Skip to main content

"மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ; இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி..." - வழக்கறிஞர் பாலு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

க

 

சமீபத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக வெளியான தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்ற நிலையில் இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு அவர்களிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " இந்தத் தீர்ப்பின் சாராம்சம் என்னவென்றால் ஒட்டுமொத்த இந்தியாவையும் உடைத்துக்காட்ட வேண்டும் என்று பாரதிய ஜனதா முடிவெடுத்திருக்கின்றது. அதைத் தற்போது அவர்கள் நிறைவேற்றி உள்ளார்கள். அதை நீதிமன்றம் தற்போது வழிமொழிந்திருக்கிறது. 

 

சுதந்திரத்திற்கு முன்பாக இந்தியா 56 சமஸ்தானங்களாக, அதற்கு முன்பாக 500க்கும் மேற்பட்ட குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. அந்த இடத்திற்கு தற்போது அவர்கள் நம்மை எல்லாம் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள் என்பது மட்டும் நிஜம். 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டுவரப்பட்ட இந்தச் சட்டம் பெரும்பான்மை பெற்று சட்டமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்துப் பல குழுக்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தத் தீர்ப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. இதில்  மூன்று நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு ஆதரவாகவும், இரண்டு நீதிபதிகள் இந்த சட்டத்திற்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ளனர். 

 

இந்தத் தீர்ப்பை வழங்கிய இரண்டு நீதிபதிகளில் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஓய்வுபெற்ற முன்னாள் தலைமை நீதிபதி லலித். அவரும் ரவீந்திர பட் அவர்களும் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தச் சட்டம் தொடர்பாக அவர்களின் பார்வையே வேறாக இருக்கிறது. இதுதொடர்பாக நீதிபதிகள் தங்களுடைய கருத்தைத் தெரிவித்துள்ளனர். இந்திய மக்களுக்குக் கொடுக்கப்பட்ட இட ஒதுக்கீட்டின் மீது அடிக்கப்பட்ட சாவுமணி என்று இந்த நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதுவரை இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு முறைக்கு எதிராக மொத்தமாக வைக்கப்பட்ட அநீதியின் வடிவமாக இந்தத் தீர்ப்பு இருக்கிறது. 

 

குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால் சாதிய அடிப்படையில் கொடுக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டிற்கு இந்தப் பொருளாதார ரீதியிலாகக் கொடுக்கப்பட இருக்கும் இட ஒதுக்கீடு என்பது அதை அடியோடு சமாதியாக்கும் வகையில் அமைந்துள்ளது. இது படிப்படியாக இட ஒதுக்கீடு எதற்காக இந்த அரசியல் சாசனத்தில் கொண்டு வரப்பட்டதோ அதன் அடிப்படை தத்துவத்தையே அசைத்துப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த இரண்டு நீதிபதிகளும் அந்தக் கருத்தையே வலியுறுத்திக் கூறுகிறார்கள். தங்களுடைய தீர்ப்பில் கூட அதை மிகத் தெளிவாக நீதிபதிகள் தெரிவித்துள்ளார்கள். பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு என்ற நடைமுறையே பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது என்ற கருத்தை இருவருமே மிகவும் வலியுறுத்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இருவரும் பயன்படுத்திய வார்த்தைகள் என்பது மிகவும் முக்கியமானது. 

 

மற்ற மூன்று நீதிபதிகள் பொருளாதார ரீதியாகக் கொண்டுவரப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டை ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள். இந்தியாவில் 80 சதவீத மக்கள் பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் பலமாக இருக்கவில்லை. அப்படி இருக்கையில் உயர் சாதியினருக்கு மட்டும் இந்த இட ஒதுக்கீடு என்பது அவர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுவிடும். இதைத் தீர்ப்பு வழங்கிய இரண்டு நீதிபதிகளும் தங்கள் தீர்ப்புகளில் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். இதை நாம் எளிதாகக் கடந்துவிட முடியாது. ஆண்டுக்கு 8 லட்சம் சம்பாதிப்பவர்கள் ஏழைகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாதம் 65 ஆயிரம் சம்பாதிப்பவர்கள் இந்த இட ஒதுக்கீட்டைப் பெறலாம் என்ற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளனர். 

 

இதைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்ற ஐயம் தீர்ப்பு வழங்கிய அந்த இரண்டு நீதிபதிகளுக்கு இருந்திருக்கிறது. தற்போது பெரும்பான்மை நீதிபதிகள் இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதுவே தற்போது நடைமுறையில் இருக்கும். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வு கூட இதை விசாரிக்க வாய்ப்பு ஏற்படும். அதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பு என்பது சமூகநீதியை விரும்பும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

 


 

Next Story

“இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
India alliance will take action to increase reservation CM MK Stalin

டெல்லியில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் நடைபெற்று வரும் சமாஜிக் நியாயக் சம்மேளன மாநாட்டிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார். அதில், “இந்தியாவிற்குள் சமூக நீதியை நிலைநாட்டுவதில் தமிழ்நாடு முக்கிய பங்கினை ஆற்றி வருகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு, இட ஒதுக்கீடு முறைக்கு அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் திராவிட இயக்கம் உறுதியான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டில் தற்போது ஓபிசி, எஸ்சி மற்றும் எஸ்டி உள்ளிட்டோருக்கு 69% இடஒதுக்கீடு வழங்கி, தன்னிச்சையான 50% இடஒதுக்கீடு வரம்பை விட கூடுதலாக இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிதியுதவியுடன், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான தொழில்முறை படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய பட்டியலினத்தவருக்கும் இட ஒதுக்கீட்டை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் திமுகவின் பல கொள்கைகள் எதிரொலிப்பது என் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஓபிசி மற்றும் எஸ்சி மற்றும் எஸ்டியினரை மேம்படுத்துவதற்கான உறுதிமொழிகளை நமது வரவிருக்கும் அரசாங்கம் ஆர்வத்துடன் நிறைவேற்றும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்தியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தாழ்த்தப்பட்டோருக்கு அதிகாரம் அளிப்பது என்பது நீதிக்கட்சி காலத்திலிருந்தே இருக்கும் தமிழ்நாட்டின் மரபு ஆகும். சம்ருத்த பாரத் அறக்கட்டளையின் மாநாட்டில் சமூக நீதி பற்றிய எனது செய்தியை எங்கள் கட்சியின் எம்.பி.யான வில்சன் மூலம் பகிர்ந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும் உள்ளடக்கிய இந்தியாவை நோக்கி நமது பயணத்தைத் தொடர்வோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மீண்டும் வெடித்த போராட்டம்; அரசுப் பேருந்துக்கு தீ வைப்பு!

Published on 26/02/2024 | Edited on 26/02/2024
The struggle broke out again and Set fire to the government bus in maharashtra

மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்தா எனும் சமூகத்தினர் பெரும்பாலானோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனை ஏற்று கடந்த 2018 ஆம் ஆண்டு, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 16 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்குவதாக அப்போது ஆட்சியில் இருந்த பா.ஜ.க அரசு அறிவித்தது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், மாநில அரசு வழங்கிய இட ஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்து தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் மராத்தா சமூகத்தினர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இதனிடையே, மராத்தா சமூகத்தின் செயல்பாட்டாளர் மனோஜ் ஜராங்கே, இட ஒதுக்கீடு கோரிக்கையை வைத்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 

அப்போது, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மனோஜ் ஜராங்கேவை சந்தித்து இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதிமொழி அளித்தார். அதனை ஏற்று மனோஜ் ஜராங்கே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டார். ஆனால், அப்போது இட ஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டது. அதனால், மனோஜ் ஜராங்கே மீண்டும் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய போது மராத்தா சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு, ரோட்டில் டயர்களை தீ வைத்து எரித்தனர். மேலும், தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரகாஷ் சோலங்கியின் வீடு மற்றும் வாகனங்களுக்குத் தீ வைத்து எரித்தனர். இந்த சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. 

இதனையடுத்து, மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில், தனிப் பிரிவின் கீழ் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு பிரிவின் கீழ் மராத்தா சமூகத்துக்கான இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், மராத்தா சமூகத்தினர் குன்பி சாதியை சேர்ந்தவர்கள் என்ற அறிவிப்பை சட்டமாக இயற்றி நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மனோஜ் ஜாரங்கே மற்றும் ஆதரவாளர்கள் ஜல்னா மாவட்டம், அந்தர்வாலி சாரதி கிராமத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று (26-02-24) காலை, ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர், அங்கு நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மீது தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், இதே கோரிக்கைகளை வலியுறுத்தி, சகால் மராத்தா சமாஜ் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவி வருகிறது. இதையடுத்து, மனோஜ் ஜாரங்கே போராட்டத்துக்கு ஆதரவாளர்கள் கூடுவதை தவிர்க்க ஜல்னா, சத்ரபதி, சம்பாஜி நகர், பீட் ஆகிய மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.