இயல், இசை, நாடகம் என பல்வேறு கலைப் பிரிவுகள் சாதனையாளர்களாக உள்ளவர்களுக்கு 2021, 2022, 2023ம் ஆண்டுக்கான கலைமாமணி விருதுகள் மற்றும் பாரதியார், எம்.எஸ்.சுப்புலெட்சமி, பாலசரசுவதி விருதுகளுக்கான சாதனையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு விருது வழங்க தேர்வு பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த விருதுகளை அடுத்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க உள்ளார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி முனைவர் முருகேச பாண்டியனுக்கு பாரதியார் விருதும், பத்மபூசன் கே.ஜே. யேசுதாஸ்க்கு எம்.எஸ். சுப்புலெட்சிமி விருதும், விராலிமலை சதிராட்டக் கலைஞர் பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாளுக்கு பாலசரசுவதி விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பாலசரசுவதி விருது பெற உள்ள விராலிமலை முத்துக்கண்ணம்மாள் யார்? :
தேவதாசி முறை சென்னை மாகாணத்தில் 1947ம் ஆண்டு ஒழிக்கப்பட்டபோது அந்த முறையின் கீழ் கோயில்களில் நடனமாடி வந்தவர்களில் ஒருவர் தற்போது எஞ்சியுள்ளார். தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட தேவதாசி மரபின் கடைசி வாரிசாகப் பார்க்கப்படும் 85 வயது முத்துக்கண்ணம்மாள் இன்றும் சதிர் நடனம் ஆடுகிறார். பொட்டு கட்டி கோயில்களில் கடவுகள்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள் தான் தேவதாசிகள் அல்லது தேவரடியார்கள் எனப்பட்டனர். இவர்கள் கோயிலில் சதிர் நடனம் ஆடி கடவுள்களையும் பக்தர்களையும் மகிழ்வித்தனர். சுவாமி வீதி உலா என்றால் சதிர் நடனம் காண கிராமத்து இளைஞர்களும், முதியவர்கள் படையெடுத்து வந்துவிடுவார்களாம்.
1947ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்க சட்டம் கொண்டுவரப்பட்டது. விராலிமலை சுப்பிரமணியர் கோயிலில் சதிர் நடனம், குறவஞ்சி என்றால் சுற்றியுள்ள அத்தனை கிராமங்களும் அங்கே தான். இதைப் பார்த்து பொள்ளாச்சி வரை இந்த கலைஞர்களை அழைத்துச் சென்று நடனமாட வைத்து மகிழ்ந்துள்ளனர். விராலிமலையைச் சேர்ந்த முத்துக்கண்ணம்மாள் உடலில் வயதுக்கான தளர்வு இருந்தாலும் அவரது கால்களும், கைகளும் சதிர் நடனத்தின் மீதான ஆர்வமும், பற்றும் அவரை இன்றும் ஆட வைத்துக் கொண்டு தான் உள்ளது.
ஏழு வயதில் விராலிமலை சுப்ரமணியசாமிக்கு பொட்டுக்கட்டிவிடப்பட்ட இவர், ஆங்கிலேயர் காலத்தில், புதுக்கோட்டை சமஸ்தானத்தால் அங்கீகரிக்கப்பட்ட 32 தேவரடியார்களில் ஒருவராக இருந்தார். 1947ஆம் ஆண்டில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் கொண்டுவந்த பின்னர் கோயில் சேவகத்தைப் பலர் நிறுத்திவிட்டாலும், தான் மட்டும் நடனம் ஆடுவதை நிறுத்தவில்லை.
''ஏழு வயதில் ஆரம்பித்த நடனம், எப்போதும் என் கால்கள் ஆடுவதையும், என் நாவு பாடுவதையும் நிறுத்தமுடியாது. சுப்ரமணியசாமியே என்னைப் போன்ற 32 தேவரடியார்களுக்கும் முதல் கணவன். இறைவனை துதித்துப் பாடவும், ஆடவும் நாங்கள் பிறந்துள்ளோம் என்று என் பாட்டி சொன்னதாக கூறியுள்ளார். தினமும் 400 படிக்கட்டுகள் ஏறிப்போய் காலையும், மாலையும் சுப்ரமணியசாமியைப் பாடி, வணங்கிவிட்டு வரவேண்டும்,'' இந்த சதிராட்டக் கலை இன்று அழிந்து வரும் நிலையில் இந்தக் கலை அழிிந்துவிடக் கூடாது என்பதற்காக ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
சதிர் பற்றி அறிந்த வெளிநாட்டுப் பெண்களும் முத்துக்கண்ணமாளிடம் கற்றுத் தேர்ந்துள்ளனர்.அழிவின் விளிம்பில் உள்ள சதிர் ஆட்த்தை காத்துவரும் கடைசி வாரிசான முத்துக்கண்ணம்மாளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது கிடைத்ததை விராலிமலையே கொண்டாடியது. மேலும் பல விருதுளும் பாராட்டும் பெற்றுள்ள பத்மஸ்ரீ முத்துக்கண்ணம்மாளுக்கு தற்போது பாலசரசுவதி விருது அறிவித்துள்ளதை மகிழ்வோடு பார்க்கிறார்கள் கிராம மக்களும் சதிர் ஆட்டக் கலைஞர்களும்.