Skip to main content

அரசியலில் இருந்து முழுமையாக விலகியது ஏன்? - நெப்போலியன் சொன்ன காரணம்

Published on 08/07/2020 | Edited on 08/07/2020
napoleon

 

திமுக சார்பில் போட்டியிட்டு தமிழக சட்டமன்ற உறுப்பினராகவும் மத்திய இணையமைச்சராகவும் இருந்து பின்னர் பாஜகவில் இணைந்த நெப்போலியன் சமீப காலமாக அரசியலைவிட்டு விலகி இருப்பதற்கான காரணத்தை நக்கீரனுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நெப்போலியன் அவ்வப்போது இந்தியா வந்து சில படங்களில் மட்டும் நடித்துவிட்டுச் செல்கிறார், ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

 

நெப்போலியன் தனது கல்லூரிக் காலத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டவர் என்பது பலருக்கும் தெரியாது. கல்லூரியில் படிப்பை முடித்தபோதே அரசியலில் திமுக மீது கொண்ட ஈடுபாட்டால் அப்போதே திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். 2001இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரானார் நெப்போலியன். 2006 சட்டமன்றத் தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினாலும் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் வெற்றிபெற்று மக்களவை உறுப்பினராகத் தேர்வானார். அப்போதைய அமைச்சரவையில் மத்திய சமூகநீதித்துறை இணையமைச்சராகவும் செயல்பட்டார். அதன்பிறகு அரசியலில் அதிகம் தென்படாமல் இருந்தவர், கடந்த 2014ஆம் ஆண்டு திடீரென்று திமுகவில் இருந்து விலகி பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

 

தான் அரசியலில் இருந்து விலகியது பற்றிக் குறிப்பிட்ட நெப்போலியன், "மத்திய அமைச்சரா இருக்குறப்போ நடிக்கக்கூடாதுனு விதி இருந்துச்சு, அதனால அப்போ நடிக்கலை. பிறகு கொஞ்சம் நடிக்க ஆரம்பிச்சேன். என் பசங்க அமெரிக்காவில படிக்கிறாங்க. அவங்களை கவனிச்சுக்கறதுக்காக அமெரிக்கா வந்தப்பறம் பசங்க என்ன நடிக்கவும் போகக்கூடாது அரசியலுக்கும் போகக்கூடாதுனு சொல்லிட்டாங்க" என்றவர் தொடர்ந்து, "இப்போ தான் நடிக்க அனுமதி கொடுத்திருக்காங்க" என்று சிரித்துக்கொண்டே கூறினார். "நீங்க அரசியலுக்குப் போனா அங்கயே இருந்துடுவீங்க; நாங்க இங்க ஒத்தையா இருக்கனும்னு சொன்னதால அரசியல்ல இருந்து ஒதுங்கிட்டேன்" என்று தெரிவித்தார். மேலும், “போதும்... ஒரு மனிதன் அரசியலில் என்னவெல்லாம் ஆசைப்பட முடியும்? ஒரு எம்.எல்.ஏவாகலாம், எம்.பி ஆகலாம் மிஞ்சிப் போனா மந்திரி ஆகலாம்னு ஆசைப்படலாம். தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மூனு வாய்ப்புமே கிடைச்சிருச்சு. இது போதும். இனி பிள்ளைகளுக்காக வாழ்வோம்” என்று கூறினார்.

 

நெப்போலியனுக்கு தனுஷ் மற்றும் குணால் என்று இரண்டு மகன்கள். மூத்த மகன் தனுஷிற்கு தசைவளக் குறைபாட்டு நோய் இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்து தற்போது அமெரிக்காவில் நலமுடன் இருக்கிறார். அதே குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தனது அறக்கட்டளை மூலம் மருத்துவ உதவிகள் செய்து வருகிறார் நெப்போலியன்.

 

 

Next Story

"சட்டமன்றத்துல துப்பாக்கி வேணுமான்னு கேட்டாங்க, நான் அருவா பார்ட்டின்னு சொல்லிட்டேன்" - நெப்போலியன் ஜாலி பேட்டி 

Published on 02/07/2020 | Edited on 03/07/2020
actor napoleon

 

நெப்போலியன்... உலக அளவில் இந்தப் பெயரை சொன்னால், வேறு நினைவுகள் வரும். தமிழ்நாட்டில் இந்தப் பெயரை சொன்னால் நினைவுக்கு வருவது நெடுநெடு உயரம், முரட்டு மீசை, வீரம், கிராமத்துப் பேச்சு ஆகியவைதான். நடிகர் நெப்போலியனுக்கு அடையாளமானவை இவை. அப்படி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இந்த சீவலப்பேரி பாண்டி இன்று அமெரிக்காவில் ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார். விரைவில் OTT ரிலீசாக வெளிவர இருக்கும் Devil's Night: Dawn of the Nain Rouge படம் குறித்தும் மேலும் பல விஷயங்கள் குறித்தும் அவரிடம் பேசினோம். அப்போது, பழைய நினைவுகளையும் பகிர்ந்துகொண்டார். அதில் ஒரு பகுதி...

 

"என்னதான் அமெரிக்கா, ஹாலிவுட்னு வந்தாலும் நம்ம எப்பவும் பழைய நெப்போலியன்தான். அதுதான் நம்ம வாழ்க்கைமுறை. 2001ல முதல் முதல்ல எம்.எல்.ஏவாகி சட்டமன்றத்துக்குப் போனேன். முதல் மாச சம்பளம் வாங்க கையெழுத்து போட போனப்ப 'சார், நீங்க கன் வாங்கிக்கலையா?'னு கேட்டாங்க. எனக்கு சரியா கேக்கல. 'என்னது பன் தர்ராங்களா?'ன்னு கேட்டேன். 'பன் இல்ல சார், கன், துப்பாக்கி'ன்னு சொன்னாங்க. எம்.எல்.ஏக்கள், தங்கள் பாதுகாப்புக்காக துப்பாக்கி வாங்கிக்கொள்ளலாம் என்று சொன்னார்கள். வெளியே மூனு லட்ச ரூபாய்க்கு கிடைக்கும் துப்பாக்கி அங்க ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும்னு சொன்னாங்க. 'சரி, கொடுங்க'ன்னேன். 'லைசன்ஸ் காட்டுங்க'ன்னு கேட்டாங்க. 'நான் எங்கேங்க லைசன்ஸ் வச்சுருக்கேன்? நமக்கு எதுக்குங்க துப்பாக்கி லைசன்ஸ்? நம்மல்லாம் அருவா பார்ட்டிங்க. ஊர்ல எதுன்னாலும் அருவா எடுத்து பழக்கப்பட்டவங்க' என்று சொல்லி துப்பாக்கி வாங்காம வந்தேன்.

 

இப்போ அமெரிக்காவில் இருப்பதால நண்பர் டெல் கணேசன் மூலமா இந்த வாய்ப்பு வந்தனால ஹாலிவுட் படம் நடிக்கிறோமே தவிர நம்ம எப்போவுமே மண் மணம் மாறாத ஆளுதான். எப்பவும் சீவலப்பேரி பாண்டி, எட்டுப்பட்டி ராசாதான் நம்ம கேரக்டர்."

 

 

Next Story

‘தந்தத்தில் செய்யப்பட்ட மாவீரன் நெப்போலியனின் செஸ் போர்டு'!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

யாருக்காச்சும் பிறந்தநாள் பரிசு கொடுக்கனும்னு இருந்தா பொசுக்குனு எதையாச்சும் வாங்கிப்போய் கொடுக்குறதுதான் பலருக்கு வழக்கமா இருக்கும்.
 

napoleon



ஆனால், பரிசு கொடுக்கிறதுக்கு முன்னாடி, அவருக்கு என்னா பிடிக்கும்? அந்த பரிசை அவர் பத்திரப்படுத்துவாரா? அந்த பரிசால் அவருக்கு எந்த விதத்திலேனும் பயன் இருக்குமா? என்றெல்லாம் யோசித்து பரிசு வழங்கும் குணம் ஒரு சிலருக்கே இருக்கும். அப்படிப்பட்ட சாமர்த்தியமான நண்பர்களில் ஒருவர்தான் ஜேம்ஸ் மெக்ஹென்றி. இவர் தனது நண்பரான ஜார்ஜ் வான்டெர்பில்ட்டின் 21 ஆவது பிறந்தநாளுக்கு கொடுத்த பரிசு விலை மதிப்பில்லாதது. 1883 ஆம் ஆண்டு நடந்தது இது.

ரயில் ரோடு பைனான்சியரான மெக்ஹென்றி தனது நண்பருக்கு கொடுத்த பரிசு என்ன தெரியுமா? மாவீரன் நெப்போலியன் கடைசி நாட்களில் பயன்படுத்திய செஸ்போர்டும் டேபிளும்.

இந்த செஸ்போர்டுக்கு ஒரு கதை உண்டு.

1815 ஆம் ஆண்டு நெப்போலியனை இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகள் கூட்டணி அமைத்து எதிர்த்தன. வாட்டர்லூ என்ற இடத்தில் மிகப்பெரிய யுத்தம் நடைபெற்றது. அந்த யுத்தத்தில் நெப்போலியன் தோல்வியடைந்தார். அதைத்தொடர்ந்து தென்மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா கடற்கரையிலிருந்து சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள செயின்ட் ஹெலனா தீவில் அவர் சிறைவைக்கப்பட்டார். அந்தத் தீவு எரிமலைகளும், அடர்ந்த வனங்களும் நிறைந்தது. அங்குதான் நெப்போலியன் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடற்கரையை ஒட்டிய பகுதியில் தனது குடியிருப்பில் நெப்போலியனின் பெரும்பகுதியான பொழுதுபோக்கு செஸ் விளையாடுவதுதான்.
 

napoleon



அவர் விளையாடிய செஸ்போர்டு ஒரு டேபிளில் ஒட்டப்பட்டிருந்தது. வெள்ளை நிறத்திலும், சிவப்பு நிறத்திலும் தந்தத்தால் செய்யப்பட்ட காய்களை அவர் பயன்படுத்தினார். நெப்போலியனின் அனைத்துப் போர் வியூகங்களுக்கும் இந்த செஸ் விளையாட்டுதான் முக்கிய காரணமாக இருந்தது என்று வரலாற்று அறிஞர்கள் கூறுவது வழக்கம்.

புத்தகங்களைப் படிப்பது, தனது வாழ்க்கைக் குறிப்புகளை சொல்லி எழுதச் செய்வது ஆகியவற்றுடன் செஸ் விளையாடுவதை முக்கிய பொழுதுபோக்காக கொண்டிருந்த நெப்போலியன் கடுமையான வயிற்றுப் புற்றுநோய் காரணமாக 1821 ஆம் ஆண்டு இறந்தார். இறப்பதற்கு முன், தனது உடலை பிரேத பரிசோதனை செய்து, நோய்க்கான காரணத்தை அறிய வேண்டும் என்று நெப்போலியன் கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய வேண்டுகோள்படி, பிரேதபரிசோதனை செய்யப்பட்டு பதப்படுத்தப்பட்டது. அப்போது, அவருடைய இதயத்தை தனியாக எடுத்து ஆல்ஹகால் நிரப்பிய ஒரு குடுவையில் பத்திரப்படுத்தி, அவருடைய செஸ் டேபிள் மீது வைத்தார்கள். பின்னர் அவருடைய உடல் பாரீஸ் கொண்டு செல்லப்பட்டபோது, அவருடைய இதயம் உடலுக்குள் வைக்கப்பட்டது.
 

napoleon


பிரேதப்பரிசோதனை செய்யப்பட்டபோது உடனிருந்த அண்ட்ரூ டார்லிங் என்பவர் நெப்போலியனின் பொருட்கள் ஏலம் விடப்பட்டபோது செஸ் டேபிளை ஏலம் எடுத்தார். அப்போது ஏலம் விடப்பட்ட நெப்போலியனின் பொருட்கள் பின்னொரு நாளில் ஹாலண்ட் ஹவுஸ் என்ற அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டன.

மெக்ஹென்றியின் நண்பரான ஜார்ஜுக்கு நெப்போலியன் பயன்படுத்திய பொருட்களை சேகரிப்பது பொழுதுபோக்கு. அவரிடம் நெப்போலியன் பயன்படுத்திய 162 பொருட்கள் இருந்தன. இது மெக்ஹென்றிக்கு தெரியும்.

இந்நிலையில்தான், ஹாலண்ட் ஹவுஸ் மீயூசியத்திற்கு செல்லும் வாய்ப்பு மெக்ஹென்றிக்கு கிடைத்தது. ஏற்கெனவே அந்த மியூசியம் பற்றி கேள்விப்பட்டிருந்த மெக்ஹென்றி, அங்கு நெப்போலியன் பயன்படுத்திய செஸ் டேபிள் இருப்பதை பார்த்தார். அதை தனது நண்பன் ஜார்ஜுக்காக வாங்கிக் கொடுத்தார்.