Skip to main content

தேர்தல் முடிவு! சசிகலா என்ன செய்யப் போகிறார்?

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கிறபோதே டி.டி.வி. தினகரனின் செல்போனுக்கு அழைப்புகள் சென்றன. "சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அ.ம.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யத்தை விட குறைவான வாக்குகள் பெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் வெற்றிவேல்தான். அவரது அணுகுமுறை சரியில்லை' என ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டன. தேர்தல் முடிவுகளை பார்த்து அதிர்ந்துபோன நிலையில் இருந்த டி.டி.வி.தினகரன், தன் இயல்புக்கு மாறான குரலில், 'அப்படியா நான் கண்டிக்கிறேன்' என சொல்லியிருக்கிறார்.

 

sasikala



சென்னை திருவள்ளூர் பகுதி அ.ம.மு.க. பொறுப்பாளர் வெற்றிவேலிடம் நாம் பேசியபோது, எனது பெரம்பூர் தொகுதியில் 29-வது வட்டத்தில் எனக்கு வாக்குச்சாவடி முகவர்களாக பணியாற்றியவர்கள் குடும்பங்களின் ஓட்டே 130 வரும். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் வெறும் 9 ஓட்டுகள் மட்டுமே பரிசுப் பெட்டி சின்னத்தில் பதிவாகியிருந்தது. இப்படி தமிழகம் முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக செயல்படும்... சசிகலா குடும்பத்தை ஒழிக்க வேண்டும் என மத்திய அரசே வாக்குப்பதிவு எந்திரங்களில் பரிசுப்பெட்டி சின்னத்திற்கு வாக்குகள் விழக்கூடாது என வாக்கு எந்திரத்தில் சதி செய்துள்ளது. அதனால்தான் அ.ம.மு.க. இந்தத் தேர்தலில் மிகக் குறைவான வாக்குகளை பெற்றது என டெக்னிக்கலாக ஒரு விளக்கம் சொன்னார்.

 

sasikala



அ.ம.மு.க. பற்றி நம்மிடம் பேசிய அதன் தலைவர்கள், சசிகலா உட்பட அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. தோற்க வேண்டும் என நினைத்தோம். அதனால் தான் அணிகளை இணைக்க வேண்டும் என எடப்பாடி தரப்பில் இருந்து பேச முன்வந்தபோதெல்லாம் சசிகலா எந்த உறுதியும் அவர்களுக்கு கொடுக்காமல் நழுவிக் கொண்டே இருந்தார். அ.தி.மு.க.வின் தோல்வி அ.ம.மு.க. பெறும் வாக்குகளினால் அமைய வேண்டும். அப்படி அமைந்தால்தான் இணைப்பு பேச்சு வார்த்தையில் சசிகலாவின் கை ஓங்கும். அ.தி.மு.க. கட்சியை மீண்டும் சசிகலா கைப்பற்ற முடியும் என்பதுதான் சசிகலாவின் கணக்கு. ஆனால், சிறை டி.வி.யில் ரிசல்ட் பார்த்த சசிகலா, பெங்களூருக்கு பக்கத்தில் உள்ள தமிழக தொகுதியான ஓசூரில் போட்டியிட்ட புகழேந்தி ஒரு சில நூறு ஓட்டுகள் பெற்று கொண்டிருந்ததை பார்த்து அவர் விரக்தி அடைந்தார். தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட இசக்கி சுப்பையாவையும் சசிக்கு நன்றாக தெரியும். அவர் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிட்ட பெண் வேட்பாளரை விட குறைவாக வாக்கு பெற்றிருந்தார். தேனியில் தங்க.தமிழ்ச்செல்வன் மூன்றாவது இடத்திலேயே நின்றிருந்தார். "ஏன் இப்படி நடந்தது என மூவருக்கும் போன் போட்டு கேள்' என்று இளவரசியின் மகன் விவேக் மூலம் கேட்டார். "நாமளும் தானே ஓட்டுக்கு காசு கொடுத்தோம். அதற்குப் பிறகும் இப்படியா?' என சசியும், இளவரசியும் ஆழ்ந்த கவலையில் ஆழ்ந்தார்கள்.

 

ttv



அதற்குப் பிறகு ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஆண்டிப்பட்டி ஆகிய இடங்களில் அ.ம.மு.க.வுக்கு நல்ல வாக்கு கிடைக்கிறது என சசிக்கு சொல்லப்பட்டாலும், அது இரண்டாவது இடத்திற்குக் கூட கொண்டு வரவில்லை என அப்செட் ஆனார். அ.தி.மு.க.வின் வழக்கமான வாக்கு வங்கியில் பாதிக்கும் மேல் எடப்பாடி வாங்கி விட்டால் அவர் பக்கம்தான் கட்சி போகும். ஜானகி அணி 89-ல் வாங்கிய வாக்குகள் கூட அ.ம.மு.க. வாங்கலையே... இந்த நிலையில் இணைப்பு பேச்சுக்கு என்ன வழி' என சசியும் இளவரசியும் ஆலோசிக்க ஆரம்பித்தார்கள் என பெங்களூரு சிறையில் நடந்த விவரங்களை சொல்கிறார்கள்.


இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வை தோற்கடிக்க பல வேலைகளை தினகரன் செய்தார். விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயனை அ.தி.மு.க.வை விட்டு தனியாக போட்டியிட வைத்தார் தினகரன். அவர் கணிசமான வாக்குகளை வாங்கினாலும் அ.ம.மு.க. அங்கு வெற்றி பெறவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி வெற்றி வீரர் என்கிற தினகரனின் இமேஜ் இப்பொழுது உடைந்து தொங்குகிறது. பெங்களூரு புகழேந்தி, தங்க .தமிழ்ச்செல்வன்,  கதிர்காமு, நிலக்கோட்டை சுந்தரராஜ், பூந்தமல்லி ஏழுமலை என பலர் அ.ம.மு.க.வை விட்டு விலகி, அ.தி.மு.க., தி.மு.க. என கட்சி மாறுவார்கள், அ.ம.மு.க. கரைந்து போகும்'' என்கிறார்கள்.

"இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு சசிகலா என்ன செய்வார்' என கேட்டதற்கு,  அவர் எடப்பாடியிடம் பேசிக்கொண்டிருக்கிறார். ஓ.பி.எஸ்., நரேந்திர மோடி மூலம் கொடநாடு கொலைவழக்கில் எடப்பாடிக்கு சிக்கலை ஏற்படுத்துவார் என சசிகலாவுக்கு செய்தி வந்துள்ளது. "இது அ.ம.மு.க.வுக்கு பெருந்தோல்வி என்றாலும் அ.தி.மு.க.வும் இந்தத் தேர்தலில் தோற்றுப் போய்விட்டது. ஆனாலும், எடப்பாடியின் முதல்வர் பதவிக்கு இப்போதைக்கு ஆபத்து இல்லை. இனி அ.தி.மு.க.வினர் அனைவரும் சேர்ந்து அ.தி.மு.க.வை உயிர் பெறச் செய்வோம்; மீண்டும் பழைய அ.தி.மு.க.வை உருவாக்குவோம்' என சிறையிலிருந்து ஒரு கடிதம் எழுத சசிகலா திட்டமிட்டுள்ளார்'' என்கிறார்கள் மன்னார்குடி சொந்தங்கள்.
 

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.