Skip to main content

"இவன் யார் தெரியுமா?” - ரஜினியிடம் என்னைக் காட்டி கேட்ட சிவாஜி சார்! நினைவுகளைப் பகிரும் நடிகர் ரமேஷ் கண்ணா...

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

sivaji ganesan

 

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த தனது நினைவுகளைப் பகிர்கிறார் நடிகர் ரமேஷ் கண்ணா...

 

"சிவாஜி சார்... மிகப் பெரிய மனிதர். நான் சினிமாவுக்கு வரும் முன்பு, வீட்டில் பொய் சொல்லிவிட்டு, பள்ளிக்கூடத்தில் இருந்து பாதியில் வெளியே வந்து என சாகசங்கள் செய்து அவரது படங்களை திரையரங்குகளில் பார்ப்பேன். சினிமாவுக்கு வந்த பின்னருமே கூட எனக்கெல்லாம் அவரைப் பார்ப்பது பெரிய விஷயமாகத்தான் இருந்தது. கே.எஸ்.ரவிக்குமார் சார் ஆஃபிஸ்ல நாங்க டிஸ்கஸ் பண்ணும்போது, வேலை முடிஞ்சதும் கிளம்பிவிட மாட்டோம். உட்கார்ந்து சிவாஜி பாடல்கள், எம்.ஜி.ஆர் பாடல்கள் எல்லாம் பெரிய ஸ்க்ரீன்ல போட்டுப் பார்ப்போம். அதுதான் எங்கள் ரெஃப்ரெஷ்மெண்ட், எங்கள் உத்வேகம். அப்படி ஒரு பெரிய மனிதரான சிவாஜி சார் கூடயும் பழகும் வாய்ப்பைக் கொடுத்தது சினிமா.

 

1998ஆம் வருஷம், 'படையப்பா' ஷூட்டிங்... கர்நாடகால மாண்டியா தாண்டி மேல்கோட்டை கோவில்ல படப்பிடிப்பு. அந்த ஏரியாவை சுத்தி பல நாட்கள் எடுத்தோம். சிவாஜி சார், ரஜினி சார்லாம் மைசூர்ல தங்கியிருக்காங்க. நாங்க அஸிஸ்டண்ட்ஸ், ப்ரொடக்ஷன் டீம் ஆளுங்களெல்லாம் வேற எடத்துல தங்கியிருந்தோம். தினமும் காலையில நடிகர்களை அழைத்துப் போகும் பொறுப்பு எங்களோடதுதானே? முதல் நாள், காலையில் ஆறு மணிக்கு ஷூட்டிங். அங்க போகணும்னா அஞ்சு மணிக்கே கிளம்பணும். 'அவர் எங்க அஞ்சு மணிக்கு எந்திரிப்பார், எப்படியும் லேட் ஆகும்'னு நினைச்சுக்கிட்டே நானும் தேனப்பனும் அஞ்சே முக்கால் போல சிவாஜி சார் தங்கியிருந்த லலிதா பேலஸ்க்கு போனோம். அங்க போனா, பேலஸ் வாசல்ல விக், மேக்-அப் எல்லாம் போட்டு பேலஸ் ஓனர் மாதிரி சிவாஜி சார் முன்னாடி ரெடியா நிக்குறாரு.

 

எனக்கு அவரைப் பார்த்ததும் பக்குன்னு ஆகிடுச்சு. நான் ட்ரைவர்கிட்ட, 'வண்டியை நிறுத்தாம முன்னாடி தள்ளி போ'னு சொல்லிட்டு, தேனப்பனைப் போய் சிவாஜி சாரை கூட்டிட்டு வர சொன்னேன். கொஞ்சம் தள்ளி நின்னு பாக்குறேன். தேனப்பன் அவர்கிட்ட போனதும், அந்த சிம்மக் குரலில் கரகரன்னு கேக்குறார், "ஏன் லேட்டு?". இத்தனைக்கும் லேட் எல்லாம் ஆகல. நாங்க மேல்கோட்டை போய் சேருவதுக்கும் ஷூட்டிங்கில் மற்ற விஷயங்கள் தயாராவதுக்கும் சரியா இருக்கும். இருந்தாலும் அதை ஈஸியா எடுக்காம கேட்டார். இப்போ நினைக்கும்போதும் அவருடைய அந்த சின்சியாரிட்டி ஆச்சரியப்படவைக்குது. ஒன்னு உறுதியா புரியுது, திறமை எவ்வளவு இருந்தாலும் அர்ப்பணிப்பும் சேர்ந்துதான் நம் உயரத்தைத் தீர்மானிக்கிறது. நீங்களே உங்க திறமையையும் அர்ப்பணிப்பையும் கூட்டி, கழிச்சு, பெருக்கி, வகுத்துப் பார்த்து உங்க உயரத்தை கணக்குப் பண்ணிக்கலாம், வாழ்க்கையின் உயரத்தை...

 

சிவாஜி சாரை ஒரு காரில் ஏத்திக்கிட்டு, நாங்க இன்னொரு காரில் போனோம். மேல்கோட்டைக்கு போய்ட்டோம். அங்க கோவிலுக்கு போக படிப்படியா ஏறி போகணும். அவரது உயரத்துக்கு என்னையெல்லாம் அப்போது அவருக்கு தெரிய வாய்ப்பே இல்லைன்னு நான் எதுவும் பேசாம வந்தேன். சிவாஜி சாரை முன்னாடி விட்டுட்டு நாங்க பின்னாடி போனோம். ஒரு படி ஏறுவாரு, நின்னு திரும்பி என்னைப் பார்த்து முறைப்பார். 'என்னடா இது, லேட்டா வந்தது இவ்வளவு பெரிய குற்றமா, விட மாட்டேங்குறாரே'னு நான் தலையைக் குனிந்துகொள்வேன். கொஞ்ச தூரம் ஏறுவார், திரும்ப நின்று ஒரு முறை முறைப்பார். நான் முடிவு பண்ணிட்டேன், 'ஸ்பாட்டுக்குப் போனதுக்கு அப்புறம் இவர் கண்லயே படக்கூடாதுடா சாமி'ன்னு. இப்படியே ரெண்டு மூணு முறைப்புகளுக்குப் பிறகு மேலே போயிட்டோம். போனதும் சிவாஜி சார் கே.எஸ்.ரவிக்குமார்கிட்ட போனார். 'போச்சுடா.. லேட்டா வந்ததை அங்கேயும் சொல்லி பிரச்சனை பண்ணப் போறாரோ'னு நினைச்சேன். எனக்கு லைட்டா கோபமும் வந்தது. 'என்னடா இவர் இப்படி பண்ணுறார்'னு தோணுச்சு.

 

ரவிக்குமார்கிட்ட என்னைக் காட்டி கேட்டார், "இந்தப் பையன் யாரு?" என்று. நான் எது வந்தாலும் பாத்துக்கலாம்னு நினைச்சு நின்றேன். லலிதா பேலஸ்ல எப்படி என் எதிர்பார்ப்பை உடைச்சாரோ அதே மாதிரி இங்கேயும் உடைக்கப் போறார்னு நான் நினைக்கல. "நம்ம கோ-டைரக்டர்தான் சார். என்ன ஆச்சு?"னு ரவிக்குமார் கேட்டார். "இவன்தான முத்துராமன் பையன் படத்துல நடிச்சவன்?"ன்னு கேட்டார். எனக்கு அதுவரைக்கும் அடிவயிற்றில் இருந்த சூடெல்லாம் அப்படியே ஜில்லுன்னு மாறுச்சு. "ரொம்ப சூப்பரா காமெடி பண்ணியிருக்கான்"னு அவர் சொல்ல, எனக்கு சந்தோஷம் தாங்க முடியல. யார் யார் வீட்டு வாசலில் காத்திருந்தேன், எத்தனை பேர்கிட்ட அவமானப்பட்டிருப்பேன், அடுத்தடுத்து படம் ஆரம்பிச்சு ஆரம்பிச்சு டிராப் ஆயிருக்கு, இது எல்லாமே இந்த ஒரு தருணத்துக்காகத்தானோனு தோணுச்சு. சிவாஜி சார் என்னை கவனிச்சிருக்கார். எனக்கு கஷ்டம் இருந்தப்போ கடவுள் மேல கோபப்பட்டுருக்கேன், இந்த கிஃப்டுக்காகத்தான் என்னை அந்த அடி அடிச்சுருக்காருன்னு நினைச்சுக்கிட்டேன். 

 

சிவாஜி சார் அதோட நிக்கலை. ரஜினி சார் வந்ததும் அவர்கிட்டயும், "இவன் யார் தெரியுமா?ன்னு கேட்டார். "தெரியுமே, நம்ம ரமேஷ்கண்ணா"னு சொன்னார் அவர். "முத்துராமன் பையன் கூட இவன் நடிச்ச படம் பாரு, சூப்பரா நடிச்சிருக்கான்"னு சொன்னார். ரஜினி சார் என்கிட்டே சொன்னார், "யோவ்...முப்பது வருஷமா நடிக்கிறேன்யா நான். என்னைப் பத்தி இவர் யார்கிட்டயும் சொன்னதே இல்லய்யா. உன் டைம் ஒர்க்-அவுட் ஆகிடுச்சுய்யா"னு. அடுத்து மணிவண்ணன் சார் வந்தார். அவர்கிட்டயும் சிவாஜி சார் என்னைப் பற்றி சொன்னார். மணிவண்ணன் சார் என்னிடம் சொன்னார், "டேய் என்னடா சிவாஜி சார் உனக்கு பி.ஆர்.ஓ (PRO - மக்கள் தொடர்பு அலுவலர்) வேலை பாக்குறார். ரொம்பப் பெரிய விஷயம்டா இதெல்லாம்" என்றார். உண்மைதான், எனக்கு அதெல்லாம் அப்போ ரொம்பப் பெரிய விஷயம். இப்போவும் எனக்கு அது ரொம்பப் பெரிய விஷயம்".

 

 

Next Story

“சிவாஜி கணேசனின் புகழ் தரணியும் தமிழும் உள்ளவரை நிலைத்திருக்கும்” - முதல்வர் புகழாரம்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Shivaji Ganesan's fame will last as long as Tharani and Tamil exist says CM

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்த தினம் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாகச் சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இன்று காலை முதல் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது சிவாஜி கணேசனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

இந்நிலையில் இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், “கலைஞரின் கனல் தெறிக்கும் வசனங்களை அனல் பறக்கத் தமது சிம்மக் குரலால் பேசி, ரசிக நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்த நடிகர் திலகம் அவர்களின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ், தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Next Story

சிவாஜி கணேசனின் 96 வது பிறந்தநாள்; மலர்தூவி முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96 ஆவது பிறந்தநாள் இன்று. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னை அடையாறு பகுதியில் உள்ள நடிகர் சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் நடிகர் சிவாஜியின் படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

 

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளனர். இதில் சிவாஜி கணேசனின் குடும்பத்தார், உறவினர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களும் கலந்து கொண்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.