Advertisment

EXCLUSIVE: மாணவி போஸ்ட்மார்ட்டம்... அந்தரங்க பாகத்தில் காயம்; வெளிவராத தகவல்கள்! 

Advocate Sankar Subu Kallakurichi private school girl Postmortem

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே இருக்கும் சக்தி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் கடந்த 13ம் தேதி ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோர் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி வழக்கு தொடர்ந்து இரண்டு பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு, நேற்று முன் தினம் (23ம் தேதி) மாணவியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Advertisment

இந்நிலையில், இந்த மரணம் தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை எடுத்து நடத்திவரும் வழக்கறிஞர் சங்கரசுப்புவைசந்தித்து இந்த மரணம் தொடர்பாகவும், வழக்கு தொடர்பாகவும் சில கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த விளக்கங்கள்; “ஸ்ரீமதியின் மரணம் தற்கொலை கிடையாது கொலை என்பதற்காகத்தான் நாங்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறோம்”.

Advertisment

நீதிமன்றத்தில் நீதிபதி, கே.எம்.சி.யின் தடய அறிவியல்துறை தலைவரிடம், ‘மனுதாரர்கள் கருதும்படி இந்த மரணம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை நடந்ததா என மீண்டும் ஒரு முறை பிரேதப் பரிசோதனை மூலம் கண்டறிய முடியுமா’ என்று கேட்டார். அதற்கு தடய அறிவியல்துறை மருத்துவர் செல்வக்குமார், ‘முதல் மற்றும் இரண்டாம் பிரேதப் பரிசோதனையிலேயே உடலின் உறுப்புகளை எடுத்திருப்பார்கள். அதன் காரணமாக மூன்றாம்முறையாக பிரேதப் பரிசோதனை செய்வதுமூலம் கண்டறிவது கடினம். ஆனால், முதல் இரண்டு பிரேதப் பரிசோதனையின் அறிக்கைகளையும், வீடியோ பதிவுகளையும் ஜிப்மர், எய்ம்ஸ் அல்லது வேறு சில சிறந்த மருத்துவமனை மருத்துவர்குழுவுக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தலாம். அந்த வீடியோ பதிவில், மாணவியின் பிறப்புறுப்பில் வன்கொடுமைக்கான தடயம் இருக்கிறதா என்பதைக் கண்டறியலாம்’ என்று தெரிவித்தார்.

முதல் பிரேதப் பரிசோதனை செய்த செந்தில் குமார் மற்றும் பெண் மருத்துவரின் அறிக்கையில் அந்தச் சிறுமியின் வலது மார்பகத்தில் கடித்ததற்கான ஒரு காயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து கைதேர்ந்த தடய அறிவியல் மருத்துவர்கள், ‘அது புணர்ச்சிக்கு முன்பாக ஏற்படக்கூடிய காயமாக இருக்கலாம்’ என்று தெரிவிக்கின்றனர். அப்படி இருக்கும்போது, அந்தப் பகுதியில் உமிழ்நீர் இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி இருந்திருந்தால் முதல் பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த உமிழ்நீர் மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு அனுப்பியிருக்க வேண்டும். மேலும், வலது விலா எலும்புகள் முறிந்துள்ளன. கல் தரையிலோ அல்லது மண் தரையிலோ விழுந்திருந்தால் இது போன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்புகளே இல்லை. யாராவது பின் புறத்தில் இருந்து இரும்பு கம்பியைக் கொண்டு தாக்கியிருந்தால் இதுபோன்ற காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல், இந்தக் காயங்கள் எல்லாம் மரணத்திற்கு முன்பாக ஏற்பட்ட காயங்கள். இதனால் மரணம் நிகழ்ந்திருக்கலாம் என பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது.

ஒரு பெண் மர்மமான முறையில் மரணமடைந்தாலோ, அல்லது தற்கொலை செய்துகொண்டாலோ அப்பெண்ணின் பிறப்புறுப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வன்புணர்வுக்கு ஆளாகியிருக்கிறாரா?. என்பது சோதனைக்கு உட்படுத்தப்படும், ஆனால்அந்தப் பரிசோதனை எதுவும் இந்த முதல் பிரேதப் பரிசோதனை மருத்துவர்கள் செய்யவில்லை. மருத்துவர் செந்தில் குமார் வெறும் காயங்களை மட்டுமே தனது அறிக்கையில் குறித்துள்ளார்.

மருத்துவர் செந்தில்குமார் தடய அறிவியல் துறையில் டியூட்டர் (பயிற்சி மருத்துவர்). ஒரு துறையில், துறைத் தலைவர் இருப்பார். அவருக்கு கீழ் பேராசிரியர், அவருக்கு கீழ் உதவி பேராசிரியர் இறுதியாக டியூட்டர் இருப்பார். டியூட்டர்களின் பணி என்பது, பிரேதப் பரிசோதனை நடக்கும்போது, மருத்துவர்கள் சொல்லும் குறிப்புகளை குறிப்பவர். டியூட்டர் என்பவர் தகுதியானவர் என்றாலும் முன் அனுபவம் இல்லாதவர்.

இதுபோன்ற வழக்குகளில் துறை தலைவர்களோ, தடய அறிவியல் மருத்துவர்கள் அல்லது பிரேதப் பரிசோதனையில் தேர்ந்தவர்கள் தான் பரிசோதனையில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால், அப்படியானவர்கள் யாரும் இந்தப் பிரேதப் பரிசோதனையை செய்யவில்லை. செந்தில் குமாருடன் இணைந்து இந்தப் பிரேதப் பரிசோதனை செய்த பெண் மருத்துவர், பேறுகால மருத்துவர். பிரேதப் பரிசோதனைப் பற்றி முறையான செயல்பாடுகள் தெரியாதவர்களே இந்த வழக்கில் பிரேதப் பரிசோதனை செய்துள்ளனர்.

இதனைப் பார்க்கும்போது, ஸ்ரீமதியின் உடலை பார்த்து காயங்களை குறித்துக்கொண்டு, மூத்த மருத்துவர்களின் உதவியுடன் அறிக்கையை தயார் செய்துள்ளனர் என்பதுபோல் தான் உள்ளது. தற்போது திசுக்களை ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளனர். அதன் மூலம், இந்தத் திசுக்களில் ஏற்பட்டுள்ள காயம் கத்தியால் ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பொருளால் ஏற்பட்டதா என்பதை கண்டறியமுடியும்.

உடல் உள் உறுப்புகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குறிப்பாக பரிசோதனை செய்த மருத்துவர், இந்த இறப்பு தான் பிரேதப் பரிசோதனை செய்வதற்கு 36 மணி நேரம் முன்பு நடந்ததிருக்கிறது என்று தெரிவிக்கிறார். மேலும், இரைப்பையில் செரிமானம் ஆகாத உணவு இருப்பதாக தெரிவிக்கிறார். அப்படியென்றால், 12ம் தேதி இரவு 10 முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் இந்த இறப்பு நேர்ந்திருக்கும் என்கிறார்.

இந்த வழக்கு, வன்புணர்வு செய்து கொலை என்கிறோம். காவல்துறையினர் இந்த வழக்கை தற்கொலை என பதிவு செய்கின்றனர். இதற்காக தற்கொலை குறிப்பை தயார் செய்கின்றனர். ஸ்ரீமதியின் தாய் என்னை பார்க்க வரும்போது, ஸ்ரீமதி எழுதிய ஒரு 20 நோட்டுகளைக் கொண்டுவந்தார். இது தான் என் பெண்ணின் கையெழுத்து; அந்த தற்கொலை குறிப்பில் இருப்பது அவர் கையெழுத்து இல்லை என அவரது தாய் சொல்கிறார். அப்படி அந்தப் பெண்ணின் கையெழுத்து அது இல்லை என்றால் அந்தத் தற்கொலை குறிப்பை உருவாக்கியது யார் என காவல்துறையினர் தெரிவித்திருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட மரணம் ஏற்பட்டு 10 நாட்கள் ஆகிவிட்டது. ஆனால், இன்னும் அந்த மாணவியின் தோழிகளிடமோ அந்த மாணவியின் விடுதி அறையில் இருந்தவர்கள் என யாரிடமும் விசாரணை நடைபெறவில்லை. சி.பி.சி.ஐ.டி வந்தும் வழக்கு துரிதப்படுத்தவில்லை. வழக்கு விசாரணை நத்தைபோல் நகர்கிறது. இதுவெல்லாம் சந்தேகத்தை வலுக்கிறது.

இன்னும் அவர்கள், பெண் எந்த இடத்தில் விழுந்தார் என்பதை சொல்லவே இல்லை. மூன்றாம் மாடியில் இருந்து விழுந்தார் என்கிறார்கள் ஆனால், அங்கு ரத்தக் கறையே இல்லை.

அதேபோல், பள்ளி சுவரில் இரத்தக் கறை படிந்த ஒரு கை இருக்கிறது. இதை ஸ்ரீமதியின் தாய் போட்டோ எடுத்துவைத்துள்ளார். அதனை நாங்கள் மனுவிலும் குறிப்பிட்டுள்ளோம்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

kallakurichi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe