Skip to main content

கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து

Published on 16/12/2017 | Edited on 16/12/2017
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து சொல்ல ஆள் எதற்கு? நாஞ்சில் சம்பத் கேள்வி! 

டிசம்பர் 21 ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். தேர்தல் நாள் நெருக்கிவிட்டதால் ஆர்.கே.நகரில் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில் டிடிவி தினகரன் தரப்பை சேர்ந்த நாஞ்சில் சம்பத்தை தொடர்புகொண்டோம். இதோ அவருடைய பேட்டி உங்கள் பார்வைக்கு...

டிடிவி தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

பிரஷர் குக்கர் டெபாசிட் வாங்காது என ஜெயக்குமார் கூறியிருக்கிறாரே?

பேராசிரியர் ராஜநாயகம் கருத்து கணிப்பில் 35.8 சதவிகிதம் டிடிவி தினகரன் முதல் இடத்தில் இருக்கிறார். 29.8 சதவிகிதம் திமுக இருக்கிறது என்று கருத்து கணிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. ஆகவே உண்மையான போட்டி எங்களுக்கும், திமுகவுக்கும்தானே தவிர, ஆர்.கே.நகருக்கும் எடப்பாடி, ஒ.பி.எஸ். கும்பலுக்கும் சம்மந்தமில்லை.

கட்சியில் தினகரன் அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது. இரட்டை இலை சின்னத்தை மீட்பேன் என்கிறார். அதிமுக ஓட்டுகளை பிரிக்க நினைக்கிறார். அதற்காக திமுகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளார். ஆட்சியை கலைக்க திமுகவுக்கு துணை போகிறார் என எடப்பாடி பழனிசாமி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கிறாரே?

அடிப்படை உறுப்பினர் இல்லை என்று சொல்லுகிற இவருக்காகத்தான் கடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இவர்களெல்லாம் வாக்கு கேட்டார்கள். அப்போது இவர் அடிப்படை உறுப்பினர் இல்லை என்ற விவரம் இந்த தற்குறிகளுக்கு தெரியாதா? அடிப்படை உறுப்பினர் இல்லாத டிடிவி தினகரன்தான் இவர்களுடைய அடிப்படையை தகர்க்கப்போகிறார். திமுகவோடு கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. 



ஆர்.கே.நகரில் குக்கர் விநியோகம் அமோகமாக உள்ளது என்றும், ஆளும் தரப்பும், டிடிவி தரப்பும் போட்டிப்போட்டுக்கொண்டு பணம் விநியோகம்  செய்கிறார்கள் என்றும் செய்திகள் வெளியாகிறதே?

இந்த குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வேண்டியது நான் கிடையாது. தேர்தல் ஆணையம்தான். தேர்தல் ஆணையம் அதனை கண்டுபிடிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இந்த குற்றச்சாட்டை சொல்வது யார்?

ஆளும் கட்சியினர் சொல்கிறார்கள். மற்ற வேட்பாளர்களும் சொல்கிறார்கள். பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி உள்ளதே?

ஆளும் கட்சி தரப்பில் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். திருவெற்றியூரில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் பணம் விநியோகம் செய்யும்போது திமுக தொண்டர்களும், டிடிவி தினகரன் ஆதரவாளர்களும் முற்றுகையிட்டடார்கள். தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது. மணிகண்டன் மீது வழக்குக் கூட பதிவு செய்யவில்லையே. மணலியில் ஒரு அமைச்சர் ரூபாய் கொடுப்பதற்கு கல்யாண மண்டபத்தில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக நாளிதழில் செய்திகள் வெளியாகி இருக்கிறது. தேர்தல் ஆணையம் எங்கே?

அளும் அதிமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்த நிலையில் அதிமுக சார்பில் கருத்து சொல்ல யாரும் நியமிக்கப்படவில்லை என்று அதிமுக சார்பில் செய்தி வெளியிடப்பட்டுள்ளதே?

கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து சொல்றதுக்கு ஆள் எதற்கு வேணும். அடிமைகளுக்கு ஏதுங்க கருத்து?

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்