Skip to main content

இப்பத்தான் ஜனநாயகமே வந்திருக்கு... - காமராஜர் சொன்னது எப்போது தெரியுமா?

kamarajar

 

நடிகர் ராஜேஷ் பரந்த வாசிப்பும், பழமையான தகவல்களும் நிறைந்த பொக்கிஷமாகத் திகழ்பவர். மேடைகளிலும், யூ-ட்யூப் சேனல்களிலும் தமிழர்களின் பண்பாடு, சினிமா, அரசியல் வரலாறு, ஜோதிடம் போன்ற பல தளங்களில் செறிவான உரைகளை ஆற்றி வருகிறார். அவர் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் குறித்து ஒரு மேடையில் ஆற்றிய உரையிலிருந்து...

 

நாட்கள் ஆக ஆக காமராஜரின் புகழ் அதிகரிக்கிறது என்று நிறைய பேர் இன்று சொல்கின்றனர். நான் அப்படி நினைக்கவில்லை. நாட்கள் ஆக ஆகத்தான் நமக்கு அனுபவம் வருகிறது. மற்ற தலைவர்களை பார்க்கிறோம். அதனால் காமராஜரைப் போற்றுகிறோம். 9ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது பெரிய விசயமில்லை. அதற்கு இணையாக 9 ஆண்டுகள் சிறையிலும் இருந்திருக்கிறார். நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதுதான் முதலில் காமராஜரைப் பார்த்தேன். எங்கள் தலைமுறையில் உள்ள நாங்கள் எல்லாம் இன்று படித்திருக்கிறோம் என்றால் அதற்கு காமராஜர்தான் காரணம். அந்நன்றியை என்றும் நாங்கள் மறக்க மாட்டோம். காமராஜருக்கும் நேருவுக்கும் இடையேயான முதல் சந்திப்பே சுவாரசியமானது. சத்தியமூர்த்தி அவர்களின் வீட்டில் காமராஜர் அசந்து குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்திருக்கிறார். அங்கு வந்த நேரு "யாரு இவர்? இப்படி குறட்டை விட்டுக்கிட்டு இருக்கார்" என்று கேட்க சத்தியமூர்த்தி அதற்கு, "இவர் பெயர் காமராஜ். இரவு முழுக்க போஸ்டர் ஒட்டிட்டு வந்து அசந்து தூங்குகிறார்" என்று சொல்லியிருக்கிறார். "இவரைப்போல ஒரு 100 பேர் இந்தியாவில் இருந்தால் வெள்ளைக்காரன் உடனே நாட்டைவிட்டு ஓடிவிடுவான்" என்றும் சொல்லியிருக்கிறார். காமராஜருக்கும் நேருவுக்கும் இடையேயான பிணைப்பு இப்படித்தான் தொடங்கியது.

 

சென்னையில் இருந்து திருச்சிக்கு ஒரு முறை காரில் செல்கிறார். அப்போது தன்னுடைய உதவியாளர்களை அழைத்து சாலையில் செல்கிற இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கனரக வாகனங்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுங்கள் என ஒரு வேலையை ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கிறார். திரும்பி வரும் போதும் அதே போல் கணக்கெடுக்கச்  சொல்லுகிறார்.   சென்னை வந்தவுடன் கணக்கெடுத்த புள்ளி விவரம் அவரிடம் கொடுக்கப்படுகிறது. உடனே அதிகாரிகளை அழைத்து "திருச்சி இங்கிருந்து எவ்வளவு தூரம்? வழியில் எத்தனை பெட்ரோல் பங்க்குகள் உள்ளன?" என கேட்கிறார். அதிகாரிகள் விவரங்கள் அளித்தவுடன் "இத்தனை வண்டிகள் ஒரு நாள் போய் வருகின்றன. அப்படி என்றால் இன்னும் எத்தனை பெட்ரோல் பங்க்குகள் தேவைப்படும் என கணக்கு போட்டுச் சொல்லுங்கள்" என உத்தரவிடுகிறார். தேவையான பெட்ரோல் பங்க்குகளின் எண்ணிக்கை விவரம் கொடுக்கப்பட்ட உடனே அத்தனை பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கும் அனுமதி கொடுத்து உத்தரவிடுகிறார். ஒரு பயணத்தின் போது கூட மக்களைப் பற்றி எப்படி சிந்தித்திருக்கிறார் பாருங்கள். இன்றைய தலைவர்கள் பயணம் போனால் அவர்கள் வழியில் உள்ள இடங்களை பார்த்து எப்படி சிந்திப்பார்கள் என்று நீங்களே யோசித்துப் பாருங்கள்.

 

rajesh

 

அரசியல் தலைவர்களில் ஈடு இணையில்லாதவர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள். காமராஜரை பார்க்கும் வாய்ப்பு எனக்கு சீனிவாசன் அவர்கள் வீட்டுக் கல்யாணத்தின் போது கிடைத்தது. எந்த சீனிவாசன் தன்னை எதிர்த்து நின்று வெற்றி பெற்றாரோ அவர் வீட்டுக் கல்யாணத்திற்கு வருகிறார். கலைஞர்தான் அப்போதைய முதலமைச்சர். காமராஜர் உள்ளே வரும் போது அனைவரும் எழுந்து நின்று அவரை வரவேற்றனர். எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி எதிரிக்கட்சியாக இருந்தாலும் அவர்கள் வீட்டுத் திருமணத்திலிருந்து இறப்பு வரை எல்லாவற்றிலும் கலந்து கொள்வார். அந்த அளவிற்கு எல்லாரையும் நேசிக்கக் கூடியவர் பெருந்தலைவர்.

 

திமுக ஆட்சிக்கு வந்து ஆறுமாதம் ஆகியிருந்தது. விநாயகம் என்பவர் காமராஜரிடம் ஒரு முறை "திமுகவினர் செய்த முறைகேடுகளை பட்டியலிட்டு வைத்துள்ளேன். சட்டமன்றத்தில் நாளை கேள்வி எழுப்பப் போகிறேன்" என்றார். "நாளை சட்டமன்றத்திற்கு போகும் முன் அதைக் கொண்டு வா" என்றார் காமராஜர். மறுநாள் ஆவலுடன் அவர் அதைக் கொண்டுவர காமராஜர் வாங்கி அதனைத் தீயிட்டுக் கொளுத்தி விடுகிறார். விநாயகம் அதிர்ச்சி ஆகிறார். "அவனே இப்பத்தான் ஆட்சிக்கு வந்துருக்கான்... ஒரு வருஷம் ரெண்டு வருஷம் விடுங்குறேன்.. அதுக்குள்ள என்ன குற்றம் சாட்டப் போற" என்றார். இந்தப் பெருந்தன்மை யாருக்கு வரும்?

 

சீனிவாசன் வெற்றி அறிவிக்கப்பட்டவுடன் அனைவரும் அழுது கொண்டே வந்து காமராஜரிடம் "சின்னப் பையன் கிட்ட தோத்துட்டோமேயா" என்றனர். காமராஜர் சிரித்தவாறே "இப்பத்தான் ஜனநாயகமே வந்திருக்கு.." என்று எளிமையாக அதைக் கடந்து சென்றார். யாராவது தொழில் அதிபர்கள் அவரை சந்திக்க வேண்டும் என்று அனுமதி கேட்டால் அதற்காக தனியாக நேரம் எல்லாம் ஒதுக்க மாட்டார். 'நாளைக்கு நான் பாண்டியன் எக்ஸ்பிரஸ்ல போறேன். ரயில்ல வந்துருங்க பேசிக்கலாம்' என்பார். பயணிக்கும் ரயிலிலேயே சந்திப்பு நடக்கும். சந்திப்பு முடிந்தவுடன் தொழில் அதிபர்கள் வழியிலேயே இறங்கிக்கொள்வார்கள். காமராஜர் தன்னுடைய பயணத்தைத் தொடர்வார். இது போல பல சந்திப்புகளை பயணத்தின் போது ரயிலிலேயே நடத்தியிருக்கிறார். நேரத்திட்டமிடல் என்ற ஒன்றை நாம் காமராஜரிடம் இருந்து கற்றுக்கொள்ளவேண்டும். இப்படி செயலாற்ற, படித்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணமும் எல்லோருடைய கஷ்டங்களையும் உணருகின்ற நல்ல மனது இருந்தாலே போதும்".

 

 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்