Skip to main content

"காவல்துறையை ஜனநாயகப்படுத்த வேண்டும்; அடக்கு முறைக்கு மட்டும் பயன்படுத்தக் கூடாது.." - வழக்கறிஞர் மோகன் பேட்டி!

Published on 10/07/2020 | Edited on 10/07/2020

 

j


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காமராஜ் சிலைக்கு வடபுறத்தில் செல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ். கடந்த 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை உரிமையாளர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜை சாத்தான்குளம் காவல் நிலையப் போலீசார் அழைத்துச் சென்றனர்.

 

காவல் நிலையத்தில் நடந்த விசாரணையில், போலிசார் கூட்டாகச் சேர்ந்து தந்தை மகன் இருவரையும் அடித்தாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் இருவரும் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர்கள் மீது வழக்கும் பதிவும் செய்யப்பட்டது. இதில் பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ் கைது செய்யப்பட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இருவரும் சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்தனர். இந்நிலையில் இதுதொடர்பான கேள்விகளுக்கு வழக்கறிஞர் மோகன் பதிலளிக்கின்றார். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, 

 

சாத்தான் குளத்தில் தந்தை மகன் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு உலகம் முழுவதிலும் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. உயர்நீதிமன்றமே நேரடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் ஒருவர் பின் ஒருவராகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவங்கள் எல்லாம் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்பதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குகின்றது. இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

தமிழக அரசாங்கம் குறிப்பாக காவல்துறையைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் அவர்கள் இந்த விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டுமோ அப்படி நடந்துகொள்ளவில்லை. மிகவும் அலட்சியமாக நடந்து கொண்டார்கள். இந்தச் சம்பவத்தைப் போன்று தமிழகத்தில் பல்வேறு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்திருக்கின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது இத்தகைய சம்பவங்கள் அதிகம் நடைபெற்றன. தேவாரம் தலைமையில் நடைபெற்ற வீரப்பன் தேடுதல் காவல் குழுவினர் இந்த அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபட்டனர். சில சம்பவங்கள் வெளியே தெரிந்தது. பல சம்பவங்கள் வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டது. அதைப் போல இந்தக் கொலை சம்பவத்தையும் ஆட்சியாளர்கள் மூடி மறைத்துவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் நீதிமன்றம் தலையிட்டதால் தமிழக ஆட்சியாளர்கள் அதற்காகச் சில நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியதாயிற்று. குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களைக் கைது செய்ய வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

 

ஒரு காவல்நிலைய மரணம் என்றால் ஒரு மாஜிஸ்திரேட் அந்த விசாரணையைக் கவனமாக மேற்கொள்வார். புலன் விசாரணை என்பது காவல்துறையினர் செய்ய வேண்டும். அது அவர்களுக்கே உரித்தான ஒன்று. ஆனால் காவல்நிலைய மரணங்கள் என்பது இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதால் நீதிபதி தலைமையில் அந்த விசாரணை நடக்க வேண்டும் என்று சட்டப்பிரிவு மாற்றி அமைக்கப்பட்டது. அந்த விசாரணை என்பது காவல்துறை விசாரணை போல் அல்லாமல் சுயசார்பு உடைய விசாரணை அமைப்பாக அது செயல்படும். அதே போன்று இந்த வழக்கிலும் நீதிபதி அங்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார். பெண் காவலர் ரேவதி அவர்கள் உண்மையைக் கூறியிருக்கிறார்கள். அதன் அடிப்படையில் இந்த வழக்கு விசாரணை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நம்பிக்கை நம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கின்றது. 

 

இந்திய காவல்துறை சட்டம் என்பதே இந்தியாவில் விடுதலையை ஒடுக்குவதற்காக 1861 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட ஒன்றுதான். முதல் சுதந்திரப் போராட்டம் வெடித்தது 1857-இல், அதன் பிறகு தான் இந்தியாவில் இந்த மாதிரியான போராட்டங்கள் அடிக்கடி வெடிக்கும் வாய்ப்பிருப்பதாகக் கருதி ஆங்கிலேயர்கள் இந்தக் காவல் சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். அந்தக் காவல் சட்டம் 1861 சுதந்திரம் அடைந்த பிறகு, இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காவல்துறை ஒடுக்குமுறை கருவியாக இருக்கிறதே தவிர அது ஜனநாயகப்படுத்தப்படவில்லை. அவ்வாறு காவல்துறை இருப்பதே இந்தப் பாடுபாதகச் செயலைச் செய்வதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. எனவே காவல்துறை முறைப்படுத்த வேண்டும். ஜனநாய முறையில் அதன் நடவடிக்கைகள் வெளிப்படைத்தன்மைக்கு உட்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும், இவ்வாறு கூறியுள்ளார்.

 

 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ. ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Satankulam father son case SI Bail petition dismissed

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் எஸ்.ஐ.யின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழங்கக் கோரி 5வது முறையாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதத்தை முன் வைத்தது. மறைந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி தரப்பிலும் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதிகள் ஜாமீன் மனுவை 5வது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.