Advocate Maniammai Interview

Advertisment

சமகால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் மணியம்மை பகிர்ந்துகொள்கிறார்.

எதிர்க்கட்சிகள் அனைவரும் பாட்னாவில் ஒன்றுகூடியது மகிழ்ச்சியான ஒரு செய்தி. பாஜக என்கிற ஒரு பேராபத்தை இந்திய அரசியலில் இருந்தே தூக்கி எறிய வேண்டும்.அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்கிற செய்தியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். இதன் அடிப்படையிலேயே எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு பாட்னாவில் நடந்திருக்கிறது. அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெறவிருக்கிறது. இதை ஒரு முதற்கட்ட வெற்றி என்றே சொல்ல வேண்டும். இது ஒரு வெற்றிக் கூட்டணியாக அமைய வேண்டும்.

பாஜகவுக்கு இப்போது ஒரு பயம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுடைய பிரதமர் வேட்பாளருக்கு யோகி ஆதித்யநாத்தின் பெயர் அடிபட்ட நிலையில் இப்போது மோடி தான் பிரதமர் வேட்பாளர் என அமித்ஷா அறிவித்துள்ளார். இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பாஜகவுக்கு ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் சொல்வது போல் 300 தொகுதிகளில் அவர்கள் வெல்ல வாய்ப்பே கிடையாது. தென்னிந்தியாவில் இப்போது பாஜகவே இல்லை. வட இந்தியாவிலும் அந்த நிலைமை மெதுவாக வந்துகொண்டிருக்கிறது.

Advertisment

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் இந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றனர். இது ஒரு பெரிய நம்பிக்கையை வழங்கியிருக்கிறது. அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் தவித்தது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்ததே கிடையாது. அதனால் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

இங்கு மதக்கலவரத்தால் மணிப்பூர் பற்றி எரிகிறது. எங்காவது பிரச்சனை நடந்தால் அதை சுமூகமாகத் தீர்த்து வைப்பதற்குத் தான் அரசாங்கம் இருக்கிறது. ஆனால் பாஜக பிரச்சனைகளைத் தூண்டி விடுகிற கட்சியாக இருக்கிறது. மாட்டுக்கறி வைத்திருந்ததை குற்றம் எனக் கூறி கொலையே செய்தவர்கள் இவர்கள். இந்தியாவின் முதல் குடிமகளாக இருக்கும் திரௌபதி முர்மு அவர்களுக்கே இங்கு ஜாதித் தீண்டாமை நிகழ்த்தப்படுகிறது. ஜாதிக் கொடுமைகளை நிறுத்த வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால் இவர்கள் ஓட்டுக்காக ஜாதி, மதக் கலவரங்களைத் தூண்டி விடுகின்றனர்.