளருக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார். கிராமத்தில் சொல்லும் கதை தான் நினைவு வருகிறது.
 

பிச்சை எடுத்து வந்தவரிடம்,  ஒன்றும் இல்லை என்று சொல்லி திருப்பி அனுப்பினார் மருமகள். பிச்சைக்காரரை திருப்பி அழைத்த, மாமியார் சொன்னார், "இல்லை என்று சொல்ல மருமகளுக்கு அதிகாரம் கிடையாது. எனக்கே அதிகாரம். நான் சொல்கிறேன், ஒன்றும் இல்லை. போய் வா".
 

கட்டுரையாளருக்கு அதிகாரம் இல்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கே அதிகாரம் இருக்கிறது. அவர் அறிவிப்பார் அவர்கள் நல்லுறவை.
 

ஒரு விஷயத்தை வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.
 

அது ," பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்" என்பது தவறு, என்று அ.தி.மு.கவினர் சொல்வதை ஏற்றுக் கொள்ளலாம்.
 

அதை ஏன் என்று பார்ப்பதற்கு முன்பாக ஓர் செய்தி.
 

சேகர் ரெட்டி என்ற மணல் மாஃபியா வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டில், அமைச்சர்கள் உட்பட பல அ.தி.மு.க புள்ளிகள் பெயர்கள் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளது. அந்த சேகர் ரெட்டி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்ஸின் அத்தியந்தக் கூட்டாளி என்பது வெளிப்படையான விஷயம். அந்த ரெய்டு விசாரணை, கிணற்றில் போட்ட கல் ஆகக் கிடக்கிறது.
 

அதே போல முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீட்டில் நடந்த ரெய்டு பரபரப்பாக இருந்தது. அந்த கதையும் தெரியவில்லை.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நிறுத்த தேரதல் கமிஷன் சொன்ன காரணம், வருமான வரித்துறையின் புகார் தான். வாக்காளர்களுக்கு அ.தி.மு.க பணம் கொடுத்தது என்பது தான் புகார். பணம் கொடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர், அதை வினியோகித்தவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்கள் என்றது வருமான வரித்துறை. அதற்கு ஆதாரம், விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டில் கிடைத்தது என்றது வருமான வரித்துறை.
 

s-s-sivasankar


தள்ளி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தேரதலும் நடந்து முடிந்து விட்டது. ஆனால் விஜயபாஸ்கர் மீதான குற்றம் விசாரிக்கப்படாமலே இருக்கிறது. குற்றவாளி முதல்வரும் விசாரிக்கப்படவில்லை.
 

இந்த இடத்தில் இன்னொரு செய்தியை பொருத்தி பார்க்க வேண்டும்.
 


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மத்திய அரசை எதிர்த்துப் போராடிய நடிகர் சத்தியராஜ், "ராணுவம் வந்தாலும் அஞ்ச மாட்டோம்" என்றார். அதற்கு பதிலளித்த பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் ," ராணுவத்தை கண்டு பயப்பட மாட்டீர்கள். சரி, வருமான வரித்துறை கண்டு பயப்பட  மாட்டீர்களா?" என்றுக் கேட்டார். வருமானவரித் துறை தங்கள் கையில் இருக்கும் ராணுவத்தை மிஞ்சிய ஆயுதம் என்று சொல்லாமல் சொன்னார்.
 

அந்த வருமான வரித்துறை அ.தி.மு.க பிரமுகர்கள் மீது நடத்திய ரெய்டுகள் நிலுவையில் இருக்கின்றன. அ.தி.மு.க அரசு மத்திய பா.ஜ.க அரசிற்கு கட்டுப்பட்டு, அடிப்பணிந்து, அண்டிக் கிடக்கிறது.
 

அதனால் 'பா.ஜ.கவும், அ.தி.மு.கவும் இரட்டைக் குழல் துப்பாக்கி' என்பது தவறு தான்.
 

பா.ஜ.க ஒற்றைக் குழல் துப்பாக்கி தான். அது, அ.தி.மு.கவின் முதுகின் மீது அழுந்தி இருக்கும் துப்பாக்கி !