Skip to main content

சிதறாத அதிமுக வாக்கு வங்கி... ஸ்டாலின் எடுத்த முடிவு... நிறைவேறாத திமுக எதிர்பார்ப்பு!  

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னோட்டம் என வர்ணிக்கப்பட்ட விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலின் இரு தொகுதிகளையும் தி.மு.க. கூட்டணியிடமிருந்து கைப்பற்றியிருக்கிறது அ.தி.மு.க. இதன் மூலம் தமிழக சட்டமன்றத்தில் அ.தி.மு.க.வின் பலம் 124 ஆக உயர்ந்திருக்கிறது. இரு தொகுதிகளின் வெற்றி-தோல்வி எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி மீது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் தங்களது தலைமையின் ஆளுமையை நிரூபிக்க வெற்றி பெறுவது அவசியம் என்பதை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் உணர்ந்திருந்தனர். அதனாலேயே வெற்றியை நோக்கி இருவரும் தம் கட்டி ஓடினர். இதில் இரு தொகுதிகளையும் கைப்பற்றியிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.

 

admk



கடந்த 21-ந்தேதி தேர்தல் முடிந்ததும் இரு தொகுதிகளின் பொறுப்பாளர்களாக இருந்த சீனியர் அமைச்சர்களிடம் தனித்தனியாக விசாரித்தார் எடப்பாடி பழனிச்சாமி. நாங்குநேரியின் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் தங்கமணி மற்றும் விஜயபாஸ்கரிடம் தனித்தனியாக எடப்பாடி விசாரிக்க, "தொகுதியில் பெரும்பான்மையாக உள்ள நாடார் சமூகம் தி.மு.க.வை விட அ.தி.மு.க.வைத்தான் ஆதரிக்கிறார்கள். காங்கிரஸ் வேட்பாளர் இறக்குமதி என்பதால் மண்ணின் மைந்தரான நம்முடைய வேட்பாளருக்குத்தான் காங்கிரஸ் கட்சியினரிடமே ஆதரவு அதிகமிருக்கிறது. தேவேந்திரகுல மக்களின் எதிர்ப்பு தி.மு.க. கூட்டணியைத்தான் பாதிக்கிறதே தவிர அ.தி.மு.க.வை பாதிக்கவில்லை. எப்படி கூட்டிக்கழித்துப்பார்த்தாலும் காங்கிரஸ் ஜெயிக்காது. நம்பிக்கையுடன் இருங்கள்'' என்று விவரித்திருக்கிறார்கள்.

 

admk



அதேபோல, விக்கிரவாண்டி தொகுதி பொறுப்பாளர்களிடம் எடப்பாடி விவாதிக்க,  வட தமிழகத்தில் வன்னியர்களுக்கு எதிரான அரசியலை பொன்முடியும் எ.வ.வேலுவும் செய்து வருவதை தி.மு.க.விலிருக்கும் வன்னியர்களே ஜீரணிக்கவில்லை. அது விழுப்புரம் மாவட்டத்தில் அதிகம். அதனால், தொகுதியிலுள்ள வன்னியர்கள் மொத்தமாக கன்சாலிடேட் ஆகி அ.தி.மு.க.வை ஆதரித்துள்ளனர். பெரும்பான்மை சமூகத்தின் வலிமையை தி.மு.க. உணர்ந்திருக்கும் என பகிர்ந்துகொண்டதுடன் தேர்தல் வியூகமாக என்னென்ன செய்தோம்'' என அவர்கள் விவரித்திருக்கிறார்கள்.

இரு தொகுதிகளின் தேர்தல் பணியில் ஈடுபட்ட அ.தி.மு.க. சீனியர்கள் சிலரிடம் பேசியபோது, "பொதுவாக, இடைத்தேர்தல் என்றாலே அதிகார பலமும் பண பலமும் இணைந்து ஆளும் கட்சியைதான் ஜெயிக்க வைக்கும் என்பதை கடந்த கால தேர்தல்கள் நிரூபித்திருக்கின்றன. அதில் தற்போதைய இடைத்தேர்தலும் விதிவிலக்கல்ல. ஒரு லட்சம் வாக்குகளுக்கு தலா 2000 ரூபாய் என வாக்காளர்களை பர்ச்சேஸ் செய்ய 20 கோடி, தேர்தல் பணிகளுக்கு 20 கோடி என ஒரு தொகுதிக்கு 40 கோடி என இரு தொகுதிகளுக்கும் 80 கோடி என்கிற மெகா பட் ஜெட்டில் வெற்றியை கபளீகரம் செய்திருக்கிறோம்'' என உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள் அழுத்தமாக.


வாக்குப்பதிவு முடிந்த மறுநாள் இரவு உளவுத்துறையின் உயரதிகாரியிடம் விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பை இரண்டு தொகுதிகளிலும் உளவுத்துறையினர் எடுத்திருந்த சர்வேயில் இரண்டிலும் அ.தி.மு.க.வுக்கு சாதகமான ரிசல்ட் வந்திருப்பதை எடப்பாடியிடம் பகிர்ந்துகொண்டார் உளவுத்துறை உயரதிகாரி. அதனாலேயே வாக்கு எண்ணிக்கை அன்று எவ்வித பதட்டமும் இல்லாமல் இருந்தார் எடப்பாடி பழனிச்சாமி. வாக்கு எண்ணிக்கை அன்று காலையிலேயே சீனியர் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் எடப்பாடியின் இல்லத்தில் குழுமியிருந்தனர். ரிசல்ட் சாதகமாக வருவதை அறிந்து அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் அ.தி.மு.க. தலைமையகத்துக்கு விரைந்தார் எடப்பாடி. அ.தி.மு.க. தொண்டர்கள் ஏக உற்சாகத்தில் இருந்தனர். வெற்றியை எடப்பாடியுடன் பகிர்ந்துகொண்டனர் ர.ர.க்கள்!


வெற்றியையும் தோல்வியையும் சமமாக கருதும் தி.மு.க. தரப்பை, விக்கிரவாண்டி- நாங்குநேரி இடைத்தேர்தல் தோல்வி வெகுவாக ஆதங்கப்பட வைத்திருக்கிறது. தோல்வி குறித்து சீனியர்களிடம் மு.க.ஸ்டாலின் ஆலோசித்தபோது, "அதிகார பலமும் பண பலமும் நம்மை தோற்கடித்து விட்டது என சொன்னாலும், மாவட்டத்தில் பொன்முடியின் விரும்பத்தகாத வன்னியர் எதிர்ப்பு அரசியலும், விடுதலை சிறுத்தைகள் இருந்தும் தலித் வாக்குகள் நமக்கு கிடைக்காததும்தான் தி.மு.க.வுக்கு தோல்வியை ஏற்படுத்தியது'' என கொட்டித் தீர்த்துள்ளனர்.

இது குறித்து வட தமிழகத்திலுள்ள தி.மு.க. எம்.எல்.ஏ.க்களிடம் நாம் விசாரித்த போது, "நாடாளுமன்றத் தேர்தலையும் சட்டமன்றத் தேர்தலையும் தமிழக மக்கள் எப்போதும் பிரித்தே பார்ப்பார்கள் என்பது தற்போதைய இடைத்தேர்தல் நிரூபித்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் எனில் காங்கிரசா? பா.ஜ.க.வா? என்றும், சட்டமன்றத் தேர்தல் எனில் அ.தி.மு.க.வா? தி.மு.க.வா? என்றும் தான் தமிழக வாக்காளர்கள் முடிவெடுக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த அமோக வெற்றியும் அதையொட்டி நடந்த 22 தொகுதி இடைத்தேர்தலில் பெரும்பான்மை வெற்றியும் எங்கள் தலைவரின் (மு.க.ஸ்டாலின்) உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் என சொன்னாலும், மோடி ஆட்சி வீழ்ந்து காங்கிரஸ் ஆட்சி அமையும் என்கிற எதிர்பார்ப்பில்தான் தி.மு.க. கூட்டணியை அமோகமாக ஆதரித்தனர். ஆனால், மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்பிய மக்கள், மாநிலத்தில் அதை விரும்பவில்லை. அதனாலேயே இடைத்தேர்தலில் தி.மு.க.வின் எதிர்பார்ப்பு நிறைவேறுவதில்லை' என சுட்டிக்காட்டுகிறார்கள்.

அ.தி.மு.க.வுக்கு நெருக்கமான அரசியல் வியூக வகுப்பாளர் ஒருவரிடம் நாம் விவாதித்தபோது, "அ.தி.மு.க.வின் வெற்றியை பற்றி விவாதிப்பதை விட, தி.மு.க.வின் தோல்விக்கான காரணங்கள்தான் விவாதிக்கப்பட வேண்டும் என இடைத்தேர்தல் முடிவுகள் உணர்த்துகிறது. ஸ்டாலின் எடுத்த ஆண்டி ராமதாஸ் ப்ரோ வன்னியர் ஸ்ட்ரேட்டஜியை அச்சமூக மக்கள் ஏற்கவில்லை. வட தமிழகத்தில் தொடர்ந்து வன்னியர் சமூகத்தை புறக்கணித்து விட்டு திடீரென தேர்தல் வந்ததும் அந்த சமூகத்திற்கான உரிமைகளுக்கு குரல் கொடுப்பதை தேர்தல் ஸ்டண்டாகவே கணித்திருக்கிறார்கள். அதேசமயம், வன்னியர்களுக்கு நேர் எதிரான தலித் சமூகம், ஸ்டாலினின் வன்னியர்களுக்கு அள்ளித்தெளித்த வாக்குறுதிகளில் அதிருப்தியடைந்திருக்கிறது. அதனால், கூட்டணிக் கட்சியான சிறுத்தைகளின் தலித் வாக்குகள் மட்டுமல்ல தி.மு.க.வின் தலித் வாக்குகள் கூட தி.மு.க.வுக்கு உதவவில்லை. அது, அ.தி. மு.க.வுக்கு இடமாறியுள்ளது. தி.மு.க.வின் கணிசமான கட்சி வாக்குகள், முஸ்லிம்-கிறிஸ்தவ மற்றும் சிறுபான்மை சாதிகளின் வாக்குகள்தான் கௌரவமாக தி.மு.க.வை காப்பாற்றியிருக்கிறது. அதேசமயம், தமிழகத்தில் எத்தனை கட்சிகள் உருவானாலும், புதிது புதிதாக யார் அரசியலுக்கு வந்தாலும் அ.தி.மு.க. - தி.மு.க.வை தவிர மற்றவர்கள் வலிமையாக முடியாது என உணர்த்தியுள்ளது இடைத்தேர்தல் முடிவுகள். அந்த வகையில் அ.தி.மு.க.-தி.மு.க. இரு கட்சிகளுமே வலுவாக இருக்கிறது. ஜெயலலிதா மறைந்தாலும் அ.தி.மு.க.வின் வாக்குகள் அக்கட்சியை விட்டு சிதறவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்''’ என்கிறார் பல்வேறு புள்ளி விபரங்களைச் சுட்டிக்காட்டியபடி.

இடைத்தேர்தல் முடிவுகளை சட்டமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கொள்ள முடியாது என்பது ஆண்ட-ஆள்கிற இரு கழகங்களுக்கும் நன்றாகவே தெரியும். அதனால், சட்டமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்கான வியூகங்களை இப்போதே வகுக்கத் தொடங்கியுள்ளன. அதற்கு முன்பாக, உள்ளாட்சித் தேர்தல் வரும் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது. இடைத்தேர்தல் தந்த தெம்பினால், உள்ளாட்சித் தேர்தலை ஆளுங்கட்சி கூடுதல் நம்பிக்கையுடனும் அதிகார பலத்துடனும் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது.

தி.மு.க.வைப் பொறுத்தவரை, உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு சரியான போட்டியை ஏற்படுத்தும் வகையில், தனிப்பட்ட செல்வாக்குள்ள வேட்பாளர்கள் அதனிடம் அதிகம். எம்.ஜி.ஆர்.-ஜெ. ஆட்சிக் காலத்திலும்கூட, உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. தனது பலத்தை நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பான டிரெய்லர் போல அமையக்கூடிய உள்ளாட்சித் தேர்தலில் போட்டி எப்படி இருக்கும், உள்ளாட்சியில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், மாவட்ட யூனியன்கள் உள்பட பலவற்றிலும் யார் ஆட்சி என்ற அரசியல் பரபரப்பு அதிகரித்த நிலையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு 4 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது மாநில தேர்தல் ஆணையம். தேர்தல் காய்ச்சல் இரு பெரிய கட்சிகளுக்கும் அடிக்கிறது. சின்ன கட்சிகள் என்ன செய்யும்?

 

 

Next Story

“திமுகதான் எதிர்க்கட்சி என்பதுபோல் மோடி பிரச்சாரம் செய்கிறார் - திருமாவளவன் குற்றச்சாட்டு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Thirumavalavan alleges Modi is campaigning as if the DMK is the opposition

சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாய்க் கிழமை(16.4.2024) சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பு.முட்லூர் பகுதியில் வாக்கு சேகரிப்பைத் தொடங்கி 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது பொதுமக்களிடம் திருமாவளவன் பேசுகையில், “இந்தத் தேர்தலில், நரேந்திர மோடியின் நாசகரமான ஆட்சியை வீழ்த்த தளபதி மு.க.ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வியூகம் அமைத்து களமாடி வருகின்றனர். பாஜக விற்கு எதிரான வியூகம் அமைத்து, பல்வேறு கட்சிகளை  ஒருங்கிணைத்து  இன்று வலுவான தேர்தல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துள்ளார். காங்கிரஸுக்கு பதிலாக திமுகதான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார். கேஸ் விலை உயர்வு மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல்  சாதிய மோதல்கள் அதிகரிக்கவும் மோடி தான் காரணம். மோடி  மீண்டும் ஆட்சிக்கு வந்தால்  ரேசன் கடை இருக்காது. 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப்பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன்,  திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், திமுக ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர். 

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.