/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3347.jpg)
தமிழகத்தில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை, கீழடி உள்ளிட்ட ஐந்து இடங்களில் நடக்கிற தொல்லியல் அகழாய்வை விட ஆதிச்சநல்லூரின் அகழாய்வுகளில் அதிசயங்களும், அரிய பொக்கிஷங்களும் கிடைத்திருப்பதால் தொல்லியல் ஆய்வு வல்லுநர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அதன் காரணமாகவே ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி வேகமெடுத்துள்ளன.
தூத்துக்குடி மாவட்டத்தின் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் 1900-லிருந்தே மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் அவைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவில்லை. அகழாய்வுப் பணி என்று வரும்போது அது சமயம் மட்டுமே, பணிகள் நடைபெறும். அடுத்த பணி எப்போது என்கிற விஷயமே கேள்வியாகி விடுவதால் ஆதிச்சநல்லூர் அடங்கியுள்ள விஷயங்கள் வெளிவராமல் முடங்கியபடியே இருந்தன. முந்தைய காலங்களில் பணிகள் தொடர்ந்து வேகமெடுத்திருக்குமேயானால் தற்போது கிடைத்த பழமையான அதிசயங்கள் 120 வருடங்களுக்கு முன்னமே வெளிப்பட்டிருக்கும் என்கிறார்கள் தொல்லியல் ஆர்வலர்கள்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1052.jpg)
கடந்த ஆண்டுகளில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பண்டைய தமிழர்களின் அதிசயத்தக்க ஆதாரங்கள், பழம்பொருட்களின் அடிப்படையாகக் கொண்டு தற்போதைய தி.மு.க.அரசு ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகள் தொய்வின்றி நடத்தப்பட வேண்டும் என பூரண ஒத்துழைப்பும் கொடுத்தது மட்டுமல்லாமல். தமிழக அரசின் தொடர் முயற்சியால், ஆதிச்சநல்லூரிலேயே உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும் என்ற ஏற்பாடுகள் எட்டு மாதங்களுக்கு முன்னேயேமேற்கொள்ளப்பட்டதால் தற்போது அகழாய்வுப் பணிகள் வேகமெடுத்துள்ளன.
1902ன் போது இந்திய தொல்லியல் துறையின் அப்போதைய இயக்குநரான அலெக்சாண்டர் ரியா என்கிற ஆங்கிலேயர் ஆதிச்சநல்லூரில் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டபோது பழமையான தங்கம், செப்பு பட்டயங்கள் மண்பாண்டங்கள் போன்ற பண்டைய கால தமிழர்களின் புழக்கத்திலிருந்தவைகிடைத்தன. பெரிய இடைவெளிக்குப் பின் 2004ல் மேற் கொள்ளப்பட்ட அகழாய்வில் ஒன்றிரண்டு எலும்புகளைக் கொண்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்தன.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-3_328.jpg)
இப்படி அகழாய்வில் பலவிதமான பொருட்கள் கிடைக்கவே 2004க்குப் பின்னர் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டதில், சூட்டு அடுப்பு, ஆயுதங்கள், இரும்பு ஆயுதங்களடங்கிய போர்க்கலன்கள், தமிழர்களின் சங்ககால வாழ்விடப்பகுதி சங்ககால நாணயங்கள், 30 செ.மீ அளவு கொண்ட தங்கத்தால் ஆன காதணிகள், மற்றும் வளையல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும், பண்டைய காலத்தின் 70 முதுமக்கள் தாழிகளும் அகழாய்வில் கிடைத்தன. அதோடு ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட தரைத்தளச்சாலை, சுண்ணாம்பு மற்றும் செங்கற்களால் கட்டப்பட்ட சுவரும் வெளிப்பட்டு அதிசயிக்க வைத்தது. அப்போதைய காலத்தில் மரணமடைந்தவர்களை பெரிய தாழிகளில் வைத்துப் புதைக்கும் பழக்கமிருந்தது. அது போன்ற 70 முதுமக்கள் தாழிகள் கிடைத்தாலும், அதில் ஒன்றில் கூட மனிதர்களின் எலும்புக் கூடுகள் முழுவதுமாக இல்லாமல் ஒன்றிரண்டு துண்டு எலும்புகள் மட்டுமே இருந்திருக்கின்றன. மேலும் பழமையான தங்கம், வெண்கலம், செப்பு பட்டயங்கள் உள்ளிட்ட இவைகள் இந்திய தொல்லியல் துறையின் இயக்குநர் தியாக சத்தியமூர்த்தி மற்றும் தமிழக அகழாய்வு இயக்குநர் பாஸ்கர் ஆகியோர் இணைந்த குழுக்களின் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன.
இதனிடையே ஆதிச்சநல்லூரின் அகழாய்வில் தொடர்ந்து கிடைக்கும் அரிய பொருட்கள், மற்றும் அகழாய்வுப் பணிகளை உன்னிப்பாகக் கவனித்து வந்த தூத்துக்குடி மாவட்டக் ஆட்சியரான செந்தில்ராஜ், அகழாவுப் பணிகளை மேலும் விரிவாக்கம் செய்யும் வகையில் தற்போது அகழாய்வில் ஈடுபட்டு வருகிற திருச்சி மண்டல அகழாய்வுப் பணி இயக்குநரான அருண்ராஜ் தலைமையிலான குழுவிற்கு வசதியாக தேவைப்படுகிற இடங்களை அனுமதித்திருக்கிறார். அதையடுத்து ஆட்சியர் அனுமதியளித்த இடங்களில் கடந்த ஒரு மாதமாக ஆய்வினை மேற் கொண்டிருக்கின்றனர் அருண்ராஜ் குழுவினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-4_91.jpg)
ஏற்கனவே இவரது அகழாய்வில் பல்வேறு வகையிலான பண்டைய தமிழர்களின் உறைவிடப்பகுதி உடைமைகள் கிடைத்தாலும் நான்கு நாட்களுக்கு முன்பு புதிய பகுதிகளில் 120 வருடத்திற்கு முந்தைய தங்கத்தாலான நெற்றிப்பட்டயம், மற்றும் காதணிகள், வளையல்கள் கிடைத்துள்ளன. தொடர்ந்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டதில், துண்டு துண்டான ஒன்றிரண்டு எலும்புகளைக் கொண்ட முதுமக்கள் தாழிகள் மற்றும் உமியும் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பண்டைய தமிழர்கள் ஆரோக்கியமான அரிசி உணவையே உட்கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிய வந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.
மேலும் தற்போது, அகழாய்வின் போது இரண்டு பெரிய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் மனிதனின் முழு எலும்புக் கூடுகள் இருந்திருக்கின்றன. மண்டை ஒடு, வாய் மற்றும் பற்கள், உடலின் பிறபாகங்களின் முழுமையான எலும்புக் கூடுகள் இரண்டு முதுமக்கள் தாழிகளிலும் தற்போது கிடைத்துள்ளன. பண்டைய கால மக்களின் உடல் தன்மையை உணர்த்துவதாக இருப்பது பற்றித் தெரிவிப்பவர்களே முன்பு எடுக்கப்பட்ட, தாழிகளில் கிடைத்த துண்டு எலும்புகளைக் கொண்டு மனிதர்களின் பூரணத்தன்மையை அறிய முடியவில்லை. பல கால முயற்சிக்குப் பலனாக உடலின் முழு பாகத்தின் எலும்புத்துண்டுகள் தற்போது கிடைத்தது அதிசயம். பல விஷயங்களை அது உள்ளடக்கியுள்ளது. ஆதிச்சநல்லூரின் உறைவிட மகத்துவம் பற்றியும் தெரியவரும் என்கின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-5_59.jpg)
இது குறித்து அகழாய்வுப் பணிகளைப் பல வருடங்களாக உடனிருந்து கண்காணிப்பவரும், ஆய்வில் தொடர்புடைய வரும், தொல்லியல் ஆய்வு ஆர்வலரும் எழுத்தாளருமான முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசிய போது; ‘அகழாய்வின் போது இது வரையிலும் 70க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன. அவைகள் அனைத்துமே மண்டையோடுகளில்லாத துண்டு எலும்புகளே கிடைத்தன. அதனைக் கொண்டு மனிதர்கள் பற்றிய ஆய்வில் முன்னேற முடியவில்லை. 3200 வருடங்களுக்கு முந்தைய இந்த முதுமக்கள் தாழியின் மூலம், மரணமடைந்தவர்களை பண்டைத் தமிழர்கள், பாதுகாப்பின் பொருட்டு தாழிகளில் அடைத்துப் புதைத்துள்ளனர். என்பது மட்டும் தெரியவந்தது.
தற்போது கிடைத்த இரண்டு தாழிகளிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மனித உடலின் முழு எலும்புக்கூடுகள் கிடைத்துள்ளன. துண்டு எலும்புகளைக் கொண்ட தாழிகளை இரண்டாம் நிலை பரியல் (அடக்கம்) என்கிறார்கள் தொல்லியல் ஆய்வாளர்கள். அதாவது இறந்தவர்களை முதலில் எரித்து விட்டுப் பின்பு அவர்களை தாழிகளில் வைத்துப் புதைத்திருக்கிறார்கள். அதனால் தான் துண்டு எலும்புகள் காணப்பட்டன. எனவேதான் இந்த முறை இரண்டாம் நிலை பரியல் எனப்படுகிறது.
ஆனால் தற்போதைய இரண்டு தாழிகளில் முழு எலும்புக் கூடுகள். 3200 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்கள் ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான காற்று, சுற்றுப்புற மாசு இல்லாத வாழ்க்கை காரணமாக 100 வயது கடந்தும் வாழ்ந்திருக்கிறார்கள். வயது ஏற ஏற அவர்களின் முதுமை காரணமாக முதுகு கூன் விழுந்து வளைந்து விடும். அவர்களால் வேலைகள் செய்யமுடியாது முடங்கி விடுவார்கள். அசையக் கூட முடியாத நிலை ஏற்பட்டு விடும் அவர்கள் உடம்பின் அவயங்கள் சீராக இயங்கும். ஆனால் உயிர் பிரியாமலிருக்கும். அத்தனை எளிதில் சாகமாட்டார்கள். அந்த நிலைப்பாடு வருகிற போது அது போன்ற வயதான முதுமக்களை, முன்னோர்கள் உயிருடன் தாழியில் வைத்துப் புதைத்து விடும் ஆச்சரியமான பழக்கம் இருந்திருக்கிறது. இது முதலாம் நிலை பரியல். இப்படிப் புதைக்கப்பட்ட மனிதர்களின் எலும்புக் கூடுகள் தான் இவைகள் என்கிற கான்சப்ட தொல்லியல் ஆய்வாளர்கள் மத்தியிலிருக்கிறது. இதன் மூலம் அது உறுதியாகிறது.
கண்டு பிடிக்கப்பட்ட மண்டையோடு பற்கள், கை, கால், முதுகு, பிற எலும்புகள் அனைத்தும் டி.என்.ஏ. பகுப்பாய்விற்காக மதுரை காமராஜர், பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், கிடைத்த எலும்பு கூடுகள் ஆணா, பெண்ணா, எத்தனை வயதிருக்கும் என்பன போன்ற நமது முன்னோர்கள் பற்றிய அரிய விஷயங்கள் வெளிவரும். சந்தேகங்கள் தீரும். ஆனா ஒன்று மட்டும் நிச்சயம் 3200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நம் தமிழ் வம்சத்தவர்கள் சாதாரண சராசரியாக 100 வயது கடந்தும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது மட்டும் உறுதியாக உணர முடிகிறது’ என்றார் புருவங்களை உயர்த்தியபடி.
கற்பனையையும் தாண்டிய ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் உள்ளடக்கியிருக்கிறது 3200 ஆண்டு முந்தைய கால பழமையான ஆதிச்சநல்லூரின் நமது தமிழர்களின் வாழ்க்கை முறைகள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)