Skip to main content

தமிழ்நாட்டில் பெரும் திட்டத்தை அரங்கேற்ற முனையும் அதானி? 

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

Is Adani planning to stage a big project in Tamil Nadu?

 

அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம், அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த பிப்ரவரி மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இது இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பில் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (SEBI) விசாரணை மேற்கொண்டு வருகிறது. 

 

இந்த அதிர்வலைகள் அடங்குவதற்குள்ளாக அதானி நிறுவனத்தின் மீது மேலும் ஒரு புதிய மோசடி குற்றச்சாட்டை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழல் தடுப்பு (Organised Crime and Corruption Reporting Project) என்ற அமைப்பு முன்வைத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், மொரிஷியஸில் இருந்து போலி நிறுவனங்கள் மூலம் இருவர் முறைகேடாக சுமார் 430 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகைக்கு அதானி நிறுவனத்தின் பங்குகளை வாங்கியும் விற்றும் உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது. அதானி குடும்பத்துடன் நீண்ட காலமாகத் தொடர்பிலிருந்து வரும் நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானி பங்குகளை வெளிநாட்டு நிறுவனம் மூலம் வாங்கி மொரிஷியஸ் போன்ற நாடுகளில் முறைகேடாக விற்றதாகவும், அதன் மூலம் அதானி குழுமத்திற்கு அதிகளவில் வருவாய் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. நாசர் அலி சபான் அலி, சாங் சுங் லிங் ஆகிய இருவரும் அதானியின் மூத்த சகோதரர் வினோத் அதானியின் நிறுவனங்களில் இயக்குநர்களாகவும், பங்குதாரர்களாகவும் இருந்துள்ளனர். மேலும், இந்த மோசடி அதானி குழுமத்தின் இ-மெயில் தகவல்கள் மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து கண்டறியப்பட்டதாக ஓசிசிஆர்பி(OCCRP) அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அதானி தரப்பில் இருந்து முழுமையாக மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில், அதானி குழுமம் பற்றி தமிழ்நாடு மின்வாரியத் தரப்பில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்படுகிறது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, பிரபல தொழில் நிறுவனமான அதானி, இப்போது தமிழகத்தில் ஒரு பெரும் திட்டத்தை அரங்கேற்ற முனைகிறதாம். தனக்குச் சொந்தமான எண்ணூர் துறைமுகத்தை விரிவுபடுத்த எண்ணும் அதானி குழுமம், அந்தப் பகுதியில் இருக்கும் எண்ணூர் அனல் மின் நிலையத்தின் சில பகுதிகளை அகற்றி, இடத்தை ஆக்கிரமிக்க நினைப்பதாகச் சொல்லப்படுகிறது.  இதற்காக 800 கோடி ரூபாய் திட்டம் ஒன்றுடன் தமிழக அரசை அது தீவிரமாக அணுகி வருகிறதாம். இதற்காக அமைச்சர் உதயநிதியையும் பா.ஜ.க. தலைவர்கள் மூலம் அது தொடர்புகொண்டும் எதுவும் பலிக்கவில்லையாம். தி.மு.க. அரசு, அதானியின் இந்தத் திட்டத்திற்குத் தனது இசைவைத் தெரிவிக்காமல் பிடிவாதமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.