Advertisment

இடைத்தேர்தல் முடியட்டும் நான் யாருன்னு காட்டுறேன்...15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க...அதிர்ச்சியில் எடப்பாடி!

தமிழக ஆவின் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் மணிவண்ணன், 360 கோடி ரூபாய் செலவில் 2019-2023 ஆண்டுக்கான பால் டேங்கர் லாரிகளை (303 வண்டிகள்) வாடகைக்கு எடுக்கும் டெண்டரை கடந்த 30-8-2019-ல் அறிவித்திருந்தார். இந்த மாதம் அக்டோபர் 10-ந் தேதி மதியம் 2 மணிவரை பூர்த்தி செய்யப்பட்ட டெண்டர் விண்ணப்பங்களை அதற்குரிய பெட்டியில் போடலாம் எனவும் மதியம் 2:30-க்கு டெண்டர் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நாளில் நடந்த ஏக களேபரங்களுக்கு மத்தியில் டெண்டர் பாக்ஸ் திறக்கப்பட்டாலும் எவ்வித முடிவும் எடுக்காமல் டெண்டரை ஒத்தி வைத்திருக்கிறார் ஆவின் நிர்வாக இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ். இதனால், அதிருப்தியும் கோபமுமடைந்த லாரி உரிமையாளர்கள், வேலை நிறுத்தத்தில் குதிக்கத் தயாராகியிருக்கிறார்கள்.

Advertisment

admk

கொங்கு மண்டல பால் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் மகாலெட்சுமி டிரான்ஸ்ஃபோர்ட் உரிமையாளருமான சுப்ரமணியன், "டேங்கர் லாரி காண்ட்ராக்ட் ஏற்கனவே ஒரு வருஷமா எக்ஸ்டென்ஷன்ல ஓடிக்கிட்டு இருக்கு. நிறைய போராட்டங்களுக்கு மத்தியில் டெண்டர் அறிவிக்கப்பட்டது. ஆனா, டெண்டர் போடாதீங்கன்னாங்க. அதையும் மீறி டெண்டர் போட்டோம். டெண்டர் பொட்டியை திறந்தாங்க. ஆனா, முடிவெடுக்காமல் டெண்டரை ஒத்தி வெச்சிட்டாங்க. முறைப்படி டெண்டர் நடத்தி முடிவெடுக்கலைன்னா 16-ஆம் தேதியிலிருந்து ஸ்டிரைக் நடத்துவோம்''‘என்கிறார்.

Advertisment

admk

சென்னையைச் சேர்ந்த தனலெட்சுமி டிரான்ஸ்ஃபோர்ட் உரிமையாளர் நித்தியானந்தம், இப்ப மூணாவது முறையா டெண்டர் பிராசஸை ஒத்திவெச்சிருக்காங்க. ஆவின்ல ஏகப்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் நடந்துக்கிட்டிருக்கு. அதனாலதான் ஸ்டிரைக்கில் குதிக்க திட்டமிட்டுள்ளோம்' என்கிறார் அழுத்தமாக. பாலவிக்னேஷ் டிரான்ஸ்ஃபோர்ட் உரிமையாளர் பாலாஜி, "டெக்னிக்கல் பிட் ஓப்பன் பண்ணியாச்சு. ப்ரைஸ் பிட் ஓப்பன் பண்ணாமலே டெண்டரை ஒத்திவெச்சிட்டாங்க. காண்ட்ராக்டர்களெல்லாம் கலந்து பேசி ஒரு முடிவை எடுப்போம்''‘என்கிறார்.

admk

ஆவின் ஊழல் வழக்குகளை கவனிக்கும் தி.மு.க. வழக்கறிஞர்களிடம் பேசியபோது, "தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போதே டெண்டரை ஆவின் நிர்வாகம் அறிவித்திருந்ததால் அதனை எதிர்த்து தீபிகா டிரான்ஸ்போர்ட் நிறுவனம் போட்ட வழக்கை விசாரித்த நீதியரசர் ஜெயச்சந்திரன், டெண்டரை முறைப்படி நடத்த உத்தரவிட்டிருந்தார். அப்புறம் டிவிஷன் பெஞ்ச்சில், எதிர்த்து வழக்கு போடப்பட்டது. "எல்லோரும் கலந்துகொள்கிற வகையில் விதிகளை மாற்றி காலதாமதமின்றி டெண்டரை நடத்தி முடிக்க வேண்டும்' என டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது. அதன்படி அறிவிக்கப்பட்டதுதான் தற்போதைய டெண்டர். ஆனாலும் டெண்டர் ஓப்பன் பண்ணவில்லை. இதில் பல கூத்துகள் நடந்தன. அதாவது, அம்பத்தூர் ஆவின் ஜே.எம்.டி. அலுவலகத்தில்தான் டெண்டர் பாக்ஸ்கள் வைக்கப்பட்டிருந்தன. டெண்டர் போடுவதற்காக தமிழகம் முழுவதுமிருந்து காண்ட்ராக்டர்கள் அம்பத்தூர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். அப்போது, "டெண்டரில் யாரும் கலந்துகொள்ள வேண்டாம்னு முதல்வரின் செக்ரட்டரி விஜயகுமார் விருப்பப்படுகிறார்' என காண்ட்ராக்டர்களிடம் சொல்லியிருக்கிறார் ஆவின் நிர்வாக உயரதிகாரி. இதனால் டெண்டர் போடாமல் தவித்தபடி இருந்தனர் காண்ட்ராக்டர்கள்.

admk

மதியம் 1:45 மணிக்கு தீபிகா டிரான்ஸ்போர்ட் மற்றும் சௌத் இண்டியன் டிரான்ஸ் போர்ட் உரிமையாளர்கள் வந்து, நீதிமன்ற உத்தரவைக் குறிப்பிட்டு, "நாங்கள் டெண்டர் போடுவோம்' எனச் சொல்லிவிட்டு, டெண்டர் பாக்ஸில் தங்களது விண்ணப்பங்களைப் போட... அதனைத் தொடர்ந்து, எல்லா காண்ட்ராக்டர்களும் போட்டனர். ஆனாலும், மேலிட உத்தரவு என்று சொல்லி, டெண்டர் ஒத்திவைக்கப்படுவதாக ஜே.எம்.டி. மணிவண்ணன் நோட்டீஸ் இஷ்யூ பண்ணினார். காண்ட்ராக்டர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். அதன்பிறகே, மதியம் 3:45-க்கு டெண்டரை அதிகாரிகள் திறந்தனர். டெக்னிக்கல் பிட்டில் 303 லாரிகளைத் தேர்வு செய்தவர்கள், விலைப் புள்ளியை திறக்காமல் டெண் டரை ஒத்திவைத்துவிட்டனர். எல்லாமே நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிரானது''‘என சுட்டிக் காட்டுகிறார்கள்.

இது குறித்து பால்வளத் துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது,‘டெண்டரின் கடைசி நாளான கடந்த 10-ந் தேதி காலையில் ஆவின் ஜே.எம்.டி. மணிவண்ணன், ஆவின் டி.ஜி.எம். ருத்ரகுமார் இருவரையும் அழைத்துக்கொண்டு முதல்வர் எடப்பாடியின் வீட்டுக்குப் பறந்தார் ஆவின் எம்.டி.காமராஜ் ஐ.ஏ.எஸ். அங்கு எடப்பாடியின் செகரட்டரிகளில் ஒருவரும் பால்வளத்துறையை கவனிப்பவருமான விஜயகுமார் ஐ.ஏ.எஸ்.ஸுடன் விவாதித்தார் காமராஜ். அப்போது, "இந்த டெண்டரில் காண்ட்ராக்டர்கள் யாரும் கலந்துகொள்ள அனுமதிக்க வேண்டாம்' என விஜயகுமாரும் காமராஜும் சேர்ந்து முடிவெடுத்தனர். காரணம், ஆவின் பால் டேங்கர் லாரி காண்ட்ராக்ட்டை மொத்தமாக கிருஸ்டி ஃபுட்ஸ் நிறுவனத்துக்கு தாரை வார்க்க பால்வளத்துறை செக்ரட்டரி கோபாலும், எடப்பாடியின் செக்ரட்டரி விஜயகுமாரும் முடிவு செய்திருப்பதை காமராஜ் மூலம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டது தான்.

எடப்பாடி அரசின் முட்டை மற்றும் பருப்பு கொள்முதல் காண்ட்ராக்டுகளை ஏற்கனவே கிருஸ்டி ஃபுட்ஸ் நிறுவனம் மொத்தமாக கையகப்படுத்தியிருக்கிறது. அதேபோல இதிலும் பேரம் பேசப்பட்டுள்ளது. கிருஸ்டி ஃபுட்ஸ்சுக்கு தாரைவார்க்கும் விவகாரத்தால் துறையின் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கும் உயரதிகாரிகளுக்குமிடையே மோதல்கள் பலமாக வெடித்துக் கொண்டிருக்கிறது'' என விவகாரத்தின் பின்னணிகளை விவரிக்கின்றனர்.

அமைச்சருக்கு நெருக்கமானவர்களிடம் பேசியபோது, "டெண்டர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து 63 காண்ட்ராக்டர்களும் அமைச்சரை சந்தித்து முறையிட்டனர். அப்போது, "பால்வளத் துறைக்கு நான் மந்திரி இல்லை. சூப்பர் சி.எம்.மாக செயல்படும் எடப்பாடியின் செகரட்டரி விஜய குமார்தான் மந்திரி. அந்த ஆளிடம் போய் முறையிடுங்க. துறையின் செகரட்டரி (கோபால்), முதல்வரின் செக்ரட்டரி (விஜயகுமார்), ஆவின் எம்.டி. (காமராஜ்) ஆகிய மூணுபேரும் ஆவினை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என ஆவேசப்பட்டார்.

அத்துடன், "இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடியட்டும், நான் யாருன்னு காட்டுறேன்' என்றபடி, "டெண்டரை ஏன் நிறுத்தி வெச்சிருக்கீங்க'ன்னு அதிகாரிகளிடம் கேட்க, "உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு டெண்டரை முடிவு செய்துகொள்ளலாம்'னு முதல்வர் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள். டென்சனான ராஜேந்திர பாலாஜி, "எல்லா டிபார்ட்மெண்டிலும் ஊழலோ ஊழல் நடக்குது. அங்கெல்லாம் எந்த டெண்டரையும் நிறுத்தலை. என் டிபார்ட்மெண்ட்டில் உள்ள ஆவின் பாலுங்கிறது எசென்சியல் டெண்டர். அதை எப்படி தள்ளிப்போடலாம்? கோர்ட்டு உத்தரவுபடி நடக்கிற டெண்டரை நிறுத்துவதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?' என எகிறியிருக்கிறார்.

பிறகு, காண்ட்ராக்டர்களைப் பார்த்து, "விஜயகுமார் தூண்டுதலில் என்னிடம் பேசிய எடப்பாடியின் உதவியாளர் கார்த்தி, முதல்வரின் யோசனைப்படிதான் டெண்டர் தள்ளிப் போடப்பட்டிருக்கிறதுன்னு சொல்கிறார். உடனே நான், "எடப்பாடி அப்படி சொல்லியிருக்க மாட்டார். அப்படி சொல்லியிருந்தா அவரிடம் போய் சொல்லு. என் பின்னால 15 எம்.எல்.ஏ.க்கள் இருக்காங்க. தி.மு.க.வோ மு.க.ஸ்டாலினோ எனக்கு எதிரியில்லை. நான் நினைச்சேன்னா தமிழகத்தை இரண்டாக உடைச்சிடுவேன்'னு சொல்லு, என கார்த்தியிடம் எகிறிவிட்டேன்' என கோபம் காட்டினார் ராஜேந்திரபாலாஜி. "ஸ்டிரைக் நடந்து, பால் விநியோகம் பாதிக்கப்பட்டால், அதிகாரிகள்தான் பொறுப்பு' என தற்போது உத்தரவிட்டிருக்கிறார்'' என்கின்றனர். சென்னையில் பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் லாரி டெண்டரும் அதிகாரி களின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்களும் போராட்ட மனநிலையில் உள்ளனர். ஊழல்களும் டெண்டர் முறைகேடுகளும் ஆவினில் உச்சத்தில் இருக்கும் நிலையில், அதிகாரிகளின் ஆசைகளால் அமைச்சருக்கும் முதல்வருக்கும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

issues eps Tender Request minister admk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe