ஈஷாவுக்குச் சென்ற அமைச்சர் வேலுமணி... ரகசியமாக நுழைந்த அமரர் ஊர்தி... பரபரப்பை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!

ஜக்கிவாசுதேவின் கோவை ஈஷா மையத்திற்குள் கடந்த 9ஆம் தேதி ஒரு ஆம்புலன்ஸும், ஒரு அமரர் ஊர்தியும் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பான செய்தியானது.

ஈஷா மையத்தில் 150 வெளி நாட்டினர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு கரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்துதல் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் எட்டு பழங்குடியினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். மடக்காடு வெள்ளியாச்சி, மாடசாமி, மாடன் உள்பட எட்டு பேர் கடந்த மாதம் ஈஷா யோகா மையத்திற்குச் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்படவில்லை. இவர்கள் அங்கேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் மரணம் அடைந்துவிட்டார். அதனால்தான் 108 ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தியும் ஈஷா யோகா மையத்திற்குச் செல்கிறது என சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்பட்டன.

isha

அதேநேரத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, ஈஷா யோகா மையத்திற்குச் சென்றுள்ளார். இது மேலும் பரபரப்பை உண்டாக்கிவிட்டது. அமைச்சரே நேரில் வருகிறார் என்றால் ஏதோ ஒன்று நடக்கிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தையே மறைப்பதற்கு ஆளுந்தரப்பு பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டதை கோவை மாவட்ட மக்கள் மனதில் அசைபோட்டதால், மறுபடியும் சமூக வலைத்தளங்கள் பரபரப்பாயின..

உண்மை நிலவரம் குறித்து விசாரித்தோம். ஈஷா அமைந்துள்ள போலுவான்பட்டி காட்டுப் பகுதியில் அமைந்துள்ள நாசேகவுண்டன்புதூர் கிராமத்தில் ஒரு விவசாயி இறந்துவிட்டார். அவரை மத்தூ ராயபுரம் சுடுகாட்டில் இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்தது. மத்தூ ராயபுரம் சுடுகாடு, ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ளது. அந்தச் சுடுகாட்டை ஒரு லட்சம் ரூபாய் செலவு செய்து புதுப்பித்த அரசு, கடந்த வருடம் ஈஷா யோகா மையத்திடம் ஒப்படைத்து விட்டது. தற்போது ஈஷா யோகா மையத்திடம் அனுமதி பெற்றால்தான் யாரையும் அங்கு புதைக்கவோ, எரிக்கவோ முடியும். அதனால் நாசே கவுண்டன் புதூரில் இறந்த விவசாயிக்காககொண்டுவரப்பட்ட ஆம்புலன்சும், அமரர் ஊர்தியும் ஈஷா யோகா மையத்திற்குள் சென்றது. ஈஷா யோகா மையத்திற்குப் பக்கத்தில் உள்ள பழங்குடி கிராமத்திற்கு அமைச்சர் வேலுமணி வந்து சென்றார் என அரசு தரப்பு விளக்கம் அளித்தது.

admk

http://onelink.to/nknapp

அதன்பிறகும், சமூக வலைத்தள பரபரப்பு அடங்கவில்லை. ஈஷா மையத்தில் ஒரு வெளிநாட்டுக்காரர் மர்ம மரணம் அடைந்தார். அதனால் பிரச்சனை ஏதும் ஏற்பட்டுவிடக்கூடாது என அமைச்சரும், ஈஷா மையம் அமைந்துள்ள தொண்டாமுத்தூர் எம்.எல்.ஏ.வுமான வேலுமணி வந்தார் எனச்செய்திகள் பரவியது.

இதற்கு ஈஷா தரப்பிலிருந்தோ ஜக்கி வாசுதேவிடமிருந்தோ எந்தப் பதிலும் வரவில்லை. கரோனா நோய் பற்றியும், அதில் ஈஷாவைச் சேர்ந்த வெளிநாட்டினர்கள் பாதிக்கப்பட்டிருப்பது பற்றியும் அங்கே மலைக்கிராம வாசிகள் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார்கள் என்பதைப் பற்றியும் செய்திகள் வந்த பிறகு, ஈஷா அதற்கு வெள்ளி மாலை வரை ரியாக்ட் செய்யவில்லை. ஜக்கியும் தனது அறையில் இருந்து இதுவரை வெளியே வரவில்லை.

மத்தியப் பிரதேசத்தில் சுகாதாரத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கரோனா நோயால் பாதிக்கப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் ஒரு ஆடம்பர பங்களாவில் வைத்து சிகிச்சை அளித்தார்கள். அதுபோல வி.ஐ.பி.க்களுக்கு கரோனா நோய் சிகிச்சை அளிக்கும் ஆடம்பர பங்களாவாக ஜக்கியின் ஆசிரமம் மாறிவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதனால்தான் அங்கு வேலைக்குச் சென்ற பழங்குடியின மக்களையும் வெளியே அனுப்பவில்லை. துப்புரவு பணிகளுக்கும் உள்ளூர் பணிகளுக்கும் யாரையும் அழைப்பதில்லை. வட மாநில தொழிலாளர்கள் மட்டும் பணிகளைச் செய்கிறார்கள். அவர்களும் ஆசிரமத்தைவிட்டு வெளியே வருவதில்லை. இப்படி மிகவும் ரகசியமாக இயங்கும் ஈஷா யோகா மையம் கோவை மாவட்ட இணை சுகாதார அலுவலரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணி தெரிவிக்கிறார்.

இந்த நிலையில் ஒரு அமரர் ஊர்தியும், அமைச்சரும், ஆம்புலன்சும் ஈஷா யோகா மையத்திற்கு வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளில் நடந்தது என்ன? என்பதை அரசும், ஈஷா யோகா மையமும் தெளிவுப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைக்கும் அந்தப் பகுதி மலைவாழ்மக்கள், தமிழ்நாடு கரோனா தொற்றில் மூன்றாம் நிலையை அடையக்கூடிய சூழலில் உள்ளது என முதல்வரே தெரிவிக்கும் நிலையில், கோவை ஈஷா மையம்- வேளச்சேரி ஃபீனிக்ஸ் மால்- வழிபாட்டுக்காக கூட்டம் கூடிய மசூதிகள் என பாரபட்சமின்றி அனைத்து இடங்களுக்கு வந்து சென்றவர்களுக்கும்- தொடர்ந்து அங்கு இருப்பவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொண்டு, தொற்று நோய் கூடமாக மாறிவிடாதபடி பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

admk coronavirus eps Isha jakki vasudev minister
இதையும் படியுங்கள்
Subscribe