Advertisment

அ.தி.மு.க. - பா.ஜ.க. முறிவுக்கு காரணம் என்ன? 

A.D.M.K. - BJP What caused the breakdown?

Advertisment

பா.ஜ.க. தென்னிந்தியாவில் கால் ஊன்ற பல வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் நேரடியாகவும் கூட்டணியுடனும் ஆட்சியில் இருக்கும் அந்தக் கட்சியிடம், தென்னிந்தியாவின் ஐந்து மாநிலங்கள் மட்டும் சிக்கவேயில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் எப்படியாவது தனது இருப்பைக் காட்ட அக்கட்சி பல்வேறு வகையில் முயற்சி செய்து வருகிறது.

2021 ஜூலை 8ம் தேதி பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அந்தப் பதவியில் செயல்பட ஆரம்பித்த அவர், அரசியலில் பல தடாலடிகளை மேற்கொண்டார். அதுமட்டுமல்லாமல் பல சமயங்களில் ஊடகத்தினரிடம் கொந்தளிப்பது, அவர்களை அவதூறாக பேசுவது என அட்ராசிட்டியிலும் ஈடுபட்டுவருகிறார். இவரின் பல பேச்சுக்களுக்கு சமூகத்தில் கடும் கண்டனம் வலுத்திருக்கிறது. அந்த வகையில் கடந்த செப்.11ம் தேதி ஒரு ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முன்னாள் முதல்வர் அண்ணாவை பற்றி அவதூறாக பேசினார். முன்னமே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல்வாதி என இவர் பேசியதற்கு அதிமுக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்து, பிறகு தலைமைகளை அமைதியாக்கியது. இந்த முறை அண்ணாவை பற்றி அவர் அவதூறாக பேச, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு உள்ளிட்டோர் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதற்கு அண்ணாமலையும் ரியாக்ட் செய்துவந்தார்.

A.D.M.K. - BJP What caused the breakdown?

Advertisment

தமிழ்நாட்டில் பா.ஜ.க. - அ.தி.மு.க. வார்த்தைப் போர் முற்றியிருந்த நிலையில், செப். 14ம் தேதி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., தனியாகச் சென்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இந்தச் சந்திப்பில், சீட் பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதேபோல் அப்போதே, அண்ணாமலையை மாற்றினால் பா.ஜ.க.வுடன் அதிமுக கூட்டணி வைக்க உயர்மட்டக் குழுவுக்கு பிரச்சனை இருக்காது என்று சொன்னதாகவும், ஆனால் அதனை அமித்ஷா ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதன் பிறகு கடந்த 18ம் தேதி அதிமுக முன்னாள் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான ஜெயக்குமார் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.

A.D.M.K. - BJP What caused the breakdown?

ஜெயக்குமாரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பா.ஜ.க.வை, அ.தி.மு.க.வினர் விமர்சிக்கக் கூடாது என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இ.பி.எஸ். வாய்மொழி உத்தரவிட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்துவது போலவே, இந்த விவகாரம் அதோடு சற்று ஓய்ந்திருந்தது. அ.தி.மு.க. - பா.ஜ.க. போர் தனிஞ்சு இருக்கே என பேச்சு எழும்போது, செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு, பிரதமர் வேட்பாளர் மோடி, முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்றார். இதனை கேட்டதும் பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் வேட்பாளர் மோடி தான்; ஆனால், இ.பி.எஸ். முதல்வர் வேட்பாளர் என்பதெல்லாம் ஏற்கமுடியாது என்றார். இதனையடுத்து புகைந்து கொண்டிருந்தது மீண்டும் திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது.

இதை இப்படியே விட்டா சரியா வராது என அதிமுக மூத்த நிர்வாகிகள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி. முனுசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க டெல்லி சென்றனர். சென்னையில் இருந்து டெல்லி சென்றால் மீடியாக்கள் உடனே ஸ்மெல் செய்துவிடும் என கேரளா வழியாக டெல்லி சென்றதாக சொல்லப்படுகிறது.

A.D.M.K. - BJP What caused the breakdown?

இப்படி சுற்றி டெல்லி சென்ற அவர்களுக்கு அமித்ஷா நேரம் ஒதுக்காததால், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலைச் சந்தித்தனர். அதன்பிறகு பா.ஜ.க. தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவைச் சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகியது. அந்தச் சந்திப்பில், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையை மாற்ற வேண்டும் என அ.தி.மு.க. தரப்பிலிருந்து வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றினால் மட்டுமே கூட்டணியை தொடர்வது குறித்து முடிவு எடுக்கமுடியும் என பேசியதாகவும் சொல்லப்படுகிறது. அண்ணாமலையை மாற்றச் சொல்லும் முடிவில் இ.பி.எஸ். உறுதியாக உள்ளதாகவும் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஜெ.பி.நட்டாவிடம் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. அதேசமயம், அ.தி.மு.க. வைத்த கருத்தை ஜெ.பி.நட்டா ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் சொல்லப்படுகிறது.

A.D.M.K. - BJP What caused the breakdown?

இந்நிலையில், 25ம் தேதி பொதுச்செயலாளர் தலைமையில், அ.தி.மு.க. மா.செ. கூட்டம் நடக்கும் என 24ம் தேதி காலை பொழுதில் அறிவிப்பு வெளியானது. மா.செ. கூட்டத்தில என்ன நடக்குமென விவாதம் எழுந்து ஓட, 24ம் தேதி பகல் வேளையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நிலைப்பாடு என்பது கடந்த 18ம் தேதி சொன்னதுதான். கூட்டணி கிடையாது என்று டெம்பை ஏற்றினார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இப்படி சொல்லி இருக்கும் அதே நேரத்தில், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணியும் தங்கமணியும் பா.ஜ.க.வின் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவே சொல்லப்பட்டது. இதை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உதாரணமாக சொல்கிறார்கள். பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்ன தகவலை தலைப்பு செய்தியாக போட்டிருந்தது அ.தி.மு.க.வின் ஆதரவு நாளேடான நமது அம்மா. ஆனால் அப்படி தலைப்பு செய்தி போட்டதால் நமது அம்மாவின் நிர்வாக இயக்குநர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு பின்னால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இருப்பதாகவும் பேச்சுகள் எழுகின்றன. இதன்மூலம் அதிமுகவிற்குள் எந்த அளவுக்கு எஸ்.பி. வேலுமணியின் கை ஓங்கி இருக்கிறது என்பதும், அவர் எந்த அளவுக்கு எடப்பாடியை ஓவர்டேக் செய்து பா.ஜ.க. தயவை நம்பிஇருக்கிறார் என்பதும் தெளிவாகி இருக்கிறது என்ற பேச்சுகளும் எழுந்திருக்கின்றன.

A.D.M.K. - BJP What caused the breakdown?

இவ்வளவு புழுக்கத்துடன் நேற்று கூடிய மா.செ. கூட்டத்தில், அ.தி.மு.க. மா.செ.க்கள் பா.ஜ.க. கூட்டணி வேண்டாம், கைவிடவும் என வலியுறுத்தினர். அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணி முறிவு என அறிவிக்கப்பட்டது.

A.D.M.K. - BJP What caused the breakdown?

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, “தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக மாநிலத் தலைமை கடந்த ஓராண்டாக வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு, அதிமுகவின் மீதும், அண்ணாவையும், ஜெயலலிதாவையும் அவதூறாகப் பேசியும், எங்கள் கொள்கைகளை விமர்சித்தும் வருகிறது. பாஜக மாநிலத் தலைமை கடந்த ஆக. 20 அன்று மதுரையில் நடைபெற்ற அதிமுக எழுச்சி மாநாட்டை சிறுமைப்படுத்தியும், இ.பி.எஸ்.யும் தரக்குறைவாக விமர்சித்து வருகிறது. இது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பான ஓர் சூழ்நிலையைஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக பொதுச்செயலாளர் இ.பி.எஸ். தலைமையில் 25ம் தேதி கூடிய மா.செ. கூட்டத்தில் 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களின் எண்ணத்திற்கும், விருப்பத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அ.தி.மு.க. இன்று முதல் பா.ஜ.க. கூட்டணியிலிருந்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகி கொள்கிறது எனும் ஏகமனதான தீர்மானம் அறிவிக்கப்படுகிறது. 2024 தேர்தல் இ.பி.எஸ். தலைமையிலான அ.தி.மு.க. மற்ற கூட்டணி கட்சிகளுடன் இணைந்து சந்திக்கும்” என்றார்.

A.D.M.K. - BJP What caused the breakdown?

இதுதொடர்பாக கோவையில் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் இருந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, “நான் இது குறித்து பிறகு பேசுகிறேன். யாத்திரையின் போது அரசியல் பேசமாட்டேன். அ.தி.மு.க. ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. அது குறித்து கட்சி மேலிடம் பேசும்” என்றார்.

இந்த அறிவிப்புக்கு பிறகு அ.தி.மு.க.வினர், ‘நன்றி மீண்டும் வராதீர்கள்’ என பாஜகவுக்கு ஹாஷ் டாக் செய்து எக்ஸ் சமூகவலைத்தளத்தில் டிரண்ட் செய்தனர். அதேபோல், பா.ஜ.க.வினர், ‘வாழ்த்துகள் மீண்டும் வராதீர்கள்’ என அதிமுகவுக்கு ஹாஷ் டாக் செய்து டிரண்ட் செய்தனர்.

admk
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe