Skip to main content

தொண்டர்களிடம் ஒலிக்கும் உரிமைக் குரல்.. அதிமுக மா.செ.வுக்கு எதிராகக் கொந்தளிப்பு! 

 

ADMK Tuticorin District secretary issue

 

தூத்துக்குடி அரசியல் வட்டாரங்களின் புருவங்களை உயரவைத்திருக்கிறது அந்த சம்பவம். ஏனெனில், தூத்துக்குடி அரசியல் வரலாற்றில் ஒரு முன்னணி கட்சியின் மா.செ.வை எதிர்த்து அக்கட்சியின் அனைத்து முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் கூட்டம் கூட்டமாக திரண்டுவந்த சரித்திரம் இல்லை. தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக வட்டத்தில் நடந்த கூட்டத்தில் எழுந்த எதிர்ப்பு சம்பவத்தைப் பற்றி அக்கட்சியின் தொண்டர்கள் பலரிடம் விசாரித்தோம்.

 

அவர்கள் கூறியதாவது, “அதிமுகவின் தெற்கு மா.செ.வானவர் எக்ஸ் எம்.எல்.ஏ.வான சண்முகநாதன். அவர் மா.செ. பொறுப்புக்கு வந்தவுடன் தூத்துக்குடி நகரிலுள்ள கட்சியின் பல முக்கிய புள்ளிகளும் சீனியர்களுமான 42 பேர்களின் வட்டச் செயலர் பதவியைப் பறித்து தனக்கு வேண்டப்பட்ட, கட்சிக்கு அறிமுகம் இல்லாதவர்களை அந்தப் பொறுப்பில் அமர்த்தியபோது, கிளம்பிய எதிர்ப்பும் கொதிப்பும் இன்றுவரை அணையவில்லை. இதையடுத்து நகரின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரண்டுபோய் கட்சித் தலைமையிலும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரிடமும் தெரிவித்ததோடு இதனால் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் இருப்பதையும் முன்வைத்தோம். அப்போது, தலைமையும் தலைவர்களும் உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்றார்கள். ஆனால், ஒன்றரை வருடங்கள் கடந்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. பறிக்கப்பட்ட பதவியும் திரும்ப அவர்களுக்குத் தரப்படவில்லை. எல்லாம் காற்றோடு போய்விட்டது. மேலும், அவர் கட்சியை வளர்க்கவில்லை, தொண்டர்களையும் அனுசரித்துச் செல்லவில்லை. இதனால் தொண்டர்கள் வெறுப்பால் மிகவும் சோர்வடைந்து போனார்கள்.

 

ADMK Tuticorin District secretary issue

 

அதிமுகவின் அடையாளமே தூத்துக்குடிதான். தலைவர் எம்.ஜி.ஆர் காலந்தொட்டு ஜெயலலிதாவின் காலம்வரையிலும் மாவட்டத்தின் தலைமையிடமான தூத்துக்குடி அதிமுகவிற்கே ஒதுக்கப்பட்டு வந்திருக்கிறது. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் தனக்கு ஈடாக எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வந்துவிடக் கூடாது, வந்துவிட்டால் அவர்கள் வளர்ந்துவிடுவார்கள், மா.செ. பதவி கேட்பார்கள். தனக்கு அது பாதகமாகிவிடும் என்பதால் கட்சியளவில் உள்ளடி வேலைகளை வெளியே தெரியாமல் டெக்னிக்கலாகவே வைத்துக்கொண்டார் சண்முகநாதன். எம்.பி. தேர்தல் வந்தபோது அதிமுகவைச் சேர்ந்த எக்ஸ் எம்.பி. நட்டர்ஜி, செல்லப்பாண்டியன் உள்ளிட்டோர் சீட் கேட்டனர். வாய்ப்பு கட்சியினருக்குப் போய்விடக் கூடாது என்பதற்காக மா.செ. சண்முகநாதன், தொகுதியை நைசாக கூட்டணியான பி.ஜே.பி.க்கு ஒதுக்கும்படி ஏற்பாடுகளைச் செய்துவிட்டார். விளைவு எம்.பி. தேர்தலில் களம் கண்ட பி.ஜே.பி. தோல்வியைத் தழுவியது. அது சமயமே தூத்துக்குடி மாவட்டத்தில் அதிமுகவின் செல்வாக்கு சரியத் தொடங்கியது. அடுத்து வந்த எம்.எல்.ஏ. தேர்தலில் கட்சியின் சார்பில் செல்லப்பாண்டியன், ஏசா துரை, அமிர்த கணேசன், ஜோதிமணி உள்ளிட்ட 30 பேர்கள் சீட் கேட்டனர். ஆனால் மா.செ. வாக்குபலமே இல்லாத கூட்டணிக் கட்சியான த.மா.கா.விற்குத் தொகுதியைத் தாரைவார்த்துக் கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டார். தலைமையும் தொண்டர்களின் கருத்துகளை, உணர்வுகளை அயறியாமல் மா.செ. முடிவிற்குக் கட்டுப்பட்டது. ஆனால் கண்ட பலன் என்ன. த.மா.கா. தோல்வியடைந்தது.

 

இந்த இரண்டு தேர்தல்களிலுமே கூட்டணிக் கட்சிகள் தோல்வியடைந்தன. அதிமுகவின் உரிமையே பறிபோனது. அதேபோன்று, வருகிற மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலிலும் தூத்துக்குடி மாநகராட்சி கூட்டணிக் கட்சிக்குப் போய்விடக் கூடாது என்பதே எங்களின் நிலைபாடு. மாறாக தற்போது தூத்துக்குடி மாநகராட்சியை பி.ஜே.பி.க்கு ஒதுக்கவும், அதன் சார்பில் சசிகலா புஷ்பாவை மேயர் தேர்தலில் நிறுத்துவதற்கான பேரங்களும் நடப்பதை அறிந்துதான் நாங்கள் தொகுதியை இழந்துவிடக் கூடாது என்று முனைப்புடன் செயல்பட்டுவருகிறோம். மா.செ.வை எதிர்த்து போர் கொடி உயர்த்தத் தொடங்கியிருக்கிறோம். அதன் அடிப்படையில்தான் அதிமுக அமைப்புச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் ஏசா துரை, இணைச் செயலாளர் ஜோதிமணி, மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் ஆறுமுக நயினார் மற்றும் தலைமைக் கழகத்தின் நட்சத்திர பேச்சாளர் கருணாநிதி உள்ளிட்டோர் ஏற்பாட்டில் மா.செ.வுக்கு எதிராக பெருங்கூட்டமாக திரண்டுள்ளோம். கூட்டம் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மா.செ. சண்முகநாதன் மற்றும் அவர் தரப்பினர் ஒவ்வொரு வட்ட - கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், முக்கிய நிர்வாகிகள் ஆகியோரைத் தொடர்புகொண்டு யாரும் கூட்டத்திற்குப் போக வேண்டாம் என்று தடுத்துப் பார்த்தார், முடியவில்லை. ஆனால் அதையும் மீறி நிர்வாகிகள், வட்டக் கழகச் செயலாளர்கள், தொண்டர்கள் என அனைத்துப் பகுதியிலிருந்தும் தன்னார்வத்துடன் திரளாகக் கலந்துகொண்டனர்” என்கிறார்கள்.

 

ADMK Tuticorin District secretary issue

 

செப்டம்பர் 11 அன்று தூத்துக்குடியின் கனி பேலசில் நடந்த அந்தக் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டிருக்கிறார்கள். மண்டபத்தின் கொள்ளளவையும் தாண்டியிருந்தது கூட்டம். மா.செ.வுக்கு எதிரான குரல்களும் கோஷங்களும் வலுவாக எதிரொலித்தன. ஏசா துரை, செல்லப்பாண்டியன், ஆறுமுக நயினார், ஜோதி மணி, கருணாநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மா.செ.வுக்கு எதிராகத் திரண்டிருந்தனர். கூட்டத்தில் பேசிய அனைவருமே மா.செ.வின் கட்சி தொடர்பான நடவடிக்கைகளையும் செயல்பாடுகளையும் கண்டனம் செய்திருக்கின்றனர்.

 

தலைமை உரையில் பேசிய ஏசா துரை, “தொண்டர்கள் சோர்ந்துவிட்டனர். அது நீடித்தால் கட்சிக்கு நல்லதில்லை. மா.செ. சண்முகநாதன், மாவட்டத்தில் கட்சியை வளர்ப்பதில் அக்கரை காட்டவில்லை. கட்சி வேலையும் நடக்கவில்லை. அவருக்கு அவருடைய சொந்த வேலைகளைக் கவனிக்கவே நேரம் சரியாகிவிடுகிறது. பிறகெப்படி கட்சியைக் கவனிப்பார். இந்த நிலைமையில மாவட்டத்துல கட்சி அதல பாதாளத்திற்குப் போய்க்கிட்டிருந்தது. முக்கிய நிர்வாகிகளான நாங்கெல்லாம் சேர்ந்து ஏதாவது செய்யணும்னு பல நாட்களாக யோசனை பண்ணிட்டிருந்தோம். அதே சமயம் தொண்டர்களும் எங்களை அணுகி மாவட்டத்துல, ‘கட்சி சரிவுல போய்ட்டுயிருக்கு. ஏதாவது ஏற்பாடு பண்ணுங்க’ என்ற அவர்களின் வற்புறுத்தலுக்குப் பிறகே இந்தக் கூட்டம் போடப்பட்டது. அதனால்தான் தொண்டர்களும் இவ்வளவு பேர் திரண்டிருப்பதைப் பார்த்து மா.செ.வுக்கு அவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்பது வெளிப்படுகிறது. பதவிக்கு கட்சி சார்ந்தவர்கள் வரக்கூடாது என்று அவர் நினைக்கிறார். நாம் கடந்த இரண்டு முக்கியமான தேர்தலிலும் நமது உரிமையைப் பறிகொடுத்துவிட்டோம். இனிவரும் உள்ளாட்சித் தேர்தலான மாநகராட்சித் தேர்தலில் தலைநகர் தூத்துக்குடியைக் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்திப் பெற வேண்டும்” என்றார் குரலை உயர்த்தி.

 

th

 

தொடர்ந்து பேசிய அமைப்புச் செயலாளர் சி.த. செல்லப்பாண்டியன், “நாம் கடந்த தேர்தல்ல இடத்தை இழந்துவிட்டோம். அதற்குக் காரணம் மா.செ.தான். நாம் சோர்ந்துபோய்விடக் கூடாது. கட்சி நல்லா இருந்தால்தான் நாம் நல்லா இருக்கமுடியாம். அதனால் நாம் அத்தனை பேரும் ஒன்றாக இணைந்து ஒரே அணியாகச் செயல்பட வேண்டும். வருகிற உள்ளாட்சித் தேர்தலில் கட்சியின் உரிமையை விட்டுவிடக் கூடாது” என்றார் அழுத்தமான குரலில்.

 

பின்னர் பேசிய ஆறுமுக நயினாரோ, “கட்சியில தொய்வு ஏற்பட்டுறுச்சி. கட்சியின் தொண்டர்களும் சோர்ந்து போய்விட்டார்கள். வரும் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி வெற்றிபெற வேண்டி நாம் அனைவரும் முனைப்புடன் இப்போதே தேர்தல் பணியாற்ற வேண்டும்” என்று அழுத்தம் கொடுத்தார்.

 

தொடர்ந்து சாத்தான்குளம் எக்ஸ் எம்.எல்.ஏ.வான நீலமேகவர்ணம் உள்ளிட்ட பல நிர்வாகிகளின் பேச்சிலும் தொகுதியைப் பெறுவதிலும் மா.செ.வுக்கு எதிரான குரல்களுமே ஒலித்தன.

 

ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை நீக்கி அதனை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதைத் திரும்பப் பெற வேண்டும் என்று வற்புறுத்துவது; பாளையில் எம்.ஜி.ஆர். பூங்காவில் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலை நிறுவப்பட வேண்டும்; கழகத்தின் 50வது ஆண்டை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்; வரும் உள்ளாட்சித் தேர்தலில் தலைநகர் தூத்துக்குடியை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும்; எந்தக் காலத்திலும் எக்காரணம் கொண்டும் தொகுதியைக் கூட்டணிக் கட்சிகளுக்குத் தரக்கூடாது என்பதை வலியுறுத்தி தலைமையை வற்புறுத்துவது என்பன உள்ளிட்ட ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்தத் தீர்மானங்களுக்கு வந்திருந்த கூட்டத்தினரிடையே ஆதரவு கோஷங்கள் ஓங்கி ஒலித்தன.

 

ADMK Tuticorin District secretary issue

 

இதுகுறித்து நாம் மா.செ. சண்முகநாதனை தொடர்புகொண்டு பேசியபோது, “கட்சியின் அணியின் சார்பில் போடப்பட்டக் கூட்டம் அது. அவர்கள் கூட்டம் நடத்தியுள்ளார்கள். தொகுதியைத் தொண்டர்கள் கேட்பது இயல்புதானே. என்னைப் பிடிக்காதவர்கள் கூட்டத்தில் அப்படித்தான் பேசியிருப்பார்கள்” என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார்.

 

இந்தக் கூட்டம் குறித்து தலைமைக் கழகத்தின் நட்சத்திரப் பேச்சாளரான கருணாநிதியிடம் கேட்டபோது, “மா.செ. பல தவறுகள் செய்துள்ளார். தொகுதியைக் கட்சிக்கு ஒதுக்காவிட்டால் அடுத்த கட்டமாக தொண்டர்கள் திரண்டு போய் நகரிலுள்ள எம்.ஜி.ஆர். சிலையின் முன்பு சாகும்வரை உண்ணாவிரம் இருப்பார்கள்” என்றார் காட்டமாக.

 

மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் ஒவ்வொருவரிடமும் உரிமைக் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன.