ops Photograph: (tvk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. நேற்று மத்திய அமைச்சரும் தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் சென்னைக்கு வருகை தந்திருந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோனை நடத்தினார். அப்போது அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி பட்டியல் ஒன்றைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. அந்த பட்டியலில் அதிமுக 170 இடங்கள், பாஜக 23 இடங்கள், பாமக 23 இடங்கள் மற்றவை (தேமுதிக 6 இடங்கள், அமமுக 6 இடங்கள், ஓ.பி.எஸ். 3 இடங்கள்) 18 இடங்கள்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. அமமுகவின் டி.டி.வி.தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோரிடம் பாஜகவே கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தலாம் ஆனால் மீண்டும் அவர்களை அதிமுகவில் சேர்த்துக் கொள்ள வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேநேரம் நேற்று ஒ.பன்னீர்செல்வம் தனது நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியிருந்தார். கூட்டத்தில் பேசிய பன்னீர்செல்வம், “அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தைப் படு பாதாளத்திலே தள்ளி வைத்து இன்றைக்கு அதிமுகவில் உள்ள அனைத்து தொண்டர்களும் வெம்பி வதங்கி என்ன செய்வது என்றே திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தைப் புகட்ட வேண்டும் என்பதுதான் இன்றைய வரலாறு. நெடுநேரமாக உங்களுடைய கருத்துக்களை உணர்வுகளை உணர்ச்சிகளை நீங்கள் அனைவரும் தெரிவித்திருக்கிறீர்கள்.
பல கூட்டங்களில் நாம் பல்வேறு பிரச்சனைகளைப் பேசி முடித்துவிட்டோம். இன்றைக்கு மக்கள் நம் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை'' எனப் பேசியிருந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு அதிமுகவில் இணைந்து விடலாம் என்ற ஓபிஎஸ்-இன் எண்ணம் தவிடுபொடியான நிலையில் ஓபிஎஸ் நடத்திய இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகளிடம் ஒரு படிவம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக திமுக கூட்டணியை நாடுவது அல்லது தவெக கூட்டணியை நாடுவது குறித்து கருத்து தெரிவிக்கும் வகையில் அந்த படிவம் இருந்துள்ளது. மொத்தமாக கலந்துகொண்ட 80 மாவட்டச் செயலாளர்களில் 72 பேர் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என பதிலளித்துள்ளனர்.
கலந்துகொண்ட மாநில நிர்வாகிகள் 60 பேரில் 55 பேர் தவெக கூட்டணிக்குச் செல்லலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். சிலர் அதிமுக அடையாளத்தை இழக்காமல் தவெக கூட்டணிக்கு செல்லலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். சில நிர்வாகிகள் தேர்தல் நேரத்தில் திமுகவுடன் கூட்டணி வைப்பது குறித்து பரிசீலிக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஆனால் வந்திருந்த நிர்வாகிகளில் 90 சதவிகிதம் பேர் தவெக கூட்டணியை தேர்வு செய்துள்ளனர். இதனால் 38 வருவாய் மாவட்டங்களை கணக்கில் கொண்டு 38 சீட்டுகளை தவெக கூட்டணியில் பெறலாம் என ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தவெக உடன் தொடங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேநேரம் தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன், ''என்டிஏ கூட்டணியில் அமமுகவிற்கு 6 தொகுதிகள் என்பது வதந்தி. தங்கள் வீட்டு பிள்ளைக்கு இன்னும் வரனே அமையவில்லை. அதற்குள் பேரக்குழந்தைகளுக்கு பெயர் வைத்து சென்றானாம் மடசாமி' என்று சொல்வார்கள். அதுபோல் உள்ளது. எங்கள் இயக்கம் அரசியல் சக்தியாக உள்ளது. இந்த தேர்தலில் அமமுகவை தவிர்த்துவிட்டு யாரும் வெற்றிபெற முடியாது' என தெரிவித்துள்ளார்.
Follow Us