ADVERTISEMENT

பிக்பாக்கெட்காரனின் நல்ல மனசு! நடிகர் ராஜேஷ் பகிரும் சுவாரசிய சம்பவம்!

06:29 PM Oct 03, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

நடிகர் ராஜேஷ், பல்வேறு துறைகளில், அகண்ட வாசிப்பும் ஆழ்ந்த அறிவும் உள்ளவர். அவர் நம்மிடம் தொடர்ந்து பல வரலாற்று நிகழ்வுகளையும், பிரபலங்களுடனான தனது நினைவுகளையும் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் பகிர்ந்துள்ள சுவாரசிய செய்தி ஒன்று...

"மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் பள்ளி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினார்கள். நான் வேலை பார்த்த பள்ளியின் ஆசிரியர்கள் சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தனர். நான் அனுமதி வாங்கிச் சென்று அவர்களுக்குத் தேவையானதெல்லாம் வாங்கிக் கொடுப்பேன். அப்போது சிறையில் இருந்த ஜெய்சிங் என்ற ஆசிரியர் சிறை நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி பழைய வழக்குகளை எல்லாம் படித்து பார்த்திருக்கிறார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இருந்து இப்போதுவரை உள்ள வழக்குகளைப் படித்திருக்கிறார். அதில் இருந்து ஒரு சுவாரசியமான 'பிக்பாக்கெட்' வழக்குப் பற்றி சொன்னார். கேட்பதற்கே சுவாரசியமாக இருந்தது.

1913-லிருந்து 1917 வரை வெல்லிங்டன் பிரபு பம்பாயில் கவர்னராக இருந்திருக்கிறார். 1917-லிருந்து 1923 வரை சென்னையில் பணிபுரிந்தார். அவர் பம்பாயில் வேலை பார்க்கும்போது இங்கிருந்த ஐ.ஜி.யிடம் 'பம்பாயில் உள்ள பிக்பாக்கெட் திருடர்கள் எல்லாம் திறமையானவர்களாக இருக்கிறார்கள். பிரான்ஸ், இத்தாலியில் இருப்பவர்களை விட பெரிய ஆட்களாக இருக்கிறார்கள்' என வியந்து கூறியிருக்கிறார். உடனே சென்னையில் இருந்த ஐஜி 'இங்குள்ள பிக்பாக்கெட் திருடர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியவில்லை. ஒரு முறை இங்கு வந்து பாருங்கள்... யார் திறமையானவர்கள் என்று உங்களுக்குத் தெரியும்' என்று கூறியிருக்கிறார். அவரும் நான் பொறுப்பு மாறி வரும் போது பார்க்கிறேன் என்றார். பின் அவர் ஒரு நாள் இங்கு புதிதாக பதவி ஏற்க வருகிறார்.

இங்கிருந்த ஐஜி ஒரு திட்டம் போடுகிறார். நேராக சிறைக்குச் சென்று சிறந்த பிக்பாக்கெட் திருடனை கூட்டி வாருங்கள் என அதிகாரியிடம் கேட்டிருக்கிறார். அவரும் ஒருவரை அழைத்து வந்திருக்கிறார். இந்த ஐஜி அவரிடம் புதிதாக வரும் கவர்னரிடம் பிக்பாக்கெட் அடிக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அந்தத் திருடனுக்கு கைகால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. பின் ஐஜி எல்லாவற்றையும் விளக்கிச் சொல்கிறார். அவரும் சரி என்கிறார். கவர்னர் வரும் போது ஓடிப்போய் அவர் காலில் விழுகிறார். கவர்னர் எழுப்பி 'என்ன வேண்டும்?' எனக் கேட்க இந்த திருடன் என்னை ஆசீர்வாதம் செய்யுங்கள் எனக் கூறிவிட்டு, 'மணி எத்தனை ஐயா?' எனக் கேட்டிருக்கிறான்.

அந்தக் காலத்தில் கையில் வாட்ச் கட்ட மாட்டார்கள். கோட் உடன் இணைத்து சட்டைக்குள் வைத்து இருப்பார்கள். அவர் அதை எடுத்து மணி பார்க்க முயற்சிக்க, கடிகாரத்தைக் காணவில்லை. அவர் எங்கேயோ அதைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்கையில் இவர் உடனே எடுத்து "இதுவா..." என்றிருக்கிறார். கவர்னருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ஒரு நூறு ரூபாயை பரிசாக கொடுத்துவிட்டு "நீ பெரிய திறமைக்காரன்.." எனப் பாராட்டிவிட்டுச் சென்றாராம். அந்தக் காலத்தில் நூறு ரூபாய் என்றால் ஒரு பங்களாவே வாங்கிவிடலாம்.

இன்னொரு சுவாரசியமான சம்பவம் உள்ளது. ஒரு பிக்பாக்கெட் திருடனை வக்கீல் ஒருவர் ஜாமீனில் எடுத்துள்ளார். அவர் பணம் கேட்டவுடன் கையில் பணம் இல்லை.. வீட்டிற்கு வாருங்கள் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவரும் சரி என்று இவருடன் பேருந்தில் சென்றிருக்கிறார். பாதி வழியிலேயே "சார்... இறங்குங்கள்" என்று சொல்லியிருக்கிறார்... இவருக்கு ஆச்சரியம்.. 'உன் வீடு வேறு ஏரியாவில் இருப்பதாகத் தானே சொன்ன...' எனக் கேட்க, அவன் 'சார் இறங்குங்க' என மீண்டும் சொல்லியிருக்கிறான். இருவரும் இறங்கி விடுகின்றனர். அவருக்கான பணத்தைக் கொடுத்துள்ளான். 'கையில் பணம் இல்லை என்று சொன்னாயே? இப்போது ஏது?' என்று கேட்க, தான் வருகிற வழியில் ஒருவனிடம் பிக்பாக்கெட் அடித்ததைக் கூறியிருக்கிறான்.

அதே போல் பிக்பாக்கெட் அடிப்பவர்கள் சிலர் எவ்வளவு நேர்மையாகக் கூட இருப்பார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். என்னுடைய உறவினர் வீட்டிற்கு ஒருவர் வந்தார். வருகிற வழியில் அவர் பையை யாரோ திருடிவிட்டனர். அதில் பத்திரம் எல்லாம் இருந்திருக்கிறது. அவர் அழுக ஆரம்பித்துவிட்டார். 'திரும்பி வந்துவிடும்' என்று அவருக்கு ஆறுதல் கூறிவிட்டு அருகில் உள்ள காவல் நிலையத்தில் சென்று புகார் கொடுத்தோம். அதே போல் அந்தப் பத்திரம் அவருக்குத் திருப்பிக் கிடைத்துவிட்டது. பிக்பாக்கெட் அடிப்பவர்கள் அதில் பணம் ஏதும் இல்லையென்றால் உடனே அதைக் கவரில் போட்டு தபால் நிலையத்தில் போட்டு விடுவார்களாம். முகவரி இல்லாமல் வந்தால் அவர்கள் அதைக் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். இப்படித்தான் பலருடைய உடைமைகள் திரும்பிக் கிடைத்துள்ளன.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT