Advertisment

"தூத்துக்குடி சம்பவத்தையே முதல்வர் டி.வி பார்த்துதான் தெரிந்து கொண்டார்... இந்தச் சம்பவத்தை எப்படி..." - வழக்கறிஞர் மோகன் பேட்டி!

rt

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வழக்கறிஞர் மோகன் பதிலளிக்கின்றார்.

சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்துவருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

Advertisment

"காலம் தாழ்த்தி எடுக்கப்பட்ட ஒரு முடிவாகத்தான் இதை நான் பார்க்கிறேன். தமிழக அரசாங்கம் குறிப்பாக காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்துகொள்ளவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். பணம் கொடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கொடுத்த அறிக்கையின்படி அவர் ஊடகங்களில் பேசினார். தூத்துக்குடி சம்பவத்தின் போது 13 பேர் படுகொலை செய்யப்பட்ட போது, சுடுவதற்கு அனுமதி கொடுத்து யார் என்றே தெரியவில்லை என்று முதல்வர் கூறினார். மேலும் தொலைக்காட்சியைப் பார்த்துதான் இந்தச் செய்தியைத் தெரிந்து கொண்டேன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

துணை தாசில்தார் அவர்களின் உத்தரவு படிதான் இந்தச் சம்பவம் நடைபெற்றது என்ற உண்மையைச் சொன்னோம். தன் மாநில மக்கள் 13 பேர் சுட்டுக்கொள்ளப்பட்டது தெரியவில்லை என்று கூறுவதும், காக்கிச்சட்டை போடாத நபர்கள் இந்தச் சம்பவத்தை நிகழ்த்தியதையும் நாம் ஆதாரத்தோடு முன் வைத்தோம். இதன் தொடர்ச்சியாகத்தான் சாத்தான் குளத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. சாத்தான்குளத்தில் பணியாற்றிய அனைத்துக் காவலர்களுமே, ரேவதி என்ற காவலரைத் தவிர இந்தக் குற்றச்சம்பவத்தில் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். தந்தை மகன் ஆகிய இருவரையும் கொடூரமாகத் தாக்கி இருக்கிறார்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது.

http://onelink.to/nknapp

இந்தச் சம்பவத்தைப் போன்று தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. தேவாரம் தலைமையில் நடைபெற்ற வீரப்பன் தேடுதல் காவல் குழுவினர் இந்த அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபட்டனர். சில சம்பவங்கள் வெளியே தெரிந்தது. பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது. அதைப் போல இந்தக் கொலை சம்பவத்தையும் ஆட்சியாளர்கள் மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீதிமன்றம் தலையிட்டதால் தமிழக ஆட்சியாளர்கள் அதற்காகச் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கைது செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது" என்றார்.

police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe