Skip to main content

நம்ம ஷூட்டிங் போலாம் வாங்க... விஜயை மிரட்டும் பாஜக... விஜயால் பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!

நடிகர் விஜய்யை ஒருவழி பண்ணியே தீருவது என்ற ஒரே அஜெண்டாவுடன் களம் இறங்கியுள்ளது மோடி சர்க்கார். வருமான வரி சோதனையின் போது நெய்வேலிக்கே சென்று விஜய்யை அழைத்து பனையூர் பண்ணை வீட்டில் வைத்து கடந்த 05-ஆம் தேதி இரவிலிருந்து 06-ஆம் தேதி மாலை வரை பாடாய்ப்படுத்தினார்கள் ஐ.டி.அதிகாரிகள்.

சினிமா கந்து வட்டி பிரபலம் மதுரை அன்புச் செழியனின் சென்னை, மதுரை அலுவலகங்களில் நடந்த ரெய்டுகளில் மட்டும் 77 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் 300 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வருமான வரித்துறை.

 

vijayஆனால் விஜய் வீட்டில் என்ன கைப்பற்றப்பட்டது, "பிகில்'’ படத்திற்கு சம்பளம் கொடுத்த கணக்கில் திகட்டல் இருப்பதாகச் சொல்லி தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் வீட்டில் கைப்பற்றப்பட்ட தொகை எவ்வளவு என்பதை மட்டும் வ.வ.துறை சொல்லவேயில்லை. ஆனால் விஜய் வீட்டில் சில டாகுமெண்டுகளைக் கைப்பற்றியதாக செய்தியை மட்டும் கசியவிட்டார்கள்.

நடப்பது நடக்கட்டும், நாம ஷூட்டிங்கிற்கு கிளம்புவோம் என்ற முடிவுடன், கடந்த 06-ஆம் தேதி இரவே நெய்வேலிக்குச் சென்றுவிட்டார் விஜய். 07-ஆம் தேதி விஜய்-விஜய் சேதுபதியுடன் மோதும் சண்டைக் காட்சிகள் படமாகின. இதற்கிடையே விஜய்யை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்து, இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் பேட்டி கொடுத்தார். இதற்கு உடனடி ரீஆக்ஷனாக அர்ஜுன் சம்பத்தைக் கண்டித்து திருச்சி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் போஸ்டர் ஒட்டினார்கள்.

 

vijayஇந்நிலையில், நெய்வேலி நிலக்கரி சுரங்கம் பாதுகாக்கப்பட்ட பகுதி, அதனால் அங்கே ஷூட்டிங் நடத்த அனுமதிக்கக் கூடாது என கோஷமிட்டமாறு "மாஸ்டர்' ஷூட்டிங் ஸ்பாட்டில் பத்து பேர் கொண்ட பா.ஜ.க. படை ரகளையில் இறங்கியது. "விஜய் பட ஷூட்டிங்கை எதிர்க்கவில்லை, நெய்வேலி சுரங்கத்தை பாதுகாக்க வேண்டும் என்றுதான் எங்கள் கட்சியினர் போராடுகிறார்கள்'' என ஒரு தினுசாக அறிக்கை விட்டனர் பொன்.ராதா கிருஷ்ணனும் இல.கணேசனும். பா.ஜ.க.வினருக்கு எதிராக விஜய் ரசிகர்களும் களத்தில் குதித்ததால் பரபரப்பானது. அர்ஜுன் சம்பத்திற்கு எதிராக போராட அனுமதி கேட்ட ரசிகர்களை அமைதிப்படுத்தினார் விஜய்.

 


ஆனால் 08, 09 ஆகிய இருநாட்களும் நாலைந்து பா.ஜ.க.வினர் நெய்வேலி சுரங்கத்தின் முன்பாக ஒன்று கூடி விஜய்க்கு எதிராக கோஷ மிட்டனர். இந்த இருநாட்களும் விஜய் ரசிகர் களும் ஆயிரக்கணக்கில் குவிந்துவிட்டனர். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பையும் பா.ஜ.க.வினரின் அக்கப் போரையும் கவனித்த விஜய், 09-ஆம் தேதி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வெளியே தயாராக நிற்க வைக்கப்பட்டிருந்த வேனில் ஏறி, ரசி கர்களை நோக்கி கையசைத்தும் ஒட்டுமொத்த மாக செல்ஃபி எடுத்தும் குஷிப்படுத்தினார்.

"சர்க்கார்' நாயகன் விஜய்யை மோடி சர்க்கார் மிரட்டுவதன் பின்னணியில் ரஜினி இருப்பது உண்மையா? அல்லது வேறு எதுவும் காரணமா?'' என ரஜினி-கமலை வைத்து படங்கள் தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் கேட்டோம்.

 

 

 

vijayஇப்ப உள்ள நிலவரம் வேற மாதிரி இருக்கு. ரஜினி படங்கள் ரிலீஸ் ஆகும் போது, பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாகாம பார்த்துக்குவாரு. அதுக்குத் தோதாக வினியோகஸ்தர்களிடமும் தியேட்டர் ஓனர்களிடமும் பேசிருவாரு. ஆனால் "2.0'வும் இப்ப ரிலீசான "தர்பார்' படமும் எதிர்பார்த்த மாதிரி இல்லை. ஆனால் விஜய்யின் சமீபத்திய படங்கள் எல்லாமே வசூல் ரீதியாக நல்ல லாபம் பார்த்தன. ரஜினி அளவுக்கு மக்களிடம் ஓஹோவென மாஸ் இல்லாவிட்டாலும் குழந்தைகளிடமும் பெண்களிடமும் இளைஞர் களிடமும் விஜய்க்கு மாஸ் உள்ளது. விஜய்யின் இந்த மாஸ், ரஜினியின் அரசியல் பயணத்திற்கு சின்ன சிக்கலை ஏற்படுத்தினால் கூட, தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் தங்களின் ஆசைக்கு ஆப்பு வைத்துவிடும் என பி.ஜே.பி.யின் அலறலால்தான் விஜய்க்கு இந்த மிரட்டல்''’’என்கிறார்.

இன்னொரு தயாரிப்பாளரோ, "சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் பரவலாக 150-க்கும் மேற்பட்ட விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்றிருப்பதையும் கவனத்தில் கொண்டுள்ளார் ரஜினி'' என்கிறார்.

ஆனால் பா.ஜ.க.தரப்போ, "மாஸ்டர் தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ, விஜய்க்கு சித்தப்பா உறவு முறை. சம்பளம் என்ற பெயரில் கணக்கு எழுதி, கிறிஸ்தவ தொண்டு நிறுவனங்களுக்கும் மதமாற்றத்திற்கும் பயன்படுத்தியதாக நம்பக தகவல் வந்ததால்தான் இந்த ரெய்டு. அவரு ஜோசப் விஜய், இவரு சேவியர் பிரிட்டோ, இது போதாதா எங்களுக்கு'' என்கிறார்கள்.

இத்தனை நெருக்கடிகளுக்கு நடுவே "மாஸ்டர்' ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

- தாவீது ராஜ்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்