Skip to main content

ஒரு 'ட்ரம்' விலை என்ன தெரியுமா? எல்லாப் பொருளிலும் ஊழல்... கரோனாவை வைத்து அதிர வைக்கும் ஊழல் ரிப்போர்ட்!

Published on 27/06/2020 | Edited on 27/06/2020

 

admk

 

உலகத்தையே முடக்கிப் போட்டிருக்கிற கரோனா, தமிழகத்தில் ஊராட்சி நிர்வாகங்களைச் செழிப்பாக வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்கு கரோனாவைக் காட்டி கோடி கோடியாக கொள்ளை அடிக்கிறார்கள். இப்படிச் சொல்வது உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என்பது தான் வினோதமானது. அப்படி என்ன கொள்ளை நடக்கிறது கொஞ்சம் சொல்லுங்களேன் என்றோம் புதிய உள்ளாட்சி பிரதிநிதிகளிடம்.

 

கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்குக் கொடுக்கிற ஒரு மாஸ்க் விலை ரூ.3 தான். ஆனால் அரசாங்கம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் தலா ஆயிரம், 2 ஆயிரம் என்று அனுப்பிவைத்தது. அதன்பிறகு அனுப்பிய பில்லில் ஒரு மாஸ்க் விலை ரூ.15. அதேபோல ரூ.550 மதிப்புள்ள பிளிச்சிங் பவுடர் மூட்டை விலை ரூ.2,550, கிருமிநாசினி ஒரு லிட்டர் விலை ரூ. 500தான். ஆனால் அரசாங்கம் வாங்கியனுப்பியது ரூ. 2,500.

 

கிருமிநாசினி தெளிக்க ஊராட்சிக்கு ஒன்று அல்லது இரண்டு பவர் ஸ்பிரேயர் கொடுத்தாங்க. அதன் விலை ரூ. 8 ஆயிரம்தான். ஆனால் அரசாங்கம் அனுப்பிய பில்லில் ஒரு ஸ்பிரேயர் விலை ரூ. 22,500. இப்படி ஒவ்வொரு பொருளிலும் கொள்ளைமேல் கொள்ளையடித்திருக்கிறார்கள்.

 

bill

 

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியம் வடகாடு ஊராட்சி வழியாகச் சென்ற போது 140 லிட்டர் ட்ரம்கள் பல இடங்களில் வைத்திருப்பதைப் பார்த்து அந்த ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டனிடம் இந்த ட்ரம்கள் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றோம். ஒரு செட் ரூ. 1,500-க்கு செய்தேன் என்றார். அப்படின்னா உங்க ஊராட்சிக்கு ஒன்றியத்திலிருந்து கொடுத்த ட்ரம் விலை என்ன தெரியுமா? என்றோம். அதற்கான பில் இன்னும் வரல என்றவரிடம் அதன் விலை ரூ. 19,376 என்றதும் அதிர்ந்துபோனார்.

 

ஆலங்குடி எம்.எல்.ஏ. மெய்யநாதன், "இப்படித்தான் எல்லா பொருளிலும் கொள்ளை நடந்திருக்கிறது. அந்த பில்களை வாங்கிக்கொண்டிருக்கிறோம். அனைத்து பில்களையும் வாங்கிச் சேர்த்து தி.மு.க. வழங்கறிஞர் பிரிவு வெங்கடேசன் மூலம் வழக்குத் தொடுக்க தயாராகி வருகிறோம்'' என்றார்.

 

அமைச்சர் விஜயபாஸ்கரின் அன்னவாசல் ஒன்றியத்திலுள்ள 34 ஊராட்சி களுக்கும் 34 தெர்மாமீட்டர் வாங்கியது ரூ. 2,68,922. அதாவது ஒரு தெர்மாமீட்டர் விலை ரூ. 7,909. ஆனால் அதன் உண்மை விலை ரூ. 2,500 முதல் 3 ஆயிரம்தான்.

 

இந்த நிலையில்தான் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும் நடந்த கவுன்சில் கூட்டத்திலும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளனர் கவுன்சிலர்கள். கறம்பக்குடி ஒன்றிய சேர்மன் உள்ளிட்ட பல சேர்மன்கள் எங்களிடம் எதையும் கேட்காமல் அதிகாரிகளே தன்னிச்சையாகச் செயல்பட்டு விலை அதிகமாக பொருள் வாங்கியிருக்கிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி, ஆவுடையார் கோயிலில் கேள்விமேல் கேள்வி எழுப்பிய கவுன்சிலர்களுக்கு அரசு வழிகாட்டுதலின்படியே வாங்கப்பட்டதாக பதில் சொன்னார்கள். பேராவூரணி ஒன்றியத்தில் அ.தி.மு.க ஒ.செ.வும், ஒன்றியக் கவுன்சிலருமான துரைமாணிக்கம் இதுபற்றி கேள்வியெழுப்ப, அரசு சொன்ன நிறுவனங்களில்தான் விலைகுறைவாக கொள்முதல் செய்திருக்கிறோம் என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார்.

 

admk

 

ஆனால் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சில ஊராட்சிமன்றத் தலைவர்கள் மட்டும் விலை அதிகமாக உள்ளது. சரியான விலைக்கு பில் அனுப்பினால் மட்டுமே செக் கொடுப்போம் என்று உறுதியாக இருக்கிறார்கள். இத்தனை கொள்ளைகளுக்கும் பொருட்கள் வாங்கியதாக பில்களில் காட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் அத்தனையும் லெட்டர் பேட் நிறுவனங்களாகவே உள்ளன.

 

தி.மு.க. வழக்குத் தொடர்ந்து மக்கள் பணத்தை மீட்க முயற்சிப்பது ஒருபக்கம் என்றால் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தானாக முன்வந்து விளக்கம் கேட்கும் நீதிமன்றம் கரோனா கொள்ளை குறித்தும் விளக்கம் கேட்டு மக்களுக்கு சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

 

http://onelink.to/nknapp

 

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரியிடம் விளக்கம் கேட்ட போது...

 

"டி.ஆர்.டி.யே, மற்றும் அரசு வழிகாட்டுதல் படி ஒவ்வொரு ஒன்றியத்திலும் தங்களின் நிதி ஆதாரத்தைக் கணக்கில் கொண்டு பொருள் வாங்கிக்கொள்ள சொல்லியிருக்கிறோம். அதில் அரசு வழிகாட்டி மதிப்புகளும் உள்ளது. பவர் ஸ்பிரே தரத்திற்கு ஏற்ப விலை கொடுக்கப்பட்டிருக்கும். ட்ரம் பற்றிய தகவல் புதிதாக உள்ளது அது பற்றி விசாரிக்கிறேன்'' என்றார்.

 

 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.