Advertisment

ஓட்டுப் போடுறதுக்கு வந்துரு வாங்க குடுங்க... தெம்பாக இருக்கும் அதிமுக... எடப்பாடிக்கு சென்ற புகார்!

நாங்குநேரி இடைத் தேர்தலுக்காக காவல் துறையினரை உள்ளடக்கிய 9 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. ஆனால், வெறும் 18 லட்சத்து 97 ஆயிரம் மட்டுமே பிடிபட்டிருக்கிறது என்கிறார்கள். களக்காடு அருகிலுள்ள கட்டார்குளத்தில் அ.தி.மு.க. புள்ளி மாரியப்பன் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்த போது பிடிபட்டதும், மற்றொரு பகுதியான பத்மநேரியில் பறக்கும் படையைக் கண்ட 5 பேர் 50 ஆயிரத்தை வீசி விட்டுச் சென்றுள்ளதும் மட்டுமே களக்காடு காவல் நிலையத்தில் வழக்காகப் பதிவாகியுள்ளது.

Advertisment

vote

அடுத்து அம்பலம் கிராமத்தில் காங்கிரஸ் தரப்பின் தேர்தல் பணியாளர்கள் 10 பேர் தங்கியிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பணத்தைத் தகவலின் அடிப்படையில் பறக்கும் படை பிடித்திருக்கிறது. நம் பக்கம் கொடுக்கல் சுத்தமாக இருந்தால்தான், வாக்காளரிடமிருந்து வாக்கை வாங்க முடியுமென கைத் தரப்பு விவகாரமின்றி அனைத்துப் பகுதிகளிலும் பட்டுவாடாக்களை நடத்திவிட, இலைத் தரப்பில் வாக்காளர்களுக்காகத் தரப்பட்டவை முழுமையாகச் சென்றடையவில்லை என்ற புகார் எழுந்திருக்கிறது.

8 வாக்குகளிருக்கும் ஒரு வீட்டிற்கு 5 வாக்குகளுக்கு மட்டுமே தந்துவிட்டு மீதம் 3 பேர் வாக்காளர் லிஸ்ட்டில் இல்லாதவர்கள் என்று சொல்லிக் கழித்திருக்கிறார்கள். 6 வாக்குகளிருக்கும் ஒரு வீட்டில் 4 வாக்குகளுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு மற்ற இருவர் வெளியூரிலிருப்பவர்கள் என்று சொல்லி தர மறுத்தவர்களிடம், "ஓட்டுப் போடுறதுக்கு வந்துரு வாங்க குடுங்க' என்று கேட்டும் மறுக்கப்பட்டுள்ளதாம். மேலிடம் வரை புகார் போனது.

இதையடுத்து 18-ஆம் தேதியன்று எடப்பாடியாரின் மைத்துனரும், கோவை மருத்துவத் துறையிலிருக்கும், முருகக் கடவுளின் கையிலிருக்கும் ஆயுதத்தின் பெயரைக் கொண்டிருக்கும் அந்தத் தூதுவர், நாங்கு நேரியின் பல்ஸ் பார்ப்பதற்காக வந்திருக்கிறார். கட்சித் தரப்பினர், பொது மக்கள் தரப்பு புகார்களைக் கணக்கிலெடுத்து மேலே தகவல் தர, பலவீனத்தை பலமாக மாற்றும் கடைசிக் கட்ட சீர்படுத்தல்கள், மெனக்கெடல்கள் காட்டப்பட்டதையடுத்து தெம்பாக தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது இலைத் தரப்பு.

Advertisment

இதனிடையே கூட்டணியான காங்கிரசின் தேர்தல் பணிக்காக தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்ட மூலக்கரைப்பட்டி ஏரியாவின் அம்பலம் கிராமத்தில் வீடு எடுத்துத் தங்கியிருந்தனர் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமாரும் கட்சியினரும். இவர்கள் பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக சிக்கியுள்ளனர். கடந்த அக்டோபர் 17 அன்று மாலை 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று எம்.எல்.ஏ. தங்கியிருந்த வீட்டிற்குள் அத்துமீறிப் புகுந்து அங்குள்ள பொருட்களைச் சேதப்படுத்தியிருக் கின்றனர். அத்துடன் அவர்கள் செலவிற்காக வைத்திருந்த பணத்தை வாரியிறைத்துவிட்டு எம்.எல். ஏ. உட்பட சிலரைத் தாக்கியிருக்கிறார்கள். அதில் எம்.எல்.ஏ. உடன் வந்த முருகேசன், திராவிடசுப்பு உட்பட மூவருக்குக் காயமேற்பட்டிருக்கிறது. எம்.எல்.ஏ.வைத் தாக்கியவர்கள் மீது புகார் தரப்பட்டு எப்.ஐ.ஆர். ஆகியிருக்கிறது என்கிறார் காங்கிரசின் தலைமை பூத் ஏஜெண்ட்டும், தி.மு.க.வின் கிழக்கு மா.செ.வுமான ஆவுடையப்பன்.

இதற்கிடையே காங்கிரசும் கடைசிக்கட்ட வியூகங்களையும் பிரச்சாரங்களையும் செய்து முடித்திருக்கிறது. தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர், தங்களது கோரிக்கை நிறைவேறாததால் சொன்னதுபோல் தேர்தலன்று, தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தூத்துக்குடி துறைமுகத்தின் அதிகாரியாகப் பணியிலிருக்கும் ஆறுமுகம், அவர் மனைவி முருகேஸ்வரி வணிக வரித்துறையின் அதிகாரி. இவர்கள் தொகுதிக்குட்பட்ட கே.டி.சி. நகரில் குடியிருக்கிறார்கள். அங்குள்ள 166-வது எண் பூத்தில் கடந்த பார்லிமெண்ட் தேர்தல் வரை வாக்களித்திருக்கிறார்கள். இவர்கள் அந்த பூத்தில் வாக்களிக்கச் சென்ற போது அவர்களின் பெயர் தங்களது லிஸ்ட்டில் இல்லை என்று சொல்லி பூத் அதிகாரி வாக்களிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருக்கிறார்.

இதனிடையே எம்.பி. வசந்தகுமார் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கலுங்கடி கிராமத்திற்குப் போக... அவர் மடக்கப்பட்டார். வெளியூர்க்காரர் என்ற முறையில் விதிமீறலுக்காக எஃப்.ஐ.ஆர். போட மும்முரமானார் எஸ்.பி. அருண் சக்திகுமார். மக்கள் தீர்ப்பும் முடிந்துவிட்டதால், மானிட்டர் அறிவிக்கவிருக்கும் தீர்ப்பை அறிய இனி ரூபி மனோகரனும் நாராயணனும் காத்திருக்க வேண்டியதுதான்.

complaint By election admk eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe