sharmila

Advertisment

ஒரு கிராம் தங்கம் வாங்குவது என்பது கனவிலாவது நிறைவேறுமா என்பதுதான் நடுத்தர மக்களின் தற்போதைய நிலவரம். நாளுக்கு நாள் விலையேறிக் கொண்டே போகும் தங்கத்தில் முதலீடு செய்வதுதான், தாறுமாறாக பண வருவாய் உள்ளவர்களின் முதலீட்டுத் தொழில்நுட்பம். இந்த முதலீட்டை கவனித்து கொள்வதற்காகவே அனைத்தும் அறிந்த புரோக்கர்கள் இருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து தரமான தங்கத்தை வாங்கி தருவார்கள். தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள், கரோனாவிலும் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள்... இவர்களின் அபரிமிதமான வருவாயில் பெரும்பகுதி அண்மைக்காலமாக தங்கத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இதனை முன்கூட்டியே உணர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே தங்க முதலீட்டில் கவனம் செலுத்தியவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்கிறார்கள் சர்மிளா தரப்பினர்.

இந்த சர்மிளா பற்றித்தான் கடந்த நக்கீரன் இதழில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டிருந்தோம். அவரது வில்லங்க வீடியோ அமைச்சர் விஜயபாஸ்கர் தரப்புக்கு நெருக்கடி தந்திருப்பதை அவரது நண்பரான டாக்டர் ஸ்ரீதர் வாயிலாகபதிவு செய்திருந்தோம். அது குறித்து மேலும் பல விவரங்கள் கிடைத்துள்ளன.

"குட்கா முதல் கரோனா வரை எதிலும் சிக்காமல் எல்லாவற்றிலும் வருமானம் தேற்றியவர் அமைச்சர் விஜயபாஸ்கர். அதில் 240 கோடி ரூபாய்க்கு தங்கம் வாங்கித்தரும் வேலையை தனக்கு நெருக்கமாக அறிமுகமான சர்மிளாவிடம் கொடுத்திருந்தார் அமைச்சர். 100 ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை 93 ரூபாய்க்கு வாங்கக்கூடியவர் சர்மிளா. மீதி 7 ரூபாய் அவருக்கு கமிஷன். 240 கோடி ரூபாய்க்கு கமிஷன் கணக்கு போடப்பட்டுதான் இந்த டீலிங் நடந்தது. அதன்படி தர வேண்டிய கமிஷனில், 17 கோடி ரூபாய் தரப்படவில்லை. இது பிரச்சனையான நிலையில்தான், அமைச்சரின் நட்பு வட்டத்திலும் சர்மிளாவுடன் அறிமுகத்திலும் உள்ள டாக்டர் நண்பர்களான செல்வராஜ், சித்தரஞ்சன் ஆகியோர் சமாதானம் பேசி, 3 கோடி ரூபாய் வாங்கி கொடுத்திருக்கிறார்கள். மீதம் 14 கோடி ரூபாயைக் கேட்டுத்தான் சர்மிளா தொடர்ந்து நெருக்கடி கொடுத்திருக்கிறார். அது வராத நிலையில் தான், அவரிடமிருந்து வீடியோ வெளிவந்தது'' என்றவர்கள் அடுத்து சொன்ன தகவல்கள் பகீர் ரகம்.

Advertisment

sharmila

"கேரளாவைச் சேர்ந்தவரான சர்மிளா, தனது மாநிலத்தை சேர்ந்த நகைக்கடைகளான ஜாய் ஆலுகாஸ், கல்யாண் ஜூவல்லர்ஸ் ஆகியவற்றிலிருந்து தங்கம் வாங்கி தருவது வழக்கம். அமைச்சருக்கான தங்கம் முதலீட்டில் இரண்டு முறை, கேரள அரசியலை நடுங்க வைக்கும் ஸ்வப்னாவிடமிருந்து நகை வாங்கப்பட்டுள்ளதாக விஷயம் லீக் ஆகி புதிய அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஸ்வப்னாவின் தொடர்புகள் கேரள முதல்வர் அலுவலகம் வரை வலுவாக உள்ளதாக என்.ஐ.ஏ. தரப்பு தெரிவித்ததுடன், தமிழ் நாட்டில் ஸ்வப்னாவுக்கு உள்ள தொடர்புகளையும் விசாரித்து வருவதாகத் தெரிவித்தது. அந்த ஸ்வப்னாவுக்கும் சர்மிளாவுக்கும் அறிமுகம் இருக்கிறது என்பதும் மத்திய உளவுத்துறை மூலமாக என்.ஐ.ஏ. கவனத்திற்கும் சென்றுள்ளது. என்.ஐ.ஏ.வின் விசாரணை வளையம் விரிவடையும்போது, ஸ்வப்னாவிலிருந்து சர்மிளா, சர்மிளாவிலிருந்து அமைச்சர் என அதன் கரங்கள் நீளும். இதனை அமைச்சரின் கவனத்துக்கு மட்டுமின்றி, முதல்வரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருக்கிறார் அ.தி.மு.க.வின் தேர்தல் ஆலோசகராக உள்ள சுனில்.

எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. அதே நேரத்தில் தன் ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் என்.ஐ.ஏ. விசாரணை என்ற பெயரில் ஏற்படக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். விஜயபாஸ்கரின் துறை ரீதியான செயல்பாடுகளையும், அரசியல் களத்தில் முதல்வர் பதவிக்கு சாதிரீதியாக காய் நகர்த்துவதையும் எடப்பாடி ரசிக்கவில்லை. சட்டச் சிக்கல்கள் வந்தால் விஜய பாஸ்கரே எதிர்கொள்ளட்டும் என சொல்லிவிட்டாராம்.

Advertisment

தங்கம் முதலீடு விவகாரத்தில் ஸ்வப்னாவின் தொடர்புகள் இருப்பதையும், என்.ஐ.ஏ. விசாரிக்கும் நெருக்கடி ஏற்படும் என்பதையும் அறிந்த அமைச்சர் விஜயபாஸ்கர் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார். தனது டெல்லி தொடர்புகள் மூலமாக இதுகுறித்து விசாரித்து, தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வேலைகளில் மும்முரமாகியிருக்கிறார்.

சர்மிளாவுக்கு கமிஷன் வரவில்லை என்பதும், அதனால் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதும் முதற்கட்ட வீடியோ மூலம் தெரிந்துகொண்ட சில பார்ட்டிகள் அவரிடம் இது குறித்து பேசியதுடன், அவருக்காகப் பேசுவதாக அமைச்சர் தரப்பில் பேரம் நடத்தி, லாபம் பார்த்துள்ளன. இதில் நிறைய பணம் கைமாறியிருக்கிறது. ஆனால் சர்மிளாவுக்கு கமிஷன் போய்ச் சேரவில்லை. இதனால், அமைச்சர் தரப்பை தொடர்பு கொண்டவர்களுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என ஒரு வீடியோ வெளியிட்டு, தனக்கான கமிஷன் உள்ளிட்ட உரிமைகளை வெளிப்படுத்த சர்மிளா தயாராகி வருகிறாராம்.

நாம் இது பற்றி அமைச்சரின் நண்பர்கள் வட்டாரத்தில் மேலும் விசாரித்தபோது, "அமைச்சருக்கும் சர்மிளாவுக்கும் நல்ல நட்பு உண்டு. அதனை இந்தப் படங்களைப் பார்த்தாலே உங்களுக்கு தெரியும்'' என்று சில ஃபோட்டோக்களைக் காட்டினார்கள். அந்தபடங்கள் 2017 புத்தாண்டுகொண்டாட்டத்தின்போது, ஊட்டி ஃபேர்ன் ஹில்ஸ் ராயல் பேலஸ் (Fern Hills Royal Palace) ஹோட்டலில் எடுக்கப்பட்டது. அதில் ஒரு படத்தில் நெருக்கமும் உரிமையும் நன்றாகதெரிந்தது.

sharmila

தன் நண்பர்கள் வட்டாரத்துடன் சர்மிளாவிடம் கலகலப்பாக அமைச்சர் இருக்கும் படங்களும் இவற்றில் உள்ளன. அமைச்சரின் குடும்பத்தாரையும் சர்மிளா அறிந்திருக்கிறார். அதனால், வாட்ஸ்ஆப் மூலமாக அவர்களிடமும் விவரங்களைத் தெரிவித்து, கமிஷனை செட்டில் பண்ணும்படி கேட்டு, அவகாசமும் கொடுத்திருக்கிறார் என்கிற விவரத்தை இருவரையும் அறிந்தவர்கள் தெரிவித்தனர்.

கடந்த இதழ் நக்கீரனில் அட்டைப்படக் கட்டுரை வெளியானதுமே கோட்டை வட்டாரம் கிடுகிடுத்தது. முதல்வருக்கு உளவுத்துறையினர் நோட் போட்டு அனுப்பியுள்ளனர். தற்போது, அமைச்சரின் தங்க முதலீடு தொடர்பான சர்மிளா-ஸ்வப்னா லிங்க்கை தீவிரமாக தோண்டத் தொடங்கியுள்ளது மத்திய உளவுத்துறையும் தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ.வும். அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த பல ஃபைல்களை ஏற்கனவே டெல்லி தூசு தட்டி வைத்துள்ளது.

-கீரன்