Advertisment

உதயகுமார் ஓவர் ஆக்ட்..! எட்டு மாதத்தில் அதிமுக படுதோல்வியை சந்திக்கும்..! வாகை சந்திரசேகர் பதிலடி..!

vagai chandrasekar

Advertisment

வேளச்சேரி திமுக எம்எல்ஏவும், நடிகருமான வாகை சந்திரசேகர் நக்கீரன் இணையதளத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் அனைத்து வியூகங்களும் தோல்வியடையும் என்றும், அதிமுக மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்றும் கூறினார்.

மூன்று நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. மக்கள் பிரச்சனைகள் குறித்து விவாதிக்க மூன்று நாள் போதுமானதா?

சபாநாயகர் தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கலந்து கொண்டார். குறைந்தது 15 நாள் சட்டப்பேரவைக் கூட்டம் நடத்த வேண்டும் என்று எவ்வளவோ போராடி பார்த்தார். அப்போதுதான் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியும் என்று கேட்டதற்கு அவர்கள் அடம் பிடித்து மூன்றே நாளில் முடித்துவிட்டார்கள். முதல் நாள் இரங்கல் கூட்டத்தோடு முடிந்துவிட்டது. இரண்டாவது நாள் பெரியதாக எந்த விவாதத்தையும் அவர்கள் எடுத்துக்கொள்ளவில்லை.

Advertisment

மிகவும் திட்டமிட்டே இதனை செய்ததுபோல் இருக்கிறது. கடந்த ஆறு மாதத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகள் நடத்திருக்கிறது. கரோனா விவகாரத்தில் ஏகப்பட்ட தவறுகள் நடந்திருக்கிறது. அதனை பட்டியலிடலாம் என திமுக இருந்தது. நீட் தேர்வு விவகாரத்தில் நிறைய தற்கொலைகள், அமைச்சர்கள் மீதான ஊழல் பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை திமுக எடுத்து வைக்கப்போகிறது என்பதாலும், திமுகவின் கேள்விகளுக்கு பயந்தும் மூன்றே நாளில் திட்டமிட்டு முடித்துவிட்டார்கள். விருந்தும் மருந்தும் மூன்று நாள் என பழமொழி சொல்வார்கள். இவர்கள் சட்டமன்றம் மூன்று நாள்தான் என்று புதிதாக சொல்லி முடித்துவிட்டார்கள்.

சட்டப்பேரவையில் நீட் விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆவேசமாக பேசியிருக்கிறாரே?

ரொம்ப ஆவேசமாக பேசியதாலேயே பிரச்சனையை மூடி வைத்துவிடலாம் என நினைக்கிறார். முதல்வர் பேசிய ஆவேசத்தைவிட இந்த ஆட்சியைப் பார்த்து மக்கள் அதைவிட ஆவேசத்தோட தயாராக இருக்கிறார்கள். அந்த மக்களோட ஆவேசத்தின் முன்பு முதல்வரின் ஆவேசம் தோற்றுப்போகும். வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் யாருடைய ஆவேசம் வெற்றி பெறும் என்று தெரிய வரும்,மக்கள் தயாராக இருக்கிறார்கள்.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்த அதிமுகவைவிட பாஜக அதிக வியூகம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறதே?

பாஜக தனியாக வியூகம் வகுத்தாலும், அதிமுக தனியாக வியூகம் வகுத்தாலும், இரண்டு கட்சிகளும் சேர்ந்து வியூகம் வகுத்தாலும், இன்னும் எல்லோரும் சேர்ந்து திட்டமிட்டாலும் 2021 சட்டமன்ற தேர்தலில் இவர்களின் அனைத்து வியூகங்களும் தோல்வியில்தான் முடிவடையும். இனிமேல்தான் இவர்கள் வியூகம் அமைத்து திட்டமிடப்போகிறார்கள். ஆனால் திமுக மக்களோடு மக்களாக இணைந்து தயாராக இருக்கிறோம். மக்களின் உணர்வுகளோடு இணைந்து இருக்கிறோம். தேர்தல் களம் பதில் சொல்லும், வெற்றி திமுகவுக்குத்தான்.

எட்டு மாதத்தில் திமுக ஆட்சி என பேசுகிறார்கள். திமுக பேசும் கதை, வசனம் மக்களிடம் எடுபடாது என அமைச்சர் உதயகுமார் பேசியிருக்கிறார்...

எங்க தலைவர் கலைஞரோட கதை, வசனம் எடுபட்டதால்தான் 50 ஆண்டுகாலம் கழித்தும் இன்றும் மனோகரா, பராசக்தி வசனத்தை பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதுமட்டுமல்ல கதை, வசனத்தின் மூலமாக தமிழர்களுடைய பெருமையையும், பகுத்தறிவு சிந்தனைகளையும், அரசியல் சிந்தனைகளையும் மக்களுக்கு எடுத்துச் சென்றார்.

ஆனால் உதயகுமார் இப்போது திரைக்கதை, வசனம், நடிப்பு எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து மக்கள் மத்தியில் காட்டுகிறார். இவரைப்போல் நாங்கள் ஓவர் ஆக்ட் பண்ணவில்லை. யதார்த்த வாழ்க்கையை அவர்கள் கண்முன் காட்டும் கண்ணாடியைப்போலத்தான் திமுக இருக்கிறது. எட்டு மாதத்தில் திமுக வெற்றி பெறுவதுமட்டுமல்ல, எட்டு மாதத்தில் திமுகவின் மாபெரும் வெற்றியையும் பார்க்கப்போகிறீர்கள். அதிமுகவின் மிகப்பெரிய தோல்வியையும் பார்க்கப்போகிறீர்கள்.

எட்டு மாதத்தில் திமுக மாபெரும் வெற்றியடைவதோடு, அதிமுகமிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று வாகை சந்திரசேகர் மிக உறுதியாக கூறியிருக்கிறார். அதிமுகவின் நிர்வாகிகள் கூட்டம் இன்று மாலை நடக்க உள்ளது. இதில் 2021 சட்டமன்றத் தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. தேர்தல் களம் சூடு பிடித்தள்ள நிலையில் மக்களின் தீர்ப்பே இறுதியானது என்பதால் பொறுத்திருப்போம்.

MLA actor chandrasekar vagai chandrasekar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe