ADVERTISEMENT

சூரியனுக்கு நிகராக இலை! கறார் இ.பி.எஸ்! அ.தி.மு.க. தொகுதி கணக்கு!

12:15 PM Mar 06, 2021 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேர்தல் அறிவிப்புக்கு முந்தைய நாள் எடப்பாடி பழனிசாமியின் வீட்டுக்கு வந்த கட்சிக்காரர்கள், எல்லாம் ஏதோ கேரளாவில் உள்ள கோவிலுக்கு வந்ததுபோல் உணர்ந்தார்கள். யாககுண்டம், மந்திர உச்சாடனம் என கேரளச் சாமியார்கள் புடைசூழ அமர்ந்திருந்தார்கள் எடப்பாடி பழனிசாமியும், அவரது குடும்பத்தினரும். எடப்பாடி பழனிசாமியின் ராசிக்கு உகந்த அந்நாளில் மிகப் பெரிய பூஜை ஒன்றை அவருக்கு மிக நெருக்கமான கேரளாவைச் சேர்ந்த ஜோதிடர்கள் மற்றும் மந்திரவாதிகள் துணையுடன் நடத்தி முடித்தனர். அதன் பிறகுதான் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்க ஆரம்பித்தார் எடப்பாடி பழனிசாமி.

பா.ம.க. கேட்ட எண்ணிக்கைக்கு அ.தி.மு.க. ஒத்துக்கொள்ளவில்லை. உங்களுக்கு ராஜ்ய சபா சீட் ஏற்கனவே தந்துவிட்டோம் என அ.தி.மு.க. தரப்பில் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் அடங்கிய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தையை இறுதி செய்ய வேண்டும் என டாக்டர் ராமதாஸிடமும், அன்புமணியிடமும் பேசிக்கொண்டிருந்தது. நாங்கள் கூட்டணிக்குள் வராவிட்டால் எடப்பாடி தொகுதியிலேயே பழனிசாமி வெற்றிபெற மாட்டார் என பா.ம.க. எதிர் வாதம் பேசிக்கொண்டிருந்தது.

அத்துடன் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுக்கவில்லையென்றால் நாங்கள் ஓட்டுக் கேட்டு வன்னியர் மக்கள் மத்தியில் போக முடியாது என வாதம் செய்த பா.ம.க.வுக்கு, வெயிட்டாக தர வேண்டியதைக் கொண்டு சென்று இறக்கினார் எடப்பாடி பழனிசாமி. அத்துடன் 10.5 சதவீதம் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு தருகிறோம் என பேரம் பேசியது அ.தி.மு.க.. 15 சதவீதம் வேண்டும் என பா.ம.க. தரப்பில் படிய மறுத்தார்கள். அதன் பிறகு தொடர் பேச்சுவார்த்தையின் இறுதியாக சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியை அனுப்பி எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வைத்தார்கள்.

இரு தரப்புக்கும் நடந்த மாரத்தான் பேச்சுவார்த்தை சட்டமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாள் மதியம்தான் முடிவடைந்தது. அதன் பிறகு, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி தனது கடைசிப் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு சபைக்குள் நுழைந்து, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டைச் சட்டமன்றத்தில் அறிவித்து, அதைக் கவர்னரின் கையெழுத்துக்கும் அனுப்பிய பிறகு, மறுநாள் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகள் என நட்சத்திர ஓட்டலில் ஒப்பந்தம் முடிவானது.

பா.ஜ.க. தரப்புடனான பேச்சுவார்த்தையில் பா.ம.க.வை விட அதிகமான இழுபறியை அ.தி.மு.க. எதிர்கொண்டது. மொத்தம் 50 தொகுதிகளைத் தங்களுக்குத் தர வேண்டுமென பா.ஜ.க. ஏற்கனவே எழுதி அ.தி.மு.க.விடம் கொடுத்துவிட்டது. அத்துடன் சசிகலாவுக்கும், டிடிவி. தினகரனுக்கும் நாங்கள் கொடுக்கிறோம் என 40 தொகுதிகளை அ.தி.மு.க.விடம் பா.ஜ.க. கேட்டிருந்தது. சசிகலாவும், தினகரனும் வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தெளிவாகக் கூறிவிட்டார். மீண்டும் அதே கோரிக்கை பா.ஜ.க.வினரால் எழுப்பப்பட்டது. டென்ஷன் ஆன எடப்பாடி பழனிசாமி, சசிகலா, தினகரன் பற்றி பிரதமரிடமே தெரிவித்துவிட்டேன். மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசுவது சரியில்லை என்றார். உடனே பா.ஜ.க. டீம் ஓ.பி.எஸ்.ஸைச் சந்தித்து, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியது.

எங்களது கணக்குப் படி டிடிவி.தினகரனுக்கு 4 சதவீத ஓட்டுகள் இருக்கிறது. பீகார் தேர்தல் 1 சதவீதத்திற்கும் குறைவான ஓட்டுக்களின் வித்தியாசத்தில்தான் அமைந்தது. அப்படி இருக்கும்போது, தினகரனை நாம் புறக்கணிப்பது கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்றார்கள். ஓ.பி.எஸ்.ஸோ எடப்பாடி பழனிசாமி என்ன சொல்கிறாரோ, அதையே செய்யுங்கள் எனக் கைவிரித்து விட, 18 தொகுதிகள் என பா.ஜ.க.விடம் பேச்சை ஆரம்பித்தது அ.தி.மு.க.! தி.மு.க.வில் காங்கிரஸ் 25 தொகுதிகளுக்குக் குறையாமல் வாங்கும். அதை விட குறைவாக நாங்கள் பெறுவது சரியாக இருக்காது என பா.ஜ.க. தரப்பு பேசியது. இதற்கிடையே, அமித்ஷா சென்னைக்கு வந்தடைந்தார். அவரை முன்னிலைப்படுத்தி ஆரம்பித்த பேச்சில், கடைசியாக 20 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.க. போட்டியிடுவது என பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்தது என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்த தமிழக தலைவர்கள்.

இதற்கிடையே, விஜயகாந்தின் தே.மு.தி.க. 40 தொகுதிகளைக் கேட்க அதற்கு அ.தி.மு.க. ஒற்றை இலக்க தொகுதிகளைத் தருவதாக பதில் சொல்லியது. நாங்கள் தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் என தே.மு.தி.க.வினர் சொல்ல, அது விஜயகாந்தின் கட்சி. இன்று இருப்பது, பிரேமலதாவின் கட்சி எனச் சூடாகவே பதில் சொல்லியிருக்கிறார்கள். இதற்கிடையே, விஜயகாந்தை அமைச்சர்கள் குழு ஒன்று சந்தித்து பேசியது. அவர்களிடம் வர வேண்டிய மலர்ச் செண்டுகள் பற்றியும், தொகுதிகள் பற்றியும் கடுமையாக பேசியிருக்கிறது தே.மு.தி.க தலைமை.

த.மா.காவுக்கு 6 இடம், ஜான்பாண்டியன், புதிய தமிழகம், தேவைப்பட்டால் ஒரு இஸ்லாமிய இயக்கம் எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 170 தொகுதிகளில் நிற்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையில் ஒன்றுகூட குறையாமல் அ.தி.மு.க. போட்டியிடும் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் நிலை. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு 50 சதவீதம், ஓ.பி.எஸ்.ஸுக்கு 50 சதவீதம் என பிரித்துக்கொள்வது, பா.ஜ.க.வின் தேர்தல் செலவுகளை ஏற்றுக்கொள்வது, சரத்குமாரை தனியாகப் பிரித்துக் களம் காண்பதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க. மூலம் செய்வது போன்றவை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வின் வியூகங்களில் உள்ள குறுஞ்செய்திகள் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT