Skip to main content

அரசியல் கணக்கு! அமித்ஷா கொடுத்த பெரிய அடி..! நொந்துபோன குருமூர்த்தி..! 

dddd


மறுபடியும் அமித்ஷா தமிழகம் வருகிறார். ஒரு பத்திரிகையின் ஆண்டுவிழாவில் பங்கேற்கிறார். ரஜினிகாந்த்தை சந்திக்கிறார், மு.க. அழகிரியிடம் பேசுகிறார் என்று பரபர செய்திகள் வெளியாயின. வழக்கம்போல் ஆடிட்டர் குருமூர்த்தி இந்த செய்திகளை பரப்பிவந்தார்.

 

ஏற்கனவே தமிழகத்திற்கு அமித்ஷா வந்தபோது ‘அவர் ரஜினிகாந்த்தை சந்திக்கிறார்’ என குருமூர்த்தி அமித்ஷா தங்கியிருந்த லீலா பேலஸ் ஹோட்டலில் காத்திருந்தார். இரண்டரை மணி நேரம் நீடித்த அந்தக் காத்திருப்பின்போது ரஜினி அங்கே வந்து பா.ஜ.க.வில் இணையப்போகிறார்’என குருமூர்த்தி தரப்பிலிருந்து செய்திகள் கிளப்பப்பட, தமிழகத்தின் ஒட்டுமொத்த ஊடகங்களும் அங்கு குவிந்தன.

 

கடைசியில் ரஜினி அங்கு வரவில்லை. மறு நாள் ரஜினியுடன் அமித்ஷா வீடியோ காலில் பேசியதாக செய்திகள் வெளியாகின. அதே போல், அழகிரியும் அமித்ஷாவும் பேசுவார்கள் என்கிற செய்தியும் குருமூர்த்தி வகையறாக்களால் பரப்பப்பட்டது. அழகிரி அமித்ஷாவின் போனையே எடுக்கவில்லை. அவர் கொடைக்கானலுக்குச் சென்று ஓய்வெடுப்பதாக பின்னர் தகவல் வெளியானது. ஊடகங்கள் ‘அமித்ஷா வின் விசிட் தோல்வி’ என எழுத… அமித்ஷா அவர் கலந்துகொண்ட அரசியல் விழாவில் அ.தி.மு.க. தலைவர்களான எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.ஸையும் பா.ஜ.க.வுடன் கூட்டணி என அறிவிக்க வைத்தார். ஆனால் அதற்கு பா.ஜ.க. வின் பதில் என்ன என்பதை சொல்லாமலேயே கிளம்பினார். அந்த மேடையிலேயே ஜெ.வை எப்படி பவ்யமாக ஓ..பி.எஸ். கும்பிடுவாரோ, அதே பவ்யத்துடன் அமித்ஷாவை கும்பிட்டு, அ.தி.மு.க.வை வழிநடத்துவது அமித்ஷாதான் என்கிற தோற்றத்தையும் ஓ.பி.எஸ். மூலமாகவே காண்பிக்க வைத்துவிட்டு டெல்லி சென்றார்.

 

அமித்ஷா டெல்லி சென்ற பிறகு, திடீரென்று ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அதன் பின்பு ரஜினியாலேயே ‘நான் அரசியலுக்கு வரமாட்டேன்’ என்கிற அறிவிப்பாக வந்தது. அமித்ஷாவிடம் பேசாத அழகிரி, திடீரென்று ‘ஸ்டாலினை முதல்வராக்க விட மாட்டேன்’ என மதுரையில் சபதம் செய்தார்.

 

‘பா.ஜ.வுடன்தான் கூட்டணி’என ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவரும் அறிவித்த போதும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதை பா.ஜ.க.வின் தமிழகத் தலைவர்கள் ஏற்க மறுத்தனர். பா.ஜ.க.வின் மேலிடப் பொறுப்பாளர், கர்நாடக முன்னாள் அமைச்சர் ரவியிலிருந்து, மாநில துணைத்தலைவர் அண்ணாமலை வரை ‘எடப்பாடி முதலமைச்சர் வேட்பாளரா என்பதை பா.ஜ.க.வின் மேலிடம்தான் முடிவு செய்யும்’ என வாய்ப்பாடு ஒப்பிப்பதைப்போல் கூறிக்கொண்டே வந்தார்கள்.

 

இதற்கிடையே சசிகலா ஜன.27-ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வருகிறார். அவரை எடப்பாடியும் ஓ..பி.எஸ்.ஸும் அ.தி.மு.க.வில் இணைந்துகொள்ள அனுமதிப்பார்களா என்பதைப் பற்றியும் பா.ஜ.க.தான் முடிவு செய்யும் என அ.தி.மு.க.வினர் சொல்லி வந்தார்கள். அத்துடன், 14-ஆம் தேதி சென்னைக்கு வரும் அமித்ஷா தமிழகத்தில் பா.ஜ.க. இடம்பெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் பா.ஜ.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையே நிலவும் சண்டையை முடித்து வைப்பார். அத்துடன், பா.ஜ.க. கேட்கும் 38 சட்டமன்றத் தொகுதிகளில் 30-ஐ தர அ.தி.மு.க. சம்மதித்துவிட்டது. அதுபற்றியும் இறுதி முடிவெடுப்பார்.

 

கூட்டணியில் நீடிக்க பா.ம.க. 40 தொகுதிகளைக் கேட்கிறது. அது பற்றிய பேரம் அ.தி.மு.க.விற்கும் பா.ம.க.விற்கும் இடையே நடைபெறுகிறது. அதில் ஒரு செட்டில்மெண்ட் செய்வார். பா.ம.க.வின் கோரிக்கையான வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு என்பதிலும் ஒரு தீர்வை எட்டுவார். மேலும் தே.மு.தி.க.விற்கு 15 சட்டமன்றத் தொகுதிகள், வாசன் கட்சிக்கு 6 சட்டமன்றத் தொகுதிகள் என அ.தி.மு.க. கூட்டணியில் நிலவும் அனைத்துக் குழப்பங்களையும் தீர்த்து தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்தல் களத்தில் ஒற்றுமையாக இறங்க வைப்பார் என்று சொல்லப்பட்டது.

 

இத்தனை எதிர்பார்ப்புகளும் இருந்த நிலையில், திடீரென்று அமித்ஷா தனது தமிழக பயணத்தை கேன்சல் செய்துவிட்டார். 10, 14 தேதிகளில் மேற்குவங்கத்தில் கவனம் செலுத்துகிறார். தமிழகத் தேர்தலை விட பா.ஜ.க.விற்கு மேற்குவங்கத் தேர்தல்தான் முக்கியம் என்பதால் அமித்ஷா, அங்கு செல்கிறார். அவருக்குப் பதில் பொங்கல் சமயத்தில் தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பார்க்க அதிகம் ஆசைப்படும் பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா தமிழகத்திற்கு வருகிறார் என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள்.

 

அமித்ஷாவின் இந்த விசிட் கேன்சலானது குருமூர்த்திக்கு பெரிய அடியாக அமைந்துள்ளது. பத்திரிகை ஆண்டு விழாவைப் பயன்படுத்தி, அதில் ரஜினியை பேசவைத்து, அமித்ஷா முன்னிலையில் ரஜினியின் ஆன்மீக அரசியலுக்கு மீண்டும் புத்துயிர் ஊட்ட நினைத்த குருமூர்த்தி, இப்போது நொந்துபோனார்.

 

அமித்ஷா விசிட் கேன்சலானதும் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் புதிய குற்றவாளிகளை அமித்ஷாவின் உள்துறையின் கீழ் இயங்கும் சி.பி.ஐ. கைது செய்துள்ளது. அத்துடன் அ.தி.மு.க.வில் ஊழல் அமைச்சர்களான 12 பேர் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை பாய இருக்கின்றது. அத்துடன் சசிகலாவை எடப்பாடி ஏற்க மறுக்கிறார். இதெல்லாம் ஒரு முடிவுக்கு வராமல் அமித்ஷா தமிழகத்திற்கு வர விரும்பவில்லை என்கிறது மத்திய அரசு வட்டாரங்கள்.

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்