/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/jlk.jpeg)
ராஜீவ்காந்தி வழக்கில் உச்சநீதிமன்றம் பேரறிவாளனோடு இந்த வழக்கில் சிறையிலிருந்த மற்ற 6 பேரையும் விடுதலை செய்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் மோகன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம்.அவர் கூறியதாவது, " இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு, ஆனாலும் இது ஒரு காலம் கடந்த தீர்ப்பாகவே கருதுகிறேன். இவர்கள் அனைவரும் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையிலிருந்துள்ளார்கள். சுதந்திரத்துக்குப் பிறகு இந்த சிறைச்சாலை என்பது ஒருவரைத் திருத்துவதாக அமைந்திருக்க வேண்டுமே தவிர, ஒருவரைத் தண்டிக்கக்கூடியதாக அமைந்திருக்கக்கூடாது. அவர்களுக்குத் தண்டனை 1998ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.இருந்தாலும் அவர்கள் கொடுத்த கருணை மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மிகுந்த காலதாமதம் ஆனது. இதை அப்போது தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் இந்த வழக்கில் தெரிவித்தார்.
அதனடிப்படையிலேயே அவர்களின் தூக்குத் தண்டனை ஆயுள்தண்டனையாக மாற்றப்பட்டது. அப்போது நீதிமன்றம் தெளிவாகக் கூறியது, இவர்களை மாநில அரசுகள் நினைத்தால் விடுதலை செய்யலாம் என்று. ஆனால் அப்போது இருந்த மத்திய அரசு இவர்களை நாங்கள் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறி வழக்கை இழுத்தடித்தார்கள். அப்போதும் கூட உச்சநீதிமன்றம் அரசியல் சாசனத்தின் 161வது பிரிவைப் பயன்படுத்தி மாநில அரசுக்கு விடுதலை செய்ய அனைத்து அதிகாரங்களும் இருப்பதாகத் தெளிவாகக் கூறியது. அதற்கு பிறகும் இத்தனை ஆண்டுக்காலம் இந்த வழக்கு நீண்டுகொண்டே போனதற்கு ஆளுநர்களும், மத்திய அரசுமே காரணம்.
பேரறிவாளன் இந்த விவகாரத்தில் விடுதலை செய்யப்பட்டபோது அவர் சிறையில் நடந்துகொண்ட விதம், படிப்பு உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டே உச்சநீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரம் 142ஐ பயன்படுத்தி அவரை விடுதலை செய்தது. அதற்கு பிறகே நளினியும், முருகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளன் போன்றே தங்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் 142 பிரிவு என்பது உச்சநீதிமன்றத்துக்கு உள்ள சிறப்பு அதிகாரம். அதைப் பயன்படுத்தி நாங்கள் விடுதலை செய்ய முடியாது. நீங்கள் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று தீர்வு தேடிக்கொள்ளுங்கள் என்றனர்.
அதைத் தொடர்ந்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்ற நிலையில் அங்கே இரண்டு நீதிபதிகள் அமர்வு பேரறிவாளனுக்குக் கிடைத்த அதே விடுதலையை இவர்களுக்கும் வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள 161 சட்டப்பிரிவைப் பயன்படுத்தி 25 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும். குஜராத்தி பெண்ணை வன்புணர்வு செய்தவர்கள் எல்லாம் இந்தப் பிரிவைப் பயன்படுத்தி சிறையிலிருந்து வெளியே வரும்போது, இத்தனை ஆண்டுக்காலம் சிறையிலிருந்த இவர்களுக்கு வெளியே வருவதற்கு அனைத்து உரிமைகளும் இருக்கிறது. எனவே இதை வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பாகக் கருதுகிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)