Advertisment

அதிமுகவிற்கு சொல்ல முடியாத பயத்தை ஏற்படுத்திய தேர்தல்... தேர்தலை நிறுத்த சதி... கோபத்தில் திமுகவினர்! 

மூன்று ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டிருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உச்சநீதிமன்றத்தின் கண்டனங்களால் தேர்தலை நடத்த முன் வந்திருக்கிறது எடப்பாடி பழனிசாமி அரசு. அதன்படி, ஊரக ஊராட்சிகளுக்கு மட்டும் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவித்திருக்கிறார் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் அறிவிக்கப்படவில்லை. ஊராட்சிகளுக்கு இரண்டு கட்டமாக நடத்தப்படும் வாக்குப் பதிவின் எண்ணிக்கை ஜனவரி 2 ந்தேதி நடக்கிறது. (பல கட்ட தேர்தலில் உள்ள ஆளுங்கட்சியினர் வியூகத்தை ஏற்கனவே எழுதியுள்ளது நக்கீரன்) எடப்பாடி ஆசியுடன் வெளியிடப்பட்டிருக்கும் தேர்தல் தேதி அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கும்... அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளுக்கும் அதிர்ச்சியை தந்திருக்கிறது. ஆனால், அவர்களால் வலிமையாக கண்டிக்க முடியவில்லை.

Advertisment

admk

உள்ளாட்சி அமைப்புகளின் ஊழல்களுக்கு எதிராக போராடி வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செயலாளர் செந்தில் ஆறுமுகம், "தமிழகத்தில் நகர்ப்புறம், கிராமப்புறம் என இரண்டு வகையான அமைப்புகள் இருக்கின்றன. இதில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சி என 5 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.

முதல்முறையாக, உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து தேர்தலை நடத்துகிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அதுவும் ஊராட்சிகளுக்கு மட்டும் நடத்தும் தேர்தலை கூட இரண்டு கட்டங்களாக நடத்துவது தான் பெரிய விந்தை. உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதில் எடப்பாடி அரசுக்கு சொல்ல முடியாத பயம். குறிப்பாக, இடைத்தேர்தலில் அதிகார பலம் மற்றும் பண பலத்தை வைத்தே ஜெயித்தது போல உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் அதிகார வலிமையையும் பண வலிமையையும் முழுமையாக செயல்படுத்த முடியாது. முழுமையாக செயல்படுத்த முடியாமல் போனால் வெற்றி சாத்தியமில்லை என கூட்டிக்கழித்து கணக்குப் போட்டுள்ளார்.

"இப்போதுகூட, தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்' என உச்சநீதிமன்றத்துக்கு செய்தி செல்லவே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க.வுக்கு விருப்பமில்லை. தி.மு.க. போடும் வழக்கின் மூலம் தேர்தலுக்கு தடை கிடைக்க வேண்டும் என்பதற்கேற்ப நிர்வாகக் குளறுபடிகளையும் ஏற்படுத்தி வைக்கிறார்கள்.

elections

Advertisment

வார்டு வரையறைகள், இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சனைகளை விதிகளின்படி முறையாக செய்யவில்லை என்றுதான் கோர்ட் கண்டித்தது. "அதனை சரி செய்கிறோம்' எனச் சொல்லியே கடந்த 3 ஆண்டுகளாக அவகாசம் வாங்கியபடி தேர்தலை முடக்கி வைத்திருந்தனர். அப்படியிருக்கும் போது, புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்களிலும் முறையாக வார்டு வரையறை செய்திருக்க வேண்டாமா? அதை செய்யவில்லை. வேண்டுமென்றேதான் அந்த குளறுபடிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் நடத்தப்படும் தேர்தலை எதிர்த்து கோர்ட்டில் முறையிட்டால் நிச்சயம் தேர்தல் தள்ளிப்போகும். இதனைத்தான் எடப்பாடி அரசு எதிர்பார்க்கிறது'' என்கிறார் மிக ஆவேசமாக.

இரண்டு கட்டமாக நடத்தப்படும் தேர்தல் மூலம் 1,18,974 பதவிகளுக்கு நேரடி தேர்தல் மூலம் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள். இதில், 31 மாவட்டங்களில் அடங்கியுள்ள 655 மாவட்ட ஊராட்சி வார்டு llஉறுப்பினர்களுக்கும், 388 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 6471 ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கும், 99,324 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கும், 12,524 கிராம ஊராட்சி தலைவர்களுக்கும் தேர்தல் நடக்கவிருக்கிறது. இதன்படி முறையே ஒவ்வொரு வாக்காளரும் 4 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். அதற்கேற்ப 4 வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படுகிறது. மேலும், ஊராட்சி தலைவரையும் ஊராட்சி வார்டு உறுப்பினரையும் தேர்வு செய்ய கட்சி அடிப்படையில் தேர்தல் நடத்தப்படாது. எல்லோரும் சுயேட்சைகளாகவே கருதப்படுவார்கள். அதேசமயம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரையும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் கட்சி அடிப்படையில் நடக்கும்.

இது ஒருபுறமிருக்க, நடத்தை விதிகளிலும் திருத்தம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, கிராம ஊராட்சிகளுக்கு தேர்தல் நடக்கும் போது அந்த பகுதிகளை தவிர்த்த நகராட்சிகளுக்கு நடத்தை விதிகள் பொருந்தாது. நகராட்சிகளுக்கு தேர்தல் நடக்கும்போது மாநகராட்சி பகுதிகளுக்கு நடத்தை விதிகள் பொருந்தாது. எந்தெந்த அமைப்புகளுக்கு தேர்தல் நடக்கிறதோ அந்த அமைப்புகள் சார்ந்த பகுதிகள் மட்டுமே நடத்தை விதிகளை எதிர்கொள்ளும் வகையில் திருத்தம் செய்திருக்கிறது தேர்தல் ஆணையம். தேர்தல் நடக்கிற காலகட்டங்களில் ஊராட்சிகளை தவிர்த்து மாவட்ட அளவில் நலத்திட்ட உதவிகளை அமல்படுத்த வேண்டியே இந்த திருத்தம் செய்திருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

உள்ளாட்சி அமைப்புகளை உடைத்து கிராம ஊராட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்துவதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, "உள்ளாட்சித் தேர்தல் ஆளும்கட்சிக்கு சாதகமாக இல்லை என உளவுத்துறையும் மாநில தேர்தல் ஆணையமும் ஏற்கனவே தங்களது அறிக்கையை எடப்பாடிக்கு கொடுத்துள்ளன. அது சட்டமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என பயந்தே தேர்தலை நடத்துவதில் எடப்பாடி உள்ளிட்ட அமைச்சர்கள் ஆர்வம் காட்டவில்லை. உச்சநீதிமன்றம் கொடுத்து வரும் நெருக்கடியால் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இதுகுறித்து மூத்த அமைச்சர்கள் சிலரிடம் மட்டும் விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்பை மூன்றாக உடைத்து தனித்தனியாக தேர்தலை நடத்துவோம். அப்படி நடத்துவதன் மூலம் தி.மு.க.வின் அரசியலை எளிதாக எதிர்கொள்ள முடியும். அதிகாரத்தையும் பலத்தையும் பயன் படுத்துவது நமக்கு எளிதாக இருக்கும். அடிமட்டம் வரை நமது ஃபார்முலா போய்ச்சேர்ந்தால்தான் நாம் எதிர்பார்க்கும் ரிசல்ட் கிடைக்கும். அதனால், முதலில் ஊராட்சிகளுக்கும் ஒன்றியங்களுக்கும் தேர்தலை நடத்தலாம். நம்முடைய அனைத்து விளையாட்டையும் இதில் காட்டினால் ரிசல்ட் நமக்கு சாதகமாக அமையும்.

அதில் பெரிய வெற்றி நமக்கு கிடைக்கும் பட்சத்தில் நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான தேர்தலை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்ததும் நடத்து வோம். அதிலும் நமக்கு வெற்றி கிடைத்தால் மாநகராட்சிக்கான தேர்தலை நடத்தலாம். ஒரு வேளை கிராம ஊராட்சிகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது போனால், சில காரணங்களைச் சொல்லி அடுத்த கட்ட தேர்தலை முடிந்த அளவுக்கு தள்ளிப்போடலாம்.

elections

அதேசமயம், ஊராட்சிகளில் கிடைக்கும் மகத்தான வெற்றியை வைத்து அடுத்த கட்ட தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் பார்கைன் பவரை குறைக்க முடியும். அதுமட்டுமல்ல, நகராட்சிகள் பேரூராட்சிகளிலும் நமக்கான வெற்றி பிரமாண்டமாக இருந்தால் மேயருக்கான தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை உதறிவிட்டு தனித்து தேர்தலை சந்திக்க நமக்கு சந்தர்ப்பமும் அமையலாம். ஆக, உள்ளாட்சிகளை உடைத்து மூன்று பகுதியாக தேர்தல் நடத்துவதுதான் நம்முடைய திட்டத்துக்கு சாதகமாக அமையும்' என மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, தேர்தல் ஆணையர் பழனிச்சாமி யிடம் தனிப்பட்ட முறையில் எடப்பாடி ஆலோ சிக்க, "நல்ல யோசனைதான்' என அவரும் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே ஆட்சியாளர்களின் யோசனைகளை நடைமுறைப்படுத்தும் திட்டத்தில் இறங்கினார் பழனிச்சாமி'' என்கிறார்கள் மூத்த அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள்.

இந்த திட்டம் குறித்து தேர்தல் ஆணைய வட்டாரங்களில் விசாரித்தபோது, "தேர்தல் தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார் ஆணையர் இரா.பழனிச்சாமி. அப்போது, முதல்வர் எடப்பாடி விரும்பும் யோசனையை ஆணையர் விவாதித்தார். ஆனால், இந்த திட்டத்துக்கு ஆணையத்தின் அப்போதைய செயலாளர் எஸ்.பழனிச்சாமி ஒப்புக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார். அவரை நீக்கிவிட்டு அந்த பதவியில் விழுப்புரம் கலெக்டர் சுப்பிரமணியனை நியமித்தார் எடப்பாடி. அதன்பிறகே, தேர்தல் திட்டமும் தேதியும் ஒரு வடிவத்துக்கு வந்தது'' என்கிறார்கள்.

இதற்கிடையே, 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் 37 மாவட்டங்கள் வருகின்றன. ஆனால், தேர்தல் தேதியை அறிவித்த ஆணையர் பழனிச்சாமி, 31 மாவட்டங்களில் அடங்கிய ஊராட்சி களுக்கும் ஒன்றியங்களுக்கும் மட்டுமே தேர்தல் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். இதன் சூட்சுமம் குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "சென்னை மாவட்டத்தின் எல்லை பெருமாநகராட்சியாக மாற்றப்பட்டதால் அதில் ஊராட்சி கள் இல்லை. அந்த வகையில் சென்னையை நீக்கிவிட்டால் 36 மாவட்டங்கள் வருகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பழைய எண்ணிக்கையின் படிதான் தேர்தல் நடத்தப்படும் என பழனிச்சாமி தெரிவித்துவிட்டார். அதனால் புதிதாக உருவான 5 மாவட்டங்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை. கோர்ட்டில் வழக்கு தாக்கல் ஆகட்டும் என்பதற்காகவே திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்ட பிழை என்றுகூட எடுத்துக்கொள்ளலாம்'' என்கிறார்கள்.

இந்தச் சூழலில், வார்டு வரையறை குளறுபடிகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கின் விசாரணை 5-ந்தேதி வருகிறது. குளறுபடிகளுடன் நடத்தப்படும் இந்த தேர்தலுக்கு தடை வாங்கும் தீவிர முயற்சியில் இருக்கிறது தி.மு.க. தலைமை. வரும்ம்ம்... ஆனா வராது என்ற நிலைமையில் உள்ளது ஜனநாயகத் தின் ஆணிவேரான உள்ளாட்சித் தேர்தல்.

stalin eps politics pmk admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe