Skip to main content
Nakkheeran Magazine Nakkheeran Magazine

 அ.தி.மு.க, பா.ஜ.கவின் அரசியலும், அப்செட்டும்! 

indiraprojects-large indiraprojects-mobile

நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டமன்ற இடைத்தேர்தலின் வெற்றியை முக்கியமாக கருதும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு நாளும் சேலத்தில் இருந்தபடியே தேர்தல் பணிகளை உன்னிப்பாக கவனித்தபடி இருந்தார். அமைச்சர்களையும் அவர்களது தலைமையில் இயங்கிய தொகுதிப் பொறுப்பாளர்களையும் தொடர்புகொண்டு எல்லா விவரங்களையும் விசாரித்தார். பாஸிட்டிவ் பதில் கிடைத்தபின், உளவுத்துறையினரிடமும் இது குறித்து விசாரித்தார் எடப்பாடி. அவர்கள் தந்த தகவல் வேறு ரகம்.

 

admk allianceஇது குறித்து உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஓ.பி.எஸ்., செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், தங்கமணி, வேலுமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் என சீனியர்கள் பொறுப்பேற்றுக்கொண்ட தொகுதிகளைத்தவிர, மற்ற இடங்களில் பணப்பட்டுவாடா முழுமையாக செய்யப்படவில்லை. கொடுக்கப்பட்ட அமௌண்ட்டுகளில் பாதியை நிர்வாகிகளே அமுக்கிக்கொண்டனர்.அதாவது, ஒரு பூத்தில் 1200 வாக்குகள் இருக்கிறதென்றால் சிலருக்கு கொடுத்துவிட்டு பலருக்கும் கொடுக்கவில்லை. இதனால் பணம் கிடைக்காத அ.தி.மு.க. வாக்காளர்களே அதிருப்தியடைந்துள்ளனர். 

 

dmk allianceமேலும், கட்சி சாராத பொதுவான வாக்காளர்கள், பெண் வாக்காளர்களிடம் இந்த ஆதங்கம் அதிகமாக உள்ளது. தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகப்போக வாய்ப்பு உண்டு என்பது முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இதனையறிந்து கோபப்பட்ட முதல்வர் எடப்பாடி, அமைச்சர்களை திட்டமுடியாது என்பதால் நிர்வாகிகளிடம் கோபத்தைக் கடுமையாகக் காட்டியுள்ளார். "தேர்தல் முடிவுகள் நெகடிவ்வாக வந்தால் தொலைச்சுடுவேன் தொலைச்சு. என்ன செய்யச்சொல்லி உங்களுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டதோ அதை செய்து முடியுங்கள். முடிவுகள் நல்லபடியாக வந்தால் நீங்கள் எதிர்பார்க்காததையும் செய்வேன்' என நம்பிக்கையும் கொடுத்துள்ளார்.

 

epsஇதனையடுத்தே, பதுக்கப்பட்ட பணத்தை வெளியே எடுத்து உற்சாகத்துடன் பணப்பட்டுவாடாவை கடைசி 2 நாளும் செய்து முடித்துள்ளனர் அ.தி.மு.க. நிர்வாகிகள். இதனை உன்னிப்பாக விசாரித்தபடியே இருந்த முதல்வர், 70 சதவீதம் கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்து திருப்தியடைந்தார். இடைத்தேர்தல் தொகுதிகளில்தான் அவரது கவனம் அதிகமாக இருந்தது'' என்று சுட்டிக்காட்டுகிறார்கள். இதற்கிடையே, வாக்குப்பதிவு நாளன்று இடைத்தேர்தல் தொகுதிகளில் ஓட்டுப் போட்டு விட்டு வந்த வாக்காளர்களின் மனநிலையை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார் எடப்பாடி. அதிகாரிகளிடமிருந்து கிடைத்த தகவல்கள் அவருக்கு உற்சாகத்தைத் தரவில்லை என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். 

 

modiஇது ஒருபுறமிருக்க, தலைமையிலிருந்து கொடுக்கப் பட்ட பணத்தை அ.தி.மு.க. நிர்வாகிகள் பதுக்கிக் கொண்டனர் என்கிற உளவுத்துறையின் தகவலால் அப்-செட்டாகியிருந்த எடப்பாடிக்கு, கடந்த 16-ந் தேதி இரவு டெல்லியிலிருந்து நினைவுபடுத்திய ஒரு தகவல் அவரை கவலையடைய வைத்தது. அது என்ன தகவல் என டெல்லி தரப்பில் விசாரித்தபோது, தமிழகத்தில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி 25 இடங்களை கைப்பற்றியாக வேண்டுமென்பது மோடி-அமித்ஷாவின் எதிர்பார்ப்பு.

அத்துடன் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வின் தத்துவார்த்த அரசியலை மிகக்கடுமையாக எதிர்ப்பவர்களான கனிமொழி, ஆ.ராசா, திருமாவளவன் ஆகியோரும் காங்கிரசில் இருந்தபடி இதே தத்துவார்த்த அரசியலை எதிர்ப்பவரான ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் நாடாளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் திட்டம். நால்வரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே அந்த திட்டத்தை எடப்பாடிக்கு தெரியப்படுத்தி விட்டனர். 

இந்த நிலையில்தான், கடந்த 16-ந் தேதி இரவு அதனை மீண்டும் எடப் பாடிக்கு நினைவுபடுத்தியது டெல்லி. திட்டத்தை நினைவு படுத்திய டெல்லியிடம், நீட் தேர்வு, எட்டுவழிச் சாலை குறித்து மத்திய அமைச்சர்களின் நெகட்டிவ் பேச்சுகளை நினைவு படுத்தி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் எடப்பாடி. அதனையெல்லாம் பொருட்படுத்தாத டெல்லி, தங்களது ஐடியாலஜிக்கல் டார்கெட்டில் இருக்கும் நால்வரையும் தோற்கடிப்பதில் கவனம் செலுத்துங்கள் என அழுத்தமாக வலியுறுத்தியது'' என்கின்றன டெல்லியிலிருந்து கிடைக்கும் தகவல்கள். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
Loading...